இந்திய இலங்கை அரசுகள் இணைந்து முன்னெடுக்கும் கூட்டு பொருளாதார நடவடிக்கையில் இந்த சம்பூர் அனல் மின்நிலையம்தான் மிகப் பெரியது என்று கொழும்புக்கான இந்தியத் தூதர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உடன்படிக்கையின் மூலம் இருநாட்டு ஒத்துழைப்புகள் இதுவரை இல்லாத ஒரு உச்சத்தை எட்டியுள்ளது என்று இந்தியா கூறுகிறது.
இலங்கை அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காவது ஈழப்போர் மூதூர் பகுதியிலேயே 2006 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. அதன்போது சம்பூர் பகுதிதான் இலங்கை அரச படைகளால் முதலாவதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்தப் பகுதியை இலங்கை அரசு கைப்பற்றிய பின்னர் அது உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
ஓர் அனல்மின் நிலைய ஏற்பாட்டில் வெளியேற்றப்பட்டது தான் திருகோணமலை மாவட்ட சம்பூர் கிராமமாகும்.இது திருகோணலை விரிகுடாவின் முகட்டுப் புள்ளியாக கேந்திர முக்கியத்துவத்தை உடையது.இக்கிராமம் பிரித்தானியா ஆட்சிக்காலத்தில் இருந்தே 300 வருடங்களுக்கும் மேலாக வரலாற்றைக் கொண்ட கிராமமாகும்.2009ல் யுத்தம் முடிவுக்கு வந்தும் சம்பூர் கிராம தமிழ், முஸ்லீம் மக்கள் தம் கிராமத்துக்குள் செல்லமுடியாது முட்கம்பி வேலிகளால் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை தலைமைச் செயலகம் சம்பூரிலேயே அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இறுதியாக சண்டை உருவாகியபோது 2006 ஏப்ரல் மாதம் சம்பூர் முக்கிய போர்க்களமாகமாறியது. விடுதலைப்புலிகள் பின்வாங்க இக்கிராமம் உயர்பாதுகாப்பு வலயம் எனப் பிரகடணப்படுத்தப்பட்டு இலங்கை கடற்படை நிலைகொண்டுள்ளது.
2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த போதும் சம்பூர்க்கிராமம் உயர்பாதுகாப்பு மற்றும் அரசு வலயமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.நெடுங்காலமாக “இந்திய தேசிய அனல்மின் நிலையத்தடன்” அனல்மின் நிலையம் அமைப்பதற்கு இக்கிராமம் தெரிவாகியுள்ளதென இலங்கை அரசாங்கம் அறிவிக்கின்ற பொழுதும் இது வரைகாலமும் அதற்கான எவ்விதமான செயற்பாடுகளும் ஆரம்பித்ததாக தெரியவரவில்லை.
சம்பூர்க்கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 850க்கும் மேலான குடும்பங்கள் கொண்ட மக்கள் 10 வருடங்களுக்கு மேலாகியும் மீள குடியமர்த்தப்படாமல் 4 அகதி முகாம்களில் முடக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் மீள தம் பூர்வீக மண்ணில் குடியமர அரசாங்கமே தடையாக உள்ளது.
சம்பூர்க்கிராமத்தை அரசாங்கத்தின் வளர்ச்சி கொள்கையின் அடையாளமாக மாற்ற முடிவு செய்துள்ள அரசாங்கம் மக்களைப்பற்றி எந்த விதமான அக்கறையினையும் கொண்டதாக தெரியவில்லை.அரசாங்கத்தால் உருவாக்கப்படும் இலங்கைக்கிழக்குக் கடற்கரை வணிகத்திறன் மையமாகவும் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் மாற்றுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது எனத்தெரிய வருகின்றது.
இதனால் தென்பகுதிப் பெரும்பாண்மை சிங்கள இனத்தவர்கள் ஹொட்டல், மற்றும் உல்லாச விடுதிகள் அமைப்பதற்கும் வேலை செய்வதற்கும் இவ்விடத்தில் குடியேற்றப்படுவார்கள்.இதன் காரணமாக பெருமளவு சிங்களக்குடியேற்றத்தை உருவாக்கி இனசமநிலையை மாற்றும் திட்டமாக மாறி முற்றாக இது சிங்களக் கிராமமாகவும் மாறிவிடுமென இவ்வூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.ஆனால் தற்போது இது கடற்படையினரின் தளமாகவும் பயிற்சித்தளமாகவும் இருந்து வருகின்றது என்பது மக்களின் கருத்தாகும்.இவ்வாறு இப்பிரதேச மக்கள் எனக்குத் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள தமிழ் ஆலயம் ஒன்றும் பள்ளி வாசலும் சிங்கள மக்களைக் கொண்டு அழிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
2006ஆம் ஆண்டு ஏப்ரல் 25 திகதியோடு இவரைப் போலவே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது சொந்த பூர்வீக இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தனர்.
அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சம்பூர் மீது குண்டு மழை பொழிந்து அனைவரையும் அப்படியே அகற்றியது இலங்கை இராணுவம். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தோடு அந்த அழிவு இடம்பெற்று 10 வருடங்கள் ஆகிவிட்டது..
மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் தங்களுக்கும் அந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும் என எதிர்பாத்திருந்த மக்களுக்கு எதுவும் வந்துசேரவில்லை.
வடக்கில் வலிகாமத்திலும் கிழக்கில் பாணம பகுதியிலும்தான் மீள்குடியேற்றம் செய்யப்போவதாக ‘மாற்றம்’ அரசு அறிவித்திருப்பது சம்பூர் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
சமீபத்தில் 800 ஏக்கர் காணியை முதலீட்டு சபைக்கு வழங்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த்த வாரம் அதற்கான வர்த்தகமானி அறிவித்தல் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியப் பிரதமர் தங்களுடைய பிரதேசத்தில் அனல்மின்நிலையம் அமைப்பதை கட்டியம் கூறி சென்றுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறும் இந்திய பிராந்திய வல்லரசு, மக்கள் சம்பூரிலும், காங்கேசந்துறையிலும் மக்களின் இடம்பெயர்ச்சிக்கு காரணமாக இருப்பது தமிழ் தேசிய ஆர்வலர்களுக்கு புரியாத புதிர் அல்ல.
சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் சம்பூர் மக்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறு இருபதாயிரம் பேருக்கு தொழில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை, இங்கு அமைக்கப்படவுள்ள அனல் மின்னிலைய வேலையாட்களுக்கு தங்குமிடம், சுற்றுலாத்துறை போன்ற துறைகளினூடாக சம்பூர் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இலாபம் பெற முடியும் என்ற ஓர் அறிக்கை கூறுகிறது.
அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் அளவுக்கு உயர் தொழில்நுட்ப அறிவு கொண்ட மக்கள் சம்பூரில் இல்லை. விவசாயம், மீன்பிடி என்று வாழ்ந்த மக்களுக்கு அனல் மின் நிலையத்தில் என்ன வேலை செய்ய முடியும்? இன்னும் பல தலைமுறைக்ள அங்கு வாழ்ந்தாலும் உயர்தர வேலை ஒன்று கிடைக்குமா என்பது சந்தேகமே.
கிழக்கின் திருகோணமலை மக்களின் பட்டறிவு என்னவென்றால், பிரீமா, மிட்சுயி, ஆடைத்தொழிற்சாலைகள் என அங்கு தொழிற்சாலைகள் வந்திருந்தும் சம்பூர் தமிழ் மக்களுக்கு வேலை 5 வீதத்துக்கும் குறைந்த வேலையே கிடைத்துள்ளது. பெரும்பான்மையான மக்கள் கொண்டுவரப்பட்டு இன்று அவர்கள் திருகோணமலை வாசிகளாகிவிட்டனர். இப்படி தமிழர் சதவீதம் திட்டமிடப்பட்டு குறைக்கப்படுகின்றது என்கின்றனர் மக்கள்.
அதை போலவே இதற்கும் கொண்டுவரப்பட போகின்ற 95% சிங்கள குடியேற்றம் இனப்பரம்பலில் மாற்றத்தை கொண்டுவர போவது பட்டறிவு உண்மை. அதேபோல அனல்மின் நிலையத்துக்காக வரும் வேலையாட்கள் பாரிய சவாலாகவே இருக்கப் போவதும் உண்மை.
திருகோணமலையில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை 1993ஆம் ஆண்டு கனடா இலங்கைக்கு பரிந்துரை செய்திருந்தது. மகாவலி சர்வதேச கனேடிய நிறுவனமே இதனை 52 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திருகோணமலையில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
“திருகோணமலை மின் திட்டம்’ என்ற பெயரில் 300 மெகாவாட் மின்சாரத்தை (1502) உற்பத்தி செய்ய கனேடிய நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதில் மகாவலி அனல்மின் உலைகளை தயாரிக்க சுவிஸ்சர்லாந்து, சுவீடன், அமெரிக்க, அவுஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் முதலிட முன்வந்தன. ஏழு நாடுகளைச் சேர்ந்த 11 கம்பனிகள் முதலிட்டு 1993ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு சான்றிதழும் பெறபட்டதாக குறித்த கனேடிய நிறுவனம் தெரிவிக்கிறது. கனேடிய நிறுவனம் தெரிவிக்கிறது.
1993ஆம் ஆண்டு தொடங்கி 1995ஆம் ஆண்டு முடித்து மின்சாரத்தை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 93ஆம் ஆண்டு கொள்கை திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சு இதற்கான வேலைகளை செய்திருந்தது.
பின்னர் சில அரசியல் காரணங்களால் அது தடுக்கப்பட்டது.அதாவது, திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம் ஆரம்பத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு இன்று அது உறுதியாகியுள்ளது.
மின் உற்பத்திக்கான நிலக்கரி
COAL அனல்மின் நிலையத்துக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி கப்பலில் கொண்டுவரப்படும் அதேவேளை அதனை சம்பூருக்குள் எவ்வாறு கொண்டு வருவது தொடர்பாகவும், நிலக்கரி கழிவுகளை, அதாவது மின் உற்பத்திக்குப் பின்னர் அதனை எவ்வாறு வெளியேற்றுவது எந்த வழியில் கொண்டு செல்வது என்பது தொடர்பாகவும் தெளிவான தகவல்கள் இல்லை என்கின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள். இம்மின்சாரம் கந்தளாய்க்கு நிலக்கீழ் முறையில் கொண்டு செல்லப்படவுள்ளது.
18 கிலோமீற்றருக்குத் தாக்கம்
காட்டு வளத்தினால் பல விளை பொருட்களை உற்பத்தி செய்யும் சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டால் காபன், காபனீர்ரொட்சைட், மொனோக் சைட், கந்தகவீர் ஒட்சைட் போன்ற இரசாயன கலவைகள் அனல்மின் நிலையத்திலிருந்து 18 கிலோ மீற்றர் சுற்றுவட்டம் வரை தாக்கம் இருக்கும். அதாவது,மூதூர், திருகோணமலை நகர் என்பவற்றைத் தாண்டி இரசாயன அமிலங்கள் காற்றில் கொண்டு செல்லப்படும்
தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றினால் இத்தாக்கம் உடனடியாக கொண்டு செல்லப்படும். இது மிகவும் ஆபத்தான விடயம் என்பதை சுட்டிக்காட்டிய சூழலியலாளர்கள் இந்தியா மக்களுக்கு திட்டமிட்டே இதனை செய்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்திய பல்தேசிய நிறுவனங்களுக்காகவும் சேர்த்து வடிவமைக்கப்பட்ட இறுதி யுத்ததின் பலனை அந்நிறுவனங்கள் மன்னாரிலும், திருகோணமலையிலும், காங்கேசந்துறையிலும் தமது அறுவடையினை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளன.
இவ் பல்தேசிய நிறுவனங்களுக்குள் புதையுண்ட மக்கள் அதிலிருந்து விடுபட்டது வரலாற்றில் கிடையாது. இப்போது தமிழருக்கான பொறுப்பு கூறலை பணையம் வைத்து தனது நலன்களை அடைய பேரம் பேசும் இந்திய அரசு, எதிர்காலத்தில் இந்த பல்தேசிய நிறுவனங்களை வைத்து ஏனய முதலாளித்துவ நாடுகளை போல அரசியலுக்கு பாவிக்க தொடங்கும் என்பது தெளிவு.
பல வருடங்களாக சீபா உடன்படிக்கையை ஏற்படுத்த இந்தியா துடியாய் துடிக்கிறது. இதுவும் சம்பூர்,மன்னார்,காங்கேசந்துறை போன்று தமிழரின் சொத்து என்றால் ராஜபக்ச எப்பவோ இந்தியாவுக்கு எழுதிக்கொடுத்திருப்பார். ஆனால் இந்த ஒப்பந்தம் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதரத்தை இந்தியா இலகுவாக கட்டுப்படுத்த கூடியதாக அமைந்துவிடும் என்பதால் இலங்கை அஞ்சுகிறது. இதை இந்தியா எப்பிடியாவது இந்த ஸ்திரமற்ற அரசிடம் நிறைவேற்றிவிடும் போல தான் இருக்கிறது.
இந்த பொருளாதார யுத்தத்தில் இந்தியா இலங்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல வழிகளில் முயல்கிறது.அதற்கு ஏற்றவாறு இலங்கையில் அரசியல் மாற்றத்தை தூண்டியது. அத்துடன் இப்போது இலங்கையின் பொது நிறுவனங்கள் பலவற்றினை இந்திய நிறுவனங்கள் கையகப்படுத்தி வருகின்றன. இதெல்லாம் இலங்கையின் பொருளாதாரத்தை தனது கட்டினுள் வைத்திருந்து இலங்கை அரசியலை எப்பொதுமே தனது கைக்குள் வத்திருப்பதற்கானதாகும்.
இதையே மேற்குலகும் தற்போது விரும்புகின்றன. மேற்குலகை பொறுத்தவரை இந்தியாவில் தனியான நேசம் ஏதும் கிடையாது. உலகிற்கே சவால் விடும் பொருளாதார வலிமையை கொண்ட சீனாவுடன் நேரடியாக மோத விரும்பாத மேற்குலகு ஒரு அடியாளை வளர்த்து சீனாவுடன் மோத விடுவதே அவர்களின் நோக்கம். அதற்கு சீனாவுக்கு நிகராக இந்தியாவை வளர்ப்பதே அவர்களின் தற்போதைய நோக்கம்.அதற்கு இவ்வளவு காலமும் சீன உற்பத்திகளை வாங்கிய மேற்குலகு இனிமேல் மோடியின் ’’மேக் இன் இந்தியா’’ பொருட்களை வாங்கி இந்தியாவை பொருளாதர ரீதியில் உயர்த்தப்போகிறது.
இதற்கான அத்திவாரமே 2005 ஆம் ஆண்டள்விலே அமெரிக்கவால் முன்மொழியப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம். அதாவது சீனாவின் வீழ்ச்சி வரைக்கும் இந்தியாவை வளர்க்கவே மேற்குலகு விரும்பும். அதுவரை இந்திய நலன்களை பாதுகாப்பதே மேற்குலகின் ஒற்றை நிகழ்ச்சி நிரலாக இருக்க போகிறது.
இன்று அந்த கிழக்கு கரையோரத்தை இந்தியா கைப்பற்றி இருப்பதானால் என்ன நடந்துள்ளது? புவியியல் ரீதியாக இலங்கையின் கிழக்குக் கரையோரமானது இயற்கைத் துறைமுகம், குடாக்கள், ஆழம் குறைந்த கடற்படுக்கை, சங்கமம் (மகாகவலி கங்கை கடலோடு இணைகிறது), கடல் நீரேரிகள் எனப் பல இயற்கையாகவே அமைந்துள்ளன. அதேநேரம் இந்து சமுத்திர ரீதியான கப்பல் போக்குவரத்தையும், சர்வதேசக் கடல் எல்லைகளையும் மேற்பார்வை செய்ய முடியும். அவுஸ்திரேலியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளையும் அவதானிக்க முடியும்.
அந்தமான், நிக்கோபார் தீவுகளிலுள்ள இந்திய கடற்படைத் தளம் உள்ள பிளே எயார் துறைமுகம் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான கார் நிக்கோபார் தீவிலுள்ள கடற்படைத்தளம் ஆகியவற்றின் மேற்பார்வைக்கும் இந்தியாவுக்கும் இலங்கையின் கிழக்குக் கரையோரம் இந்தியாவுக்கு அவசியப்பட்டது எனலாம்.
ஆனால், தமிழர் என்ற வகையிலும், வரலாற்றின் அடிப்படையிலும் காலம்காலமாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டுள்ள இலங்கை மக்களது சொந்த நிலத்தை பறித்து, அங்கு மக்களுக்கு பொருந்தாத ஓர் அனல் மின் நிலையத்தைக் கட்டும் என எதிர்பார்க்கவே இல்லை.
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்திய அனல்மின் நிலையம் தற்போது சம்பூரில் அமைவது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது என்றே கூறவேண்டும். காரணம், அனல் மின் நிலையத்துக்கென சுமார் 1548 ஏக்கர் நிலப்பகுதியை கம்பி வேலிகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 208 குடும்பங்கள் வாழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேலை, 1548 ஏக்கரில் சுமார் 500 ஏக்கர் வரை சுத்தப்படுத்தப்பட்டு அனல் மின் நிலையம் அமைக்கும் ஆரம்ப கட்டத்தில் தயார் நிலையில் இருப்பதை காண முடிந்தது.
இந்தியாவின் அனுசரணையுடன் அமையவுள்ள மின் நிலையத்தில் இலங்கையில் பல பிரதேசங்களுக்கு இருந்து வந்த மின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என கூறப்பட்டது. அதற்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் (500*2) இரண்டு உலைகளை அமைக்கவுள்ளதாகவே ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது (250 * 2) 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இரு உலைகளை அமைப்பதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இம்மின் உற்பத்தியை இலங்கை மின்சார சபையும் இணைந்து இந்திய தேசிய அனல்மின் நிலைய கூட்டுத்தாபனத்துடன் சம்பூரில் அனல் மின் நிலையம் உருவாகவுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் 2006ஆம் ஆண்டு முதல் இழுபறியில் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் மோடியுடன் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அமையவுள்ள இரண்டாவது நிலக்கரி அனல்மின் நிலையம் இதுவாகும்.சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பதாக கூறிய இடம் முதற்கட்டமே என அறிய முடிகிறது. இதில் மொத்தமாக ஆறுகட்டங்கள் இருக்கிறது என பெயர் குறிப்பிட விரும்பாத அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதாவது, 700 மில்லியன் ரூபா செலவில் முதலாம் கட்டத்தில் இரண்டு 250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க ஓர் உலையும், 2ஆம் கட்டத்தில் 1300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரும்பு தொழிற்சாகைள், வாகன உற்பத்தி தொழிற்சாலை, உரத் தொழிற்சாலை, நீர் விநியோக தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, எண்ணெய் ஆலைகள், சுற்றுலா மையங்கள் என பல தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக இலங்கை உட்பட பிரேசில், இத்தாலி, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என ஏழு நாடுகள் முதலிட்டுள்ளன. அணுஉலை ஒன்றும் உருவாகவுள்ளது. மூன்றாம் கட்டமாக இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் தொழிற்சாலைகள் நிறுவப்படும். இப்படியாக சம்பூரின் 10 ஆயிரத்துக்கு 600 ஏக்கருக்கு மேற்பட்ட மொத்த நிலப்பகுதிகளும் சூறையாடப்படவுள்ளது என தெரிகிறது.
இப்படியாக தாயகத்தின் மூன்று நுழைவாயில்களான மன்னார்,திருகோணமலை,காங்கேசந்துறை என்பன பல்தேசிய நிறுவனங்கள் வாயிலாக இந்தியாவின் கோரப்பற்களுக்குள் அகப்பட்டுக்கொண்டு விட்டன. இரண்டு பக்க பொறிக்குள் தமிழர் தரப்பு மாட்டுப்பட்டு விழிபிதுங்கி நிற்கிறது. இதனை எப்படி தமிழர் தரப்பு கையாள போகிறது. இன்னுமொரு பிரேமதாசா பாணியிலான treatment சாத்தியமா.. சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் என்ற நிலைமையை எப்படி கையாள போகிறார்கள்.. இதற்கான மூலோபாய அரசியலை வரையப்போவது யார்..எப்போதும் போல தமிழரின் எதிர்காலம் கேள்விக்குறிகளுடனேயே பயணிக்கிறது.