கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து மீண்டெழும் நோக்குடன் சீனாவுடன் மேலும் 14 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரும் வர்த்தக முகாமை அமைக்க முடிவு செய்துள்ளன. உலகின் மூன்றில் ஒரு பகுதி பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கும் இந்த ஒப்பந்தம் புதிய அரசியல் திரும்பல் புள்ளியாகக் கருதப்படுகிறது.
10 நாடுகளை உள்ளடக்கிய தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியன் உச்சிமாநாட்டில் இந்த Regional Comprehensive Economic Partnership(RCEP) என்று அழைக்கப்படும் புதிய ஒப்பந்தம் நிறைவேறியது. கோரொனாவிற்குப் பிந்திய உலகப் பொருளாதாரத்தில் உச்ச வளர்ச்சியடைந்துள்ள முதலாவது நாடாக சீனா தன்னைப் பிரகடனப்படுத்தியுள்ள அதே வாரம் இந்த மாநாடில் ஒப்பந்தம் நிறைவேறியது.
RCEP இல் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை அடங்கும். அமெரிக்கா நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான கதவுகள் திறந்திருக்கும் என்கிறது இந்த அமைப்பு.
அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலான இந்த வர்த்தகப் போட்டிக்குள் ஏழை நாடுகள் சிக்கிச் சின்னாபின்னமாகும் நிலை தோன்றியுள்ளது. ஆஸ்திரேலியா, புருனே, கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, மியான்மர், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளே இந்தக் கூட்டமைப்பின் ஆரம்ப நாடுகளாக க் காணப்பட்டாலும் இலங்கை போன்ற நாடுகள் எதிர்காலத்தில் உள்ளடக்கப்படலாம்.