மேற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தேவையென்றால் சாரிசாரியாகக் கொலை செய்யவும், சமாதானம் பேசவும், ஜனநாயகத்தை அழிக்கவும், ஆக்கவும் இலங்கை ஆடுகளமாகப் பயன்படுகிறது. வன்னியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளைம் மட்டுமல்ல ஆலோசனைகளையும் வழங்கிய மேற்கு நாடுகள் இன்று தமிழர்களைத் தலைமை தாங்க அவர்களின் கொத்தடிமைகளை நியமித்துள்ளனர்.
மேற்கு நாடுகள் இலங்கையில் தீர்க்கமான அரசியலை நடைமுறைப்படுத்துகின்றன.
இலங்கையில் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீடும் உள்ளனவா என்ற சந்தேகங்கள் இன்று மீளுறுதி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் நவம்பர் 10, 2006 அன்று இலங்கை நேரம் காலை எட்டு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத ஆயுததாரியினால் கொழும்பில் அவரது இல்லத்தில் இருந்து அலுவலகத்தை நோக்கி செல்லும் வழியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
மகிந்த ராஜபக்ச அரசு தனது கொலைக் கரங்களை இறுக்க ஆரம்பித்த அக்காலப் பகுதியில் நடைபெற்ற கொலைகளில் இதுவும் ஒன்று. ரவிராஜின் காலப்பகுதியில் தமது தாகம், சாப்பாடு, சாராயம் எல்லாமே தமிழீழம் என்று அழைத்த பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களை கடந்து நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டதற்கான காரணம் வெளிப்படையானது.
கொழும்பில் குறுகிய காலத்துள் சிங்களம் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்ட ரவிராஜ், சிங்களத்தில் சிங்கள மக்களுக்காக தமிழர்களின் பிரச்சனைகளப் பேசினார். சிங்கள மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் குரல்கொடுத்தார். ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை “தெரண” தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். சிங்கள மொழியில் வழங்கிய அவரின் நேர்காணல் சிங்கள மக்களின் மனச்சாட்சியை உறுத்தும் வகையில் அமைந்திருந்தது. சிங்கள மக்களின் பிரச்சனைகளையும் பேசியது.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நச்சுக் காற்றால் மயக்கமுற்றிருந்த மக்கள் ரவிராஜை அவதானிக்கத் தொடங்கினர். இறுதிக் காலங்களில் ரவிராஜின் பேச்சுக்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் அவரை ஒரு கதாநாயகனாக மாற்றிக்கொண்டிருந்தது.
இதனால் தமமது சிங்கள பௌத்த பேரினாவாதப் பிழைப்பிற்கு ஆபத்துவந்த்விடலாம் என மகிந்த அரசு அஞ்சியது.
இதனால் ரவிராஜைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தது. நடராஜா ரவிராஜ் தெருவோரத்தில் அனாதரவாக அனாமோதய நபர்களால் கொல்லப்பட்டார்.
கொலையின் பின்னர் இலங்கை அரசு அதிர்ச்சியடைந்தது போல நாடகமாடியது. ஸ்கொட்லாண்யார்டை விசாரணைக்கு அழைத்தது. இலங்கைக்குச் சென்ற ஸ்கொட்லாண்ட் யார்ட் போலிஸ் விசாரணை நடத்திவிட்டுத் தமக்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்காமையால் விசாரணையை முழுமைப்படுத்த முடியவில்லை என்றது.
ஒன்பது வருடங்கள் கடந்து மைத்திரி அரசின் கீழ் ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணை மீண்டும் நடைபெற்றது.
நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகளை குற்ற புலனாய்வுப் பிரிவினர் பூர்த்தியாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
ரவிராஜ் கொலை தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் காவல்துறையினர் கோரியுள்ளனர். இவ்வாறு கோரிக்கை விடுத்து சில காலமாவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரவி ராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலையை மேற்கொள்ளுமாறு பணிப்புரையை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் வழங்கியதாகவும், நேரடியாக இந்த கொலையை வழிநடத்தியவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எனவும் சாட்சியங்களுடன் நிரூபணமாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் கைது செய்ய அனுமதியளிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொலை தொடர்பில் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் அது குறித்த அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிக்கை கிடைக்கும் வரையில் இந்த சம்பவம் குறித்த ஆலோசனைகளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்
வன்னிப் படுகொலைகள் வரையான காலப்பகுதியில் இனக்கொலை அரசிற்கு ஆதரவு வழங்கிய மேற்கு அரசுகள், இனப்படுகொலைக்கு ஆதரவாகச் சிங்கள மக்களைத் தயார்படுத்த விரும்பின. நடராஜா ரவிராஜ் இதற்குத் தடையாகவிருந்தார். இதனால் கோத்தாபயவின் கொலை விசாரணை கிடப்பில் போடப்பட்டது.