பன் கீ மூன் யாழ்பாணத்திற்கு இன்று 02.09.2016 பயணம் செய்யும் போது அதற்கு எதிரான போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, அதன் தோற்றம் தொடர்பனதும் இதுவரை அந்த நிறுவனம் உலகம் முழுவதும் அழிவுகளை ஏற்படுத்த துணை சென்றமை தொடர்பாகவும் எந்த வகையான பிரக்னையுமின்றி அந்த நிறுவனத்தை நம்புமாறு தமிழ் மக்களின் தலைமைகள் கூறிவந்தன. இதுவரைக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் அமெரிக்காவின் அரசியல் நலன்களுக்கு முரணாக எந்த இனக்கொலையாளியையும் போர்க்குற்றவாளியையும் தண்டித்த வரலாறு இல்லை. மாறாக அவர்களைப் பாதுகாத்த வரலாறுகளையே காணலாம்.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரத்தக் களரியை ஏற்படுத்துவதற்கும் மனிதப் பிணக்காடாக அந்தப் பிரதேசம் முழுவதையும் மாற்றுவதற்கும் அமெரிக்கா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுத்ததில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்கு பிரதானமானது. ஆப்கானிஸ்தானிலும் சிரியவிலும் மனித இரத்தம் வழிந்தோடுவதற்கு ஐ.நா பெரும் பங்காற்றியிருக்கிறது. ஈராக்கில் ஒரு லட்சம் குழந்தைகள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போனமைக்கு இந்த நிறுவனம் அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தது.
ஆபிரிக்க நாடுகளை வறுமையில் பேணுவதற்கும் அந்த நாடுகளில் பல்தேசிய வர்த்தக நிறுவனங்கள் தமது சுரண்டலைத் தங்கு தடையின்றி நடத்துவதற்கும் போரையும் பேரவலத்தையும் அந்த நாடுகள் மீது திணிப்பதற்கும் ஐ.நா இன் பங்கு குறித்துக்காட்டத்தக்கது.
ஐ.நாவின் செயலாளராக பன் கீ மூன் இருந்தாலென்ன அன்றி வேறு ஒருவர் நியமிகப்பட்டால் என்ன ஐ.நா என்ற அமைப்பை அமெரிக்க ஏகாதிபத்தியம் தோற்றுவித்ததன் நோக்கம் மாற்றமடையப் போவதில்லை.
ஆக, போராட்டம் பன் கீ மூன் என்ற தனி நபருக்கு எதிரானதக அல்லாமல் ஐ.நா என்ற நிறுவனத்தின் முழுமையான செயல்முறைக்கும் அதன் இருப்பிற்கும் எதிராக நடத்தப்பட்டால் அது அத்தமுள்ளதக அமையும்.
இலங்கை இனப்படுகொலை இரணுவத்தை ஐ.நா சமாதனப்படையில் இணைத்துள்ள சூழலில் ஐ.நாவைப் பிடித்து ராஜபக்சவைத் தூக்கில் போட்டுத் தருகிறோம் என மக்களை நம்பக்கோரிய அனைத்துக் கட்சிகளும் மக்களிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமன்றி புதிய அரசியல் பொறிமுறையை ஏற்படுத்தியாக வேண்டும்.
ஏமாற்றப்பட்ட மக்களும் போராளிகளும் ஐ.நாவிற்கும் அமெரிக்காவிற்கும் இலங்கை அரசிற்கும் எதிராக மட்டுமன்றி தம்மை ஏமற்றிய அரசியல் கட்சிகளுக்கும் எதிராகப் போராட வேண்டிய நிலையுள்ளனர்.