இன்றைய சிக்கல் நிறைந்த அரசியல் சூழலில் மக்களதும் போராளிகளதும் தியாகங்களும் இழப்புக்களும் அதிகாரவர்க்கத்தாலும், பிழைப்புவாதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது. சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை முற்றாகக் கைவிடப்பட்டு, நினைவு நாட்களும், நிகழ்வுகளும், மனித உரிமைக் கோரிக்கையும் மட்டுமே அரசியலாகிவிட்டது. இனவாதமும் பேரினவாதமும் மக்களை இன்னும் கொன்று தின்றுகொண்டிருக்கின்றன. இவ்வாறான சூழலில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலும் இலங்கையிலும் தோன்றியுள்ள அரசியல் வெற்றிடம் மக்கள் சார்ந்த புரட்சிகர சக்திகளால் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.
இலங்கை முழுவதும் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமை உறுதிப்படுத்தப்படுவதும், ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்ள வழிகளை அகலத் திறப்பதும் அவசியமாகின்றது. இதற்கான அரசியல் திட்டத்தை வளர்த்தெடுத்து, போராட்டங்கள், விமர்சனம், சுய விமர்சனம் போன்ற உறுதியான அரசியல் ஆயுதங்கள் ஊடாக செழுமைப்படுத்தும் நோக்கத்தோடு மக்கள் முன் செல்கிறோம். ஒற்றைப்பரிமாணக் கருத்துக்களை கறாராக முன்வைக்காமல் விவாதத்திற்குரிய வெளியை நாம் திறந்துவைக்க எண்ணுகிறோம். இந்த அரசியல் வெளிக்கான அமைப்புக்குழு ஒன்றை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்ககும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகளிலும் இலங்கையிலும் அரசியல் சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ளோம்.
மக்கள் சார்ந்த புதிய அரசியல் வழியை வளர்த்தெடுப்பதில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.
இலங்கை இந்திய மற்றும் ஏகாதிபத்திய அதிகாரங்களுக்கு எதிரான ஒவ்வொரு தனி மனிதனும் அமைப்பு இணைந்து கொள்ளாலாம். அமைப்புக்குழு எதிர்காலத்தில் ஜனநாயக மத்தியத்துவம் கொண்ட தலைமையைத் தோற்றுவிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபடும்.
எமது முதல் சந்திப்பு டிசெம்பர் மாத ஆரம்பத்தில் லண்டனில் நடைபெறுகிறது. இரண்டாவது சந்திப்பு இலங்கையில் நடைபெறுகிறது. பங்களிக்க விரும்புபவர்கள் கீழுள்ள மின்னஞ்சலுக்கு தமது விபரங்களை அறியத் தரவும், சந்திப்பிற்கான திகதியை விரைவில் அறியத் தருகிறோம்.
: unitycentrecop@gmail.com
-தெனீசன்
-அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களதும் ஐக்கிய கேந்திரம்
{Unity centre for all oppressed people}
விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும் வேலைத்திட்டம்:
ஐக்கிய முன்னணியை நோக்கிய அமைப்புக்குழுவின் வேலைத்திட்டத்திற்கான பரிந்துரை..
எமக்கு மத்தியில் தேசிய விடுதலை அமைப்பு ஒன்றின் தேவை அதிகரித்துள்ளது. தேசியம் என்பது ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான அரசியல் திட்டம். ஏகாதிபதியங்களுடனான இணைவு என்பது விதேசியம். விதேசியவாதிகள் தங்களைத் தேசியவாதிகள் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் சூழலில் தேசியம் இயக்கத்தின் அவசியம் இன்று முன்னணி சக்திகளால் உணரப்படுகின்றது. இந்த சூழலில் அதற்கான அமைப்பு ஒன்று அவசியமாகும். அதற்கான ஜனநாயக ஐக்கிய முன்னணியிலிருந்தே அனைத்தும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
ஜனநாயக ஐக்கிய முன்னணி என்பது பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களுக்கிடையேயான பொது வெளியில் எட்டப்படும் உடன்பாடாகும். இதன் வளர்ச்சி ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு இடையேயான உடன்பாடாகவும் பரிணமிக்கும். பெருந்தேசிய இனத்தின் மத்தியிலுள்ள ஒடுக்கப்படும் மக்களுடனான இணைவு அதன் உயர் வடிவமாக அமையும்.
இலங்கை:
1. புலிகளின் அழிவிற்குப் பின்னான எதிர்ப்புப் போராட்டத்திற்கான வெற்றிடமும், கடந்த அறுபது வருடங்களாக காணப்படும் புரட்சிகர அரசியலும் நிரப்பப்பட வேண்டும்.
2. இலங்கை அரசும் அதன் ஒற்றையாட்சி அரசியலும், ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும், சிங்கள ஒடுக்கப்படும் மக்களுக்கும், நேரடி எதிரி.
3. ஏகாதிபத்தியங்களின் அடியாள் அரசான, இலங்கை அரசின், நவ தாராளவாதப் பொருளாதாரம், முழு இலங்கையையும் சுரண்டுவதற்கு வழி செய்கிறது.
4. இலங்கைப் பேரினவாத அதிகாரவர்க்கம் தேசிய இனங்களை ஒடுக்கும் அதே வேளை, அப்பாவிச் சிங்கள மக்களைப் பேரினவாத நச்சூட்டிப் பேணி வருகிறது. அவர்கள் மீதான ஒடுக்குமுறையை, சிங்களப் பேரினவாத அரசு மறைப்பதற்குப் பேரினவாதம் பயன்படுத்தப்படுகிறது.
5. ஒடுக்கப்படும் தேசிய இனங்களும், ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சிங்கள உழைக்கும் மக்களும், இவர்கள் அனைவரின் மத்தியிலுமுள்ள ஜனநாயக சக்திகளும் நட்பு சக்திகள்.
சர்வதேசச் சூழல்..
1. அனைத்து ஏகாதிபத்திய அவற்றின் தரகுகளும் மக்கள் விரோத சக்திகள்.
2. இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கமும், இந்திய மேலாதிக்க விஸ்தரிப்பு வாதமும் மக்களின் எதிரிகளே.
3. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் சர்வதேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளும், குறிப்பாக இந்தியாவில் சமூக விடுதலையை நோக்கிப் போராடும் சக்திகளும் நட்புசக்திகள்.
புலம்பெயர் சூழல்:
1. புலம்பெயர் சூழல், இலங்கை உற்பத்தியுடனும் அரசியல் புறநிலை யதார்த்ததிலிருந்தும் அன்னியப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.
2. புலம்பெயர் நாடுகளில், தமிழ் அடையாளத்தை முதன்மைப்படுத்தும் போக்கு, ஜனநாயக முற்போக்கு அரசியலைப் புறம்தள்ளி, ஆபத்தான வியாபாரமாக மாறி வருகின்றது.
3. தொலைதூர தேசியவாதம் என்பது, குறுந்தேசிய வாதமாக உருவாகும் போக்கானது, எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
4. இதுவரைக்கும் புலம்பெயர் நாடுகள், பிற்போக்கு தேசியத்தின் பின்பலமாகவும், ஊக்க சக்தியாகவும் அமைந்திருந்தது பல அழிவுகளை ஏற்படுத்தியது.
தமிழ் நாட்டு சூழல்:
1. தமிழ் நாட்டுத் தமிழ் உணர்வாளர்களின் குறுந்தேசியம், புலம் பெயர் பிற்போக்கு தேசியப் போக்குடன் பல ஒத்த போக்குகளைக் கொண்டுள்ளது.
2. இந்திய அரச அதிகாரத்தின் அடக்கு முறை, பல தமிழ்த் தேசிய விரக்தி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களை இந்திய அரசிற்கு எதிரான முற்போக்கு இயக்கங்கள் வென்றெடுக்கும் போக்கு ஊக்கமடைய வேண்டும்.
3. தமிழ் நாட்டு முற்போக்கு இயக்கங்களுடனான உறவு வலுப்பெற வேண்டும்.
மலையகத் தமிழர்கள்:
1. இலங்கையின் மலையகத் தமிழர்கள் வடகிழக்குத் தமிழர்களைப் போலவே தனியான தேசிய இனமாகப் பரிணமிக்கும் நிலையிலுள்ளனர்.
2. மலையகத் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களில் 95 வீதமான தொழிலாளர்களைக் கொண்ட இனமாகும்.
3. இலங்கை தழுவிய உழைக்கும் மக்களின் போராட்டத்தை, தலைமை தாங்கும் வலிமைகொண்,ட நிறுவனமயமான தொழிலாளர்களை கொண்டது, மலையகத் தேசிய இனம்.
முஸ்லீம்கள்:
1. சர்வதேச தன்மை கொண்ட, வட கிழக்குத் தமிழர்கள் போலவே வளரும் தேசிய இனம்.
2. தேசமாக உருவாவதற்குரிய தனியான பிரதேசத்தைக் கொண்டிராத பிரதான இயல்பு, வளரும் தேசிய இனத்தின் வெளித்தெரியும் பிரதான பங்கு.
3. ஏனைய வளரும் தேசிய இனங்கள் போலவே, முஸ்லீம்களின் ஒடுக்கு முறைக்கெதிரான தேசிய இன வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
வேலைத் திட்டத்திற்குரிய பிரதான கோட்பாட்டுப் பிரச்சனைகள்:
1. இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு.
2. தேசிய விடுதலைக்கான, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முதன்மையானது.
3. பிரதான முரண்பாடுகளைக் கடந்து இலங்கை மக்களின் பிரதான எதிரி தரகு முதலாளித்துவம்.
4. குறைநிலை வளர்ச்சியடைந்த – ஏற்றுமதி செய்யப்பட்ட முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், உலகமயமாதல் உருவாக்கிய சமூக அமைப்பும் கருத்தில் கொள்ளப்பட்டு, இவற்றின் உருவாக்கமான சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள உழைக்கும் மக்களே எந்தப் போராட்டங்களினதும் தலைமைசக்தி.
5. அடிப்படை முரண்பாடாக, தரகு முதலாளித்துவத்திற்கும், சமூகத்தின் அடி நிலையிலுள்ள, உழைக்கும் மக்கள் பகுதியினருக்கும், இடையேயான வர்க்க முரண்பாடே காணப்படுகிறது..
6. பிரதான முரண்பாடான, தேசிய இன முரண்பாடிற்கும், தேசிய இன அடக்குமுறைக்கும், எதிரான போராட்டங்களின் வெற்றியே, இலங்கை மக்களின் விடுதலைக்கான முன்நிபந்தனையாக அமைகிறது.
7. ஒடுக்கப்படும் தேசிய இனங்களின், முற்போக்குத் தேசிய இயக்கங்கள் நட்பு சக்திகளாகவும், பெருந்தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள் சார்ந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள், நட்பு சக்திகளாகவும் கருதப்படும்.
8. வறிய கூலி விவசாயிகள், மத்தியதர விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், அரச ஊழியர்கள் உட்பட்ட அனைத்து உழைக்கும் மக்களும் தேசிய விடுதலைக்கான ஐக்கிய முன்னணியின் நட்பு சக்திகள்.
9. தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சிந்தனை முறையின் நிறுவன மயமான பிரிவுகள் மக்கள் போராட்டங்களின் எதிரிகள்.
10. இலங்கை பேரினவாத, சிங்கள பௌத்த, தரகு முதலாளித்துவ அரசு ஒரு புறத்திலும், அதன் சிந்தனை முறையோடு கூடிய தமிழ்த் தரகு முதலாளித்துவமும் இலங்கையின் ஒடுக்குமுறைக்கான நிறுவனங்கள்.
11. குறைநிலை வளர்ச்சியினதும் நிலப்பிரபுத்துவ சிந்தனையினதும் உருவாக்கமான சாதீயம், பிரதேசவாதம் என்பனவும் பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை போன்ற சமூக ஒடுக்கு முறைகளும், குறுந்தேசியவாதமும் எதிர்கொள்ளப்பட வேண்டியவை.
(கோட்பாட்டுப் பிரச்சனைகள் இதற்கு மேலதிகமான தளத்தில் உரையாடல்கள் விவாதங்கள் ஊடாக விரிவுபடுத்தப்படவேண்டும்)
நடைமுறை வேலைத்திட்டங்கள்:
அ. புலம்பெயர் நாடுகள்.
1. புலம்பெயர் நாடுகளில் பிற்போக்கு தேசிய வாதிகளை முற்போக்குத் தேசியத்தை நோக்கி வென்றெடுத்தல்
1.1. ஊடகங்களூடான பிரச்சார நடவடிக்கைகள்.
1.2 குறுந்தேசிய வாதத்தின் ஊற்றுமூலத்தின் பிரதான பகுதி என்பது தேசிய இன அடக்கு முறை என்ற வகையில் அதற்கான தலைமையையும் பிரசார நடவடிக்கைகளையும் முற்போக்குத் தேசியவாதத்தின் வழியே முன்னெடுத்தல்.
1.3 பிற்போக்கு தேசிய வாதத்தின் இரண்டாவது பிரதான பகுதி தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தல் என்பதால் அதன் வழியேயான சமூகப்பிரச்சனைகளைக் கையாளுதல். உ+ம்: நிறவாதப் பிரச்சனைகள்,
கலாச்சார முரண்பாடுகள்….
2. புலம்பெயர் நாடுகளில் முற்போக்குத் தேசியத்தையும் போராட்ட உணர்வையும் வளர்த்தல்;
2.1. ஏனைய சர்வதேசப் போராட்ட அமைப்புக்களுடனான உறவுகளை ஏற்படுத்தல்.
2.2. ஏனைய சர்வதேசப் போராட்ட அமைப்புக்களுடன் ஐக்கிய முன்னணியை உருவாக்குதல்.
2.3. புலம்பெயர் நாடுகளின் தொழிற்சங்கப் போராட்டங்கள் உட்பட்ட நியாயமான போராட்டங்களை ஊக்குவித்தலும் ஆதரித்தலும் பங்களித்தலும்.
2.4 இலங்கைப் பிரச்சனை குறித்த கலை கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடுசெய்தல்.
2.5 கருத்தரங்குகளையும் கல்விவட்டங்களையும் ஏற்பாடு செய்தல்.
3. இலங்கையில்
3.1 மக்கள் சார்ந்து போராடும் தனி நபர்களை அடையாளம் காணுதல்
3.2 சிறிய குழுக்களாக கிராம/ நகர மட்டத்தில் அரசியல் கல்வி வட்டங்களை ஏற்பாடு செய்தல். அங்கு சர்வதேச அரசியல், இன்றைய நாட்டு நடப்பு போன்றவற்றிலிருந்து மக்களை அணிதிரட்டும் வேலைகள் தொடர்பான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.
3.3 பாடசாலை மட்டங்களில் சமூகம் சார்ந்த கலை இலக்கிய வேலைகளை ஊக்குவித்தல்.
3.4 கலை இலக்கிய நூல்களை வெளியிடுதல்.
3.5 கல்விவட்டங்கள் ஊடாக நகர கிராம மக்களின் அணிகளை ஒருங்கிணைத்தல்.
3.6 விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மத்தியில் முற்போக்குத் தொழிற்சங்கங்களை உருவாக்குதல்.
3.7 உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல்.
3.8 சிங்கள முஸ்லீம் மக்கள் மத்தியில் உள்ள சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்ளும் தனி நபர்களை இனம்கண்டு இணைவை ஏற்படுத்திக்கொள்ளல்.
(மேலும் விவாதத்திற்கு உபடுத்தப்பட வேண்டிய வேலைத் திட்டத்தின் முதலாவது பகுதியே இது)
கடித தலைப்பு இல்லாத பிரசுரங்கள் மாதிரி குறைந்த பட்சம் இந்த அரசியல் குழுவை ஒருங்கிணைப்பவர்கள் யார் யார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை;மக்களுக்கானது என்று கூறிக்கொண்டு இனியொருவில் மற்ற அரசியல் வகுப்பினரை வெளிப்படைதன்மையில்லாத அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டு இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையான செய்தியாக தென்படவில்லை????
புலியில்லாத கடந்த ஆறு வருடமாக இந்த வகையறான அரசியல் பேசுபவர்கள் தொடக்கம் புதிய கட்சி கட்டுபவர்கள் வரை கட்சி ஜனநாயகம்; சுதந்திரம் என்று கூறிக்கொண்டு திட்டமேதுமில்லாத செயல் இல்லாத கதை சொல்லிகளையே அவதானித்து வருகிறேன்.
இதிலும் பார்க்க எதேச்சாதிகார புலிகளின் முறைமையும் செயல்பாடுகளும் தியாகங்களும் மேலானதாக மிக உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு தெரிகின்றது.