2009 ஆம் ஆண்டு இலங்கை பேரினவாத ஒற்றையாட்சி அரச அதிகாரம் முள்ளிவாய்கால் நடத்திய இனப்படுகொலையின் பின்னான ஒன்பது ஆண்டு காலம் முழுவதையும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் மீட்சியை ஒடுக்குவதற்காக ஏகாதிபத்தியங்களும் இலங்கைப் பேரினவாத அரசும் பயன்படுத்திக்கொண்டன.
முள்ளிவாய்க்கால் வரைக்கும் ஆயிரமாயிரம் அப்பாவி மகக்ளும் போராளிகளும் சாட்சியின்றி அழிக்கப்பட்டனர் என்பது ஒரு புறமுமிருக்க மறுபுறத்தில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயமும் அழிக்கப்பட்டது. அந்த அழிப்பின் தொடர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அரசியற் செயற்பாடுகளின் குறியீடாகவே பெரும்பாலான முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இனப்படுகொலைக்கான நியாயத்தை ஐ.நாவில் கூட்டம் போட்டும், மன்றாடியும் பெற்றுக்கொள்வோம் என முள்ளிவாய்க்காலின் மறு தினத்திலிருந்தே புலம்பெயர் அமைப்புக்களும் அவற்றின் இலங்கை இந்தியத் துணைக் குழுக்களும் ஆரம்ப்பித்துவிட்டன. இன்று வரை ஐ.நா வாசலிலும், ஐரோப்பிய அமெரிக்க அதிகார மையங்களின் முன்னாலும் உலாவரும் இந்தக் குழுக்களில் பெரும்பாலனவற்றிற்கு மக்களிடம் குறைந்தபட்சத் தொடர்புகளைக்கூட கிடையாது..
கடந்த ஒன்பது ஆண்டுகளையும் வெறுமை நிறைந்த காலமாக, நாற்பது ஆண்டுகாலப் போராட்டத்தின் எச்ச சொச்சங்களையும் அழிப்பதற்கான காலமாகப் பயன்படுத்த இந்த அமைப்புக்களே ஏகாதிபத்திய மற்றும் பேரினவாத அரசுகளின் முகவர்களாகச் செயற்பட்டிருக்கின்றன.
இக் குழுக்களுக்குள்ளும் அவற்றின் செயற்பாட்டாளர்களுக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பினும் மக்களை தொடர்ந்து ஏமாற்றும் நோக்கத்தில் கீழ்வரும் புள்ளிகளில் அவர்கள் உடன்படுகிறார்கள்.
-போராட்டம் அப்பழுக்கில்லாமல் சரியாகவே நடைபெற்றது இருப்பினும் உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம்மை அழித்துவிட்டன.
-ஆதலால் இனிமேல் போராட்டம் என்பது சாத்தியமற்றது.
-நடைபெற்ற போராட்டம் சரியாகவே நடத்தப்பட்டது என்பதால் இனிமேல் அதன் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய போராட்ட வழிமுறையை எல்லாம் தேடத் தேவையில்லை.
-ஆக, அழித்த அரசுகளிடமே மண்டியிட்டு தருவதைப் பெற்றுக்கொள்வோம்.
நமது போராட்டத்தின் அரசியல் தவறுகளும் அது அழிக்கப்பட்டதற்கு மற்றொரு காரணம் என்றும் அவற்றை விமர்சித்துப் புதிய போராட்டத்தை நோக்கி மக்களை அழைப்பு விடுக்க எந்த விடுதலைப் புலி சார்ந்த தனிமனிதனும் குழுவும் இதுவரை தயாராகவில்லை.
சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை முள்ளிவாய்க்காலில் அழித்தவர்கள் இலங்கை அரசும் அதன் பின்னணியில் செயற்பட்ட ஏகாதிபத்திய அரசுகளும் தான். அதன் பின்னான காலப்பகுதியில் அந்த அழிப்பை இலங்கை அரசிற்கு இணையாக நடத்துபவர்கள் புலிகளின் துதிபாடும் இக் குழுக்களும் தனிமனிதர்களும் தான்.
வடக்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், விமானப்படைகளை வைத்திருந்தும் எம்மால் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்றும் இலங்கை அரசாங்கத்திடம் சமரசம் செய்தே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்
இதே நியாயத்திற்காகவே ஐ.நாவிடமும் ஐரோப்பிய அமெரிக்க ஏகபோக நாடுகளிடமும் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்கின்றனர் இன்னொரு சாரார். மிஞ்சிப் போனால், ஐ.நா வாசலில் நின்று உரத்த குரலில் ‘எமது தலைவர் பிரபாகரன், எமது நிலம் தமிழீழம்’ என்று கூச்சலிடுவதே கடந்த ஒன்பது ஆண்டுகளை மக்களை ஏமாற்றுவதற்காகப் பயன்பட்ட உக்தி.
கேட்டால் ‘தலைவர் போராட்டத்தை சரவதேச மயப்படுத்திச் சென்றுள்ளார்’ என்கின்றனர். பிரபாகரனின் இராணுவ உடுப்புடனனான ஆளுயரப் படத்துடன் கூடியிருந்து முழக்கமிடுவதைப் பார்க்கின்ற வேற்று நாட்டுக் காரர்களுக்கு இவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதே புரிவதில்லை.
பிரபாகரனின் இராணுவ உடை படத்தைக் கண்ட பலர் இவர்தானா உங்களை அழித்த இலங்கை இராணுவத் தளபதி என்று கேட்டுச் சென்ற சம்பவங்களும் உண்டு.
போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டதாக மக்களை ஏமாற்ற இது போன்ற பல்வேறு தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டன.
முள்ளிவாய்க்காலின் அழிவுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால் இலங்கைப் பேரினவாத அரசைப் பலவீனப்படுத்துவதும் அதற்கு எதிரான சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவதுமே ஒரே வழிமுறை.
இலங்கை அரசை நிராகரிக்க ஆரம்பித்திருக்கும் சிங்கள உழைக்கும் மக்களைக் கூட சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் ஆதரவுத் தளத்தை நோக்கி அழைத்துவராமல் அவர்களை இலங்கை அரசின் பக்கமே கொண்டு சேர்ப்பதற்கான பணியையும் இக் குழுக்களே செய்து முடிக்கின்றன. சிங்களன் தமிழீழத்திற்கு நுளைந்த போது தலைவர் பறந்து பறந்து சுட்டார் என தமிழ் நாட்டு சினிமாப் பாணி அரசியல் மேடைகளும் புலம்பெயர் நாடுகளுக்கு இணையாக இலங்கை அரசின் பேரினவாத இருப்பிற்குத் துணை செல்கின்றன.
ஒடுக்குமுறை கோலோச்சும் இலங்கையில் இவ்வாறான நேர்மையற்ற ஏகாதிபத்தியக் ஒட்டுக் குழுக்கள் மக்களின் போராட்டத்தைத் தற்காலிகமாகப் பின் தள்ள மட்டுமே முடியும். அதனை முற்றாக நிறுத்திவிட முடியாது.
மக்கள் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பாராளுமன்ற வாக்குக் கட்சிகளின் நிறம் மங்க ஆரம்பித்திருக்கின்றது. புலம்பெயர் மற்றும் இந்தியக் குழுக்களை மக்கள் நம்புவதில்லை. ஆக, முன்னைய போராட்டம் தொடர்பான விமர்சன சுய விமர்சனங்களோடு புதிய போராட்டத்திற்கான புரட்சிகர முழக்கங்களோடு இன்னொரு முள்ளிவய்க்கால் நிகழ்வு நடத்தப்படுவதற்கான காலம் தொலைவில் இல்லை என நம்புவோமாக.அந்த நிகழ்வில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் கூட அஞ்சலி செலுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு.