பொதுவாகவே இந்து சமய விழாக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொல் பழங்குடிகளை ஆரியர்கள் வெற்றி கொண்ட நிகழ்வுகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இதற்காக ஒரு அரக்கன் கற்பிக்கப்பட்டு, அவனது இறப்பினைக் கொண்டாடும் விழாக்களாகவே அவை கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் மகிசாசூரன் { எருமைத் தலையோன்} வீழ்ச்சியினைக் கொண்டாடும் ஒரு விழாவாகவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. `பிரம்மனிடம் வரம் பெற்ற மகிசாசூரன் தேவர்களைத் துன்புறுத்த, இந்திரன் உட்பட்ட தேவர்களும் தோற்கடிக்கப்பட, துர்க்கை மகிசாசூரனைக் கொல்லுகிறாள்` என `தேவி மகாத்மியம்` எனும் புராணநூல் கூறுகின்றது. இவ்வாறான எருமைத் தலையுடைய மகிசாசூரன் அழிப்பே நவராத்திரியின் இறுதி நாளான `விஜயதசமி` எனக் கொண்டாடப்படுகின்றது {இதனையே `வாழை வெட்டு`/ `மானம்பூ` என ஊரில் கொண்டாடுவார்கள்}. மகிசாசூரன் எருமையினை ஊர்தியாகக் கொண்டவன் எனச் சில இடங்களில் சொல்லப்பட்டாலும், மாமல்லபுரத்திலுள்ள சிற்பம் அரக்கனை எருமைத் தலையுடனேயே காட்டும் {படம்1 காண்க}. இது எவ்வாறு தொல் பழங்குடி ஒன்றின் அழிவாகக் காணப்படும் எனப் பார்ப்பதற்கு முன் எருமையின் இன்றைய நிலையினைப் பார்ப்போம்.
எருமையின் அருமை புரியாத இன்றைய தலைமுறை :-
இன்றைய மனித வாழ்வியலில் வசை பாடுவதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு விலங்காக எருமை காணப்படுகின்றது. `எருமை மாதிரி வளர்ந்துள்ளாய் அறிவில்லையா!`, `எருமை மாட்டில மழை பெய்த மாதிரி`, `அட எருமைப் பயலே` என அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் முதலிரு வசை பாடல்களைப் பார்ப்போம். ஏனைய விலங்குகளுக்கு எவ்வாறு ஐந்து அறிவிருக்கின்றதோ அது போன்றே எருமையின் அறிவும்; அடுத்ததாக இந்திய எருமைகள் பொதுவாக நீர் எருமைகள்(Water buffaloes ) எனப்படுவதால், மழை பெய்தால் அவற்றுக்கு எந்தக் கேடும் வராமையால் அவை மழை பெய்வதனையிட்டு இன்னலடையாது. எனவே மேற்கூறிய வசை பாடல்கள் எல்லாம் இயற்கையுடன் பொருந்தாமல், உள் நுழைக்கப்பட்ட வசை பாடல்களாகவே காணப்படுகின்றன.
இன்னொரு எடுத்துக்காட்டினைப் பார்ப்போம். “உங்களுக்குப் பசுப் பால் தேவையா அல்லது எருமைப் பால் தேவையா” எனக் கேட்டால் பலரும் எதனைக் குறிப்பிடுவார்கள் {பெரு நிறுவனங்களின் பால் பொதிகளில் வேறுபாடு இல்லை}. பசுப் பாலையே இன்று பலரும் சொல்லுவார்கள். உண்மையில் எருமைப் பாலே சிறந்தது {பசுப் பாலினை விட எருமைப் பாலே அதிகளவு கொழுப்புடையது, கொழுப்புக்கேற்பவே பாலின் பெறுமதி காணப்படும்} . எருமையானது இறைச்சி, பால் ஆகிய இரு அடிப்படைகளிலும் எவ்வாறு மாடுகளை விடச் சிறப்பானது என இக் கட்டுரையின் முதலாவது பின்னிணைப்புக் குறிப்பில் காண்க(1). மக்களுக்குத்தான் எருமையின் அருமை புரியவில்லை எனில் அரசாவது புரிந்து வைத்துள்ளதா எனில் அதுவுமில்லை. கோசாலைகள் அமைத்து மாடுகளைப் பேணுவது போன்ற வசதிகளோ அல்லது மாடுகளைக் கொண்டு போகும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய விலங்குகள் நல உரிமை சார்ந்த கட்டுப்பாடுகள் எதுவுமோ எருமைகளுக்கு இல்லை. எருமைகள் எவ்வாறு எல்லாம் அரசால் வஞ்சிக்கப்படுகின்றன என இன்றைய இந்திய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தி எழுதிய கட்டுரையினை இரண்டாது குறிப்பில் விரிவாகக் காண்க (2). சரி, இவ்வாறு எருமையானது காலங்காலமாகவே வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளதா என இனிப் பார்ப்போம்.
சிந்துவெளியில் எருமை :-
சிந்துவெளி நாகரிகத்தில் எருமையானது கொண்டாடப்பட்டு வந்துள்ளமையினை, சிந்துவெளி முத்திரைகள் எமக்குக் காட்டும் {படங்கள் 2,3 காண்க}. உலகிலேயே முதன்முதலில் நீர் எருமைகள் வீட்டு விலங்குகளாக பழக்கப்பட்டது சிந்துவெளியிலேயே என்றும் இங்கிருந்தே நீர் எருமைகள் மெசப்போத்தேமியாவிற்குச் சென்றது என்றும் சான்றுகள் காட்டுகின்றன. சிந்துவெளி முத்திரைகளில் எருமையினை உள்ளடக்கிய சடங்குகளைக் கூடக் காணலாம் (3). இன்றும் பழங்குடி மக்களிடம் எருமையானது கொண்டாடப்பட்டே வருகின்றது. அண்மையில் அரியானா மாநிலத்தில் ராகர்கி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4500 ஆண்டுகளுக்கு முந்திய சிந்துவெளி நாகரிகத்தினைச் சேர்ந்த எலும்புக்கூடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மரபணுச் சோதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஒன்று செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியி டப்பட்டிருந்தது (இதனை குறிப்பு 4 இல் காணலாம்). இந்த ஆய்வு சிந்துவெளி நாகரிகமானது ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலத்தினைச் சேர்ந்தது எனவும், சிந்துவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடர்களுடையது எனவும் தெளிவுறுத்தியிருந்தது (4). இந்த ஆய்வின் நீட்சியானது சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மரபணுவானது இன்றைய தென்னிந்தியர்களின் மரபணுக்களுடனேயே ஒத்துப் போவதாகவும், அதிலும் குறிப்பாக நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்கள் போன்ற பழங்குடிகளின் மரபணுக்களே பெரிதும் ஒத்துப் போவதாகவும் குறிப்பிடுகின்றது. இந்தத் தோடர்களே எருமையினை இன்றும் சடங்குகளில் முதன்மைப்படுத்துவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். மேலும் நீலகிரி மலைப் பகுதியிலுள்ள மரபுரீதியான எருமைகள் `தோடா` என அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலே மரபணுக்கள் எவ்வாறு சிந்துவெளியின் தொடர்ச்சியாக நீலகிரி மலைப் பகுதி பழங்குடிகளைக் காட்டுகின்றதோ, அதே போன்று சங்க இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் அதே தோடர்களே காணப்படுவதனை இன்னொரு சான்று காட்டும். அதாவது சங்க இலக்கியங்களின் அகப் பாடல்களில் தலைவன்-தலைவியின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் பாடப்படும் ஒரு மரபு சங்க காலப் பாடல்களிலுண்டு; அந்த மரபினை இன்று வரை {ஆய்வின் காலம் வரை- 1950/1960கள் வரை} கடைப்பிடிக்கும் மரபு தோடர்களிடமே காணப்பட்டதாக பேரா.க.கைலாசபதி கூறுவார்(5). எனவே சிந்துவெளி நாகரிகத்தினையும், சங்க காலப் பாடல்களையும் இணைக்கும் புள்ளிகளில் ஒன்றான தோடர்கள்களால் எருமைகள் போற்றப்படுவதால்; சங்க இலக்கியங்களும் எருமைகளைப் போற்றியிருக்க வேண்டும் அல்லவா! பார்ப்போம்.
சங்க இலக்கியங்கள் பாடும் எருமைகளின் அருமை:-
சங்க இலக்கியங்கள் எருமைகளை எப்படிப் பார்க்கின்றன எனப் பார்ப்பதற்கு முதலில் ஒரு அகநானூற்றுப் பாடலினைப் பார்ப்போம்.
“வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி”
:{அகநானூறு 146}
மேலுள்ள பாடலில் எருமையானது `அண்ணல் ஏஎறு` (அண்ணல் எருமை) எனப் புகழப்படுவதனைக் காணலாம். பொதுவாக மதிப்பிற்குரியவர்களையே `அண்ணல்` என அழைப்போம் {எ.கா= அண்ணல் காந்தி, அண்ணல் அம்பேத்கார்} . அவ்வாறான மதிப்பிற்குரிய சொல்லால் எருமை அழைக்கப்படுவதனைக் காணலாம். இன்னொரு அகநானூற்றுப் பாடலையும் பார்ப்போம்.
“துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, 5
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்”
: { அகநானூறு 316}
இங்கு எருமை மாடானது போர் வீரனுடன் {மள்ளன்} ஒப்பிடப்படுவதனைக் காணலாம். இன்னொரு கலித்தொகையினைப் பார்ப்போம்.
“தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம் எல்லாம் தனித்தே ஒழிய
வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒருமணம் தான்அறியும் ; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்இயல்பு அன்றே”
:(கலித்தொகை- 114 : 12-21)
{பொருள்:::என் உறவினர், வீட்டில் மணலைப் பரப்பிச் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த எருமையின் கொம்பை வழிபடுகின்றனர். உறவினர் நடத்த எண்ணும் திருமணம் (பெருமணம்) வேறு ஒருவனுக்கு என்னை மணம் முடிப்பதற்காக என்பதால், இரண்டு மணம் உண்டாகின்றது. விரிந்த கடலை ஆடையாக உடுத்திய உலகத்தைப் பெற்றாலும் ஆயர் மகளுக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை”. இதுவே இப்பாடலின் பொருள் ஆகும்}.
இப் பாடலில் எருமையின் கொம்பு {சில உரைகளில் எருமை} வழிபடப்படுவதனைக் காணலாம். இது ஏற்கனவே நாம் பார்த்த சிந்துவெளி நாகரிகச் சடங்கின் தொடர்ச்சியாகும். இவை மட்டுமல்ல மேலும் பல இடங்களில் சங்க இலக்கியங்கள் எருமையினைக் கொண்டாடுவதனை திருத்தம் பொன் சரவணன் எழுதிய `சங்க இலக்கியத்தில் விலங்கியல்` என்ற கட்டுரையில் காண்க ( 6) . தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியி லும் எருமை கொண்டாடப்படுவதனைக் காணலாம்.
எருமை தாழ்ந்தது எவ்வாறு?
இவ்வாறு பழங் காலத்தில் தமிழர்களால் கொண்டாடப்பட்ட எருமை பார்ப்பனிய வஞ்சனையாலேயே வீழ்ந்தது. பொதுவாகக் கறுப்பான தமிழர்கள் உட்பட்ட பழங்குடிகளிடமிருந்த அதிகாரம் ஒப்பீட்டுரீதியில் வெள்ளையான பார்ப்பனர்களிடம் கைமாறியபோது, கறுப்பு விலங்குகளும் சடங்குகள் பழக்க வழக்கங்களிலும் தாழ்த்தப்பட்டது. எருமை மட்டுமல்ல; கரும்பருந்தினை பறைப் பருந்து (செம்பருந்து- பார்ப்பரப் பருந்து) எனவும் கறுப்பான பாம்பினை பறைப் பாம்பு (வெள்ளைப் பருந்து- பார்ப்பரப் பருந்து) எனவும் பெயர்கள் மாற்றப்பட்டன. இந்த அடிப்படையிலேயே வெள்ளையான பசு புனிதமாகவும், எருமை வெறுப்புக்குரியதுமாக்கப்பட்டது. எருமை புறக்கணிக்கப்பட்டமைக்கு அதன் நிறம் ஒரு காரணம் எனில் தமிழர்களின் தொன்மத்தினைத் தாழ்த்துதல் இன்னொரு காரணமாகும். இதன் தொடர்ச்சியாகவே எருமை எமனின் ஊர்தியாக்கப்பட்டது. இன்னொரு நுட்பமாகவே எருமைத் தலையுடைய மகிசாசூரன் அழிப்பினைக் குறிக்கும் நவராத்திரி விழாவும் ஆகும்.
முடிவு:-
பார்ப்பனிய வஞ்சனையில் எருமையின் அருமை மறந்து எமது வீழ்ச்சியினை நாமே நவராத்திரி எனக் கொண்டாடுகின்றோம். எருமை தொன்மையானது மட்டுமல்ல, பொருளாதாரரீதியாகவும் நன்மை அளிக்கக்கூடியது. காட்டாக, அரியானாவில் வாழும் யுவ்ராச் என்பவர் ஒரு எருமை மூலம் 5 மில்லியன் ரூபாக்களை ஆண்டு வருமானமாகக் கொள்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா! (7). இதனை ஒரு புறநடையான வருமானமாகக் கொண்டாலும், எருமை வளர்ப்பினூடாக நல்ல வருமானம் கிடைக்கும் என்பதனை மறுக்க முடியாது. எருமையின் அருமையினைப் புரிந்து கொள்வோம். எம்மை நாமே தாழ்த்தும் சடங்குகளிலிருந்து விலகியிருப்போம்.
குறிப்புகள்:
- Cow belt or Buffalo nation
- Why buffaloes have no sympathisers?
https://english.mathrubhumi.com/news/columns/faunaforum/why-buffaloes-have-no-sympathisers–1.10407
- The Buffalo Sacrifice
https://www.harappa.com/blog/buffalo-sacrifice
- செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழ்
- தமிழ் வீரநிலைக் கவிதை – க.கைலாசபதி {Pages 14-15}
- சங்க இலக்கியத்தில் விலங்கியல்
https://groups.google.com/forum/#!topic/mintamil/7MzVRXBWzdo
- ஒரே ஒரு எருமையால் 5 மில்லியன் ரூபா ஆண்டு வருமானம்.
- ஆர். பாலகிருஸ்ணன் சொற்பொழிவு
.
“சிந்துவெளி நாகரிகம் முழுக்க முழுக்க திராவிடர்களுடையது எனவும் தெளிவுறுத்தியிருந்தது”
அப்படி எந்த ஆய்வும் அறிஞரும் சொல்லவில்லை. சிந்துவெளி நாகரிகம் சமஸ்கிருத வேத நாகரிகம் கிடையாது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அந்த நாகரீகம் திராவிட அல்லது முண்டா அல்லது வேறு நாகரீகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எந்த நாகரீகம் என இன்னும் தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை. இந்தியத் துணை கண்டத்தில் இருக்கும் அனைத்து மக்களிடத்திலும் மரபணுவில் 70% சிந்துவெளி மரபணு தான். வட இந்தியாவில் இருக்கும் ஐரோப்பிய தன்மை வாய்ந்த உயர் ஜாதியினரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
கீழுள்ள ஆய்வுக் கட்டுரையினைப் பொறுமையாகப் படிக்கவும்
https://scholar.harvard.edu/files/vagheesh/files/piis0092867419309675.pdf?fbclid=IwAR34emConzwwcdVoDwv_fp4o3y3v9i51GlS_itxnKUXv62Tyii-uxwYWMFU
https://timesofindia.indiatimes.com/city/chennai/indus-symbols-and-their-dravidian-connections/articleshow/67120027.cms
மேற்கண்ட கட்டுரைகளை நான் முன்பே படித்திருக்கிறேன். சிந்து சமவெளி நாகரிகம் தொல் திராவிட அல்லது முண்டா நாகரீகமாக இருக்கலாம் என்பது தான் உலக அளவிலான அறிஞர்களின் கருத்து. தொல் திராவிட நாகரிகம் தான் என்பதற்கு வலுவான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை. குறிப்பாக அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பது மிகப் பெரிய புதிராக இருக்கிறது. கிடைத்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு அந்த நாகரீகம் சமஸ்கிருத வேத நாகரிகம் இல்லை என்ற முடிவுக்கு மட்டுமே வர முடிகிறது. அப்படியே ஒருக்கால் சிந்து நாகரிகம் திராவிட நாகரிகம் என வைத்துக்கொண்டாலும் அது நிச்சயமாக தமிழ் மொழி பேசிய நாகரீகமாக இருக்க வாய்ப்பில்லை. அங்கு வாழ்ந்த மக்கள் ஏதோ ஒரு தொல் திராவிட மொழியை பேசினார்கள் என்கிற முடிவுக்கு மட்டும் வர முடியும். காரணம் திராவிட மொழி குடும்பம் தமிழ் மொழியை விட பழமையானது. பண்டு ஒரு காலத்தில் இந்திய துணைக்கண்டத்தில் பேசப்பட்ட தொல் திராவிட மொழி காலப்போக்கில் வட திராவிடம், நடுத் திராவிடம் மற்றும் தென் திராவிடம் என பிரிந்தது. தென்திராவிட த்திலிருந்து கன்னடம் துளு தமிழ் ஆகிய மொழிகள் உருவானதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கையில் சிந்துவெளி நாகரிகம் தொல் திராவிட நாகரீகமாக இருக்கலாம் என சொல்லலாமே தவிர தமிழ் நாகரிகம் என நிச்சயம் சொல்ல முடியாது. கீழடியில் கிடைக்கும் சிந்துசமவெளி யோடு அடையாளப்படுத்த கூடிய சின்னங்கள் வட இந்தியாவிலும் கங்கை சமவெளியில் நிறையக் கிடைத்துள்ளன. தென் இந்தியா வட இந்தியா என்றில்லாமல் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் அனைத்து மக்களும் (வடகிழக்கு இந்தியா தவிர) தங்கள் மரபணுவில் குறைந்தபட்சம் 70% சிந்துவெளி கூறுகளை கொண்டவர்கள். இதற்கு ஐரோப்பிய தன்மை வாய்ந்த உயர் ஜாதி வட இந்தியர்களும் விதிவிலக்கு அல்ல. இந்தியாவுக்குள் வந்த ஆரியர்களில் பெரும்பான்மையினர் ஆண்கள் எனவும் அவர்கள் வம்ச விருத்திக்காக சிந்து சமவெளி பெண்களோடு இனக்கலப்பு செய்து புதிய மக்கள் கூட்டத்தை உருவாக்கினார்கள் என மரபணுவை ஆராய்ந்த அறிஞர்கள் கூற்று. தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்கள் என சொல்லிக்கொண்டு திரியும் கூட்டம் விதந்தோதும் கால்டுவெல் பாதிரியார் மற்றும் தேவநேயப்பாவாணர் ஆகியோருக்கு வட இந்தியாவில் திராவிட மொழிகள் பேசப்பட்டது தெரியாது. இவர்களைப் பொருத்தவரை திராவிட மொழிகள் என்றால் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் துளு ஆகியவை தான். மற்ற திராவிட மொழிகளைப் பற்றி குறிப்பாக பாகிஸ்தானில் இருக்கும் பிராகுய் குறித்து பொதுவாக தெரியாது. சங்க கால நாகரீகம் கலப்பு நாகரிகம் என சொல்லலாமே தவிர தூய திராவிட நாகரிகம் என சொல்ல முடியாது. பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத கலாச்சாரத்தின் தாக்கம் சங்க இலக்கியத்தில் வெளிப்படையாக தெரிவது. 1822 இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை ஒரு கோடியே 34 லட்சமாக இருந்தது. அப்படியே பின்னோக்கி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சங்ககாலத்திற்கு போனால் அப்போது தென்னிந்தியாவில் தமிழ் பேசக் கூடிய மக்கள் அதிகபட்சம் 10 லட்சம் பேர் இருந்திருப்பார்கள். அந்தப் பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு இனக்குழுவால் அந்தக் காலத்தில் என்ன சாத்தியமோ அதைத்தான் யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட அரசியல் மற்றும் சாதி அரசியல் சார்ந்த காழ்ப்புணர்வால் அரை உண்மைகளைத் திரித்து பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் ஒரு கூட்டம் தமிழறிஞர்கள் என்னும் பெயரில் பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறது. இவர்களுக்கும் அறிவுத் துறைக்கும் சம்பந்தமே கிடையாது. இந்தத்தளம் ஈழத் தமிழர்களால் நடத்தப்படுகிறது என அறிந்தேன். ஈழத்தமிழர்கள் அதிகம் படித்தவர்கள் அறிவாளிகள் உலக நிலவரம் தெரிந்தவர்கள். இம்மாதிரியான கட்டுரைகளை **கூடாது. தமிழ் மொழிக்கு இல்லாத பெருமைகள் எல்லாம் இருப்பதாக மாய பிம்பத்தை ஏற்படுத்துபவர்கள் உண்மையில் அந்த மொழிக்கு எதிரானவர்கள். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரியர் வருகைக்கு முற்பட்டதே சிந்துவெளி நாகரிகம். எனவே ஆரியருக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை. முற்றுப்புள்ளி