யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையேயான மோதல் தொடர்பாக வழமையான அறிக்கைகள், கருத்துக்கள் என்பன பல்வேறு அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் வெளியாகின்றன. வழமைக்கு மாறாக தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் இச் சம்பவத்தை இதுவரை இனவாதத்தைத் தூண்டும் கருவியாகப் பயன்படுத்தாமை வரவேற்கத்தக்க முன்னேற்றத்தை முன்னறிவித்துள்ளது. செய்தி என்பதை நுகர்வுப் பண்டமாக்கி விற்பனை செய்யும் சில புலம்பெயர் ஊடகங்களைத் தவிர பெரும்பாலான ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டுள்ளன.
இன்னும் ஆழ் மனத்தில் அச்சம் சூழ்ந்த சமூகக் கூட்டு மன உணர்வைக் கொண்ட மக்கள் கூட்டத்தைக் கொண்ட வட கிழக்கு மக்கள் மத்தியில் இலங்கைப் பேரினவாத அரசு நம்பிக்கை தருவதற்கான எந்த முன் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஒற்றையாட்சிக்கு அதிகமான எந்தத் தீர்வையும் வழங்க தயாரில்லாத அரசு இலங்கையின் அதிபயங்கரப் போர்க் குற்றவாளிகளையும் இனக் கொலையாளிகளையும் சுதந்திரமாகப் பாதுகாத்து வருகின்றது.
நல்லாட்சி என்ற பெயரில் நடத்தப்படும் சூறையாடலை வட கிழக்கின் மூலை முடுக்கெல்லாம் முளைத்தெழும் புத்தர் சிலைகள் மூடி மறைக்கின்றன.
தமிழ்ப் பேசும் மக்கள் மற்றொரு இனப்படுகொலையைச் சந்திக்க மாட்டார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.
தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் அச்ச உணர்வையும், சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள பேரினவாத உணர்வையும் சமூகவிரோதிகள் பயன்படுத்திக்கொள்வதற்கு அத்தனை கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில் பல்கலைக்கழக மாணவர்கள் மோதலுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது பலரதும் அனுமானம்.
பேரினவாதம் என்பது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படும் சூழலில், சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதம் பேணப்படுவதையே இலங்கை அரசு விரும்புகிறது. பேரினவாதத்தால் ஏற்படும் அச்ச உணர்வு தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இழையோடும் சூழலில் சிங்கள மாணவர்களது நடவடிக்கை மோதலை உருவாக்கும் என்பதைத் தெரிந்துகொண்ட அரசியல் உள் நோக்கம் கொண்டவர்களே இச் சம்பவத்தின் பின்புலத்தில் செயற்படுள்ளனர் என்ற சந்தேகங்கள் நியாயமானவையே.
ஆக, இச் சம்பவங்களின் விளைவுகளுக்கு இலங்கை அரசும், அதன் ஊதுகுழலாகச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
செய்தி வியாபாரிகளுக்கும், இனவாதிகளுக்கும் தீனிபோடும் இந்த இரண்டு அதிகாரவர்க்கக் குறியீடுகதும் தலைமைகள் பிரதிடப்பட்டால் மட்டுமே மற்றொரு அழிவிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
இதற்கு இரு பக்கங்களிலும் தவறு உண்டு. ஆனால் இதனை இரு மாணவர் குழுக்களிடையேயான மோதலாகவே நோக்கப்பட்டு நிலமையினை குறுங்காலத்தில் தீர்த்துவிட்டு, பின்பு நீண்ட கால நோக்கில் பிரச்சனைக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுத் தீர்க்கப்படவேண்டும்.