வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்போம் – புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி
கடந்த 08.11.2015 ல் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் உணவு அருந்தாப் போராட்டத்தை மீண்டும் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த மாத முற்பகுதியில் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதியின் உறுதிமொழி காரணமாகக் கைதிகள் அப் போராட்டத்தை இடைநிறுத்திக்கொண்டனர். நவம்பர் 7ம் திகதிக்கு முன்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே அவ் உறுதிமொழியாகும்.
ஆனால் குறித்த 7ம் திகதி வரை விடுதலைக்குரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் ஏமாற்றம் அடைந்த அரசியல் கைதிகள் தமது உணவு அருந்தாப் போராட்டத்தை நவம்பர் 8ம் திகதியிலிருந்து மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களது விடுதலைக் கோரிக்கை முற்றிலும் நியாயமானது என எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி வற்புறுத்தி அனைத்து ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகளோடும் மக்களோடும் இணைந்து வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. எனவே அனைத்து மக்களும் அணிதிரண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என எமதுகட்சி வேண்டுகோள் விடுக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட பல வருடங்களாக விசாரணையின்றியும் விசாரணையின் பெயரிலும் தடுத்து வைக்கப்பட்டு வந்துள்ளனர். இத் தடுப்பிற்குக் காரணமாக இருந்து வருவது அன்று ஜே.ஆரினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமாகும். பின்வந்த அனைத்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளும் அச் சட்டத்தை பயன்படுத்தியே வந்துள்ளனர். நாட்டின் தேசிய இனப்பிரச்சினை போராட்டமாகவும் யுத்தமாகவும் தொடர்ந்ததன் மூலமே தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டனர். கடந்தகாலத்தில் அவ்வப்போது ஏனையஅரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டு வந்துள்ளனர்.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் மட்டும் இனப்பாகுபாட்டு அடிப்படையில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15 வருடங்களாகப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ்த் தாய் அண்மையில் குற்றமற்றவர் என மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். அப்படியாயின அத்தமிழ்த் தாயின் நிலை என்ன?
நாட்டின் நீதிக்காகவும் இனங்களின் நல்லிணக்கம் சமாதானம் சுபீட்சம் கிடைக்கும் என்று நம்பியே நாட்டின் பெரும்பான்மையான தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் மட்டுமன்றி ஜனநாயகத்தை விரும்பிய சிங்கள மக்களும் இன்றைய ஆட்சிக்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டுவந்தனர்.
ஆனால் இத்தகைய பாராளுமன்ற ஆளும் வர்க்க ஆட்சியானது உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் கொண்டுவந்து விடும் என எமது கட்சி முன்பும் நம்பவில்லை. இப்போதும் நம்பவில்லை. இதனை மக்கள் இப்போது தங்கள் அனுபவ வாயிலாக உணரக் கூடிய நிலை உருவாகிவருகிறது.
நல்லாட்சி எனக்கூறி உறுதிமொழிகளை மறந்த நிலையில் தமிழ்அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதானது பேரினவாத ஒடுக்கு முறையின் நீடிப்பேயாகும். அண்மையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சில அரசியல் பிரச்சினைகள் இருப்பதாக கூறியதன் அர்த்தம் அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேரினவாத சக்திகளின் குறுக்கீடு இருந்து வருவதையே காட்டுகிறது. ஆதலால் அத்தகைய குறுக்கீட்டையும் தடையையும் தகர்ப்பதற்குப் பரந்து பட்ட
வெகுஜனப் போராட்டங்கள் அனைத்து மக்களையும் இணைத்த வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். தெற்கின் ஜனநாயக முற்போக்கு சக்திகளும் உழைக்கும் சிங்கள மக்களும் வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட மக்களோடு ஏற்கனவே பல்வேறு அமைப்புகளின் ஊடாக ஜக்கியப்பட்டு அனைத்து அரசியல் கைதிகளினதும் விடுதலைக்குப் போராடி வருகிறார்கள். அத்தகைய வெகுஜனப் போராட்டங்கள் பரந்து விரிந்த அளவில் முன்னெடுக்கப்படுவதை எமது கட்சி வலியுறுத்தி நிற்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பும் நிபந்தனையற்ற விடுதலையும் வேண்டும்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்!
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவான அரசியல் தீர்வு வழங்கு!
வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்போம்!
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வேண்டுகோள்!
இப்பிரசுரம் 62, கே.கே.எஸ் வீதி, கொக்குவிலிலிருந்து கா. செல்வம் கதிர்காமநாதன் அவர்களால் வெளியிடப்பட்டதாகும்.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி