அரைக் கறுப்பினத்தவரான பாராக் ஹுசையின் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட போது அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது போன்று மக்கள் ஆர்ப்பரித்தார்கள். செத்துப்போய்க்கொண்டிருந்த முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், பாராளுமன்ற அரசியல் வழிமுறைக்கும் புத்துயிர் கிடைத்துவிட்டதாக பலர் நம்பிக்கைகொள்ள ஆரம்பித்தனர். அமெரிக்காவைக் கனவு நாடாகவும் சொர்க்கமாகவும் நம்பியவர்கள் தமது நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டது என மகிழ்ச்சி கொண்டனர்.
உலகம் முழுவதும் அதிகமாகக் கொலைகளில் ஈடுபடும் இராணுவம் அமெரிக்காவினுடையதே என்பதெல்லாம் உள்நாட்டில் செல்லுபடியாகாது என ஒபாமாவை ஆதாரம் காட்டி விவாதிக்க ஆரம்பித்தனர்.
கறுப்பினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை அமெரிக்காவின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது. 46.3 வீதமான கறுப்பின மக்கள் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஒபாமாவின் ஆட்சியில் அமெரிக்கப் போலிஸ் கறுப்பினத்தினரைக் கொல்வது நாளாந்த நிகழ்வாகிவிட்டது.
-கடந்த வருடத்தில் 102 கறுப்பின நிராயுதபாணிகளை அமெரிக்கப் போலிஸ் கொன்றுள்ளது
-அமெரிக்க சனத்தொகையில் கறுப்பினத்தினர் 13 வீதமாக அமைந்திருக்கும் நிலையில் கொல்லப்படும் நிராயுதபாணிகளில் 37 வீதமானர்கள் கறுப்பினத்தவர்கள்.
– இத் தொகை போலீஸ் கொலை செய்யும் வெள்ளையினத்தவரின் தொகையை விட 5 மடங்கு அதிகம்
தனது ஐந்து வயது மகனுடன் பயணம் செய்த கறுப்பினத் தாய் ஒருவர் கடந்த 2ம் திகதியன்று போலிசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது ஐந்து வயது மகன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதி ஒழுங்கை மீறியமை தொடர்பாகப் போலிஸ் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது, கொலை செய்யப்பட்டவர் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகப் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட போதும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகின்றது.
போலிஸ் பயங்கரவாதம் நாளாந்தம் அதிகரிக்கும் நிலையில் இச் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே.