பொதுவான மக்களின் பிரச்சனைகளிலிருந்தும், உண்மைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்புவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களை கட்டவிழ்த்துவிடுவதென்பது ஆளும்வர்க்கங்களின் தந்திரோபாயங்களில் ஒன்று. அவ்வாறான தகவல்கள் வியாபாரமயபடுத்தப்பட்ட சமூகப் பிரக்ஞையற்ற ஊடகங்களால் மக்கள் மத்தியில் எந்தக் குறிப்பான ஆதாரங்களுமின்றி பரப்பப்படும்.
அதன் பின்னணியில் காணப்படும் அரசியல் என்பது ஆபத்தான பின் விழைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறானவற்றுள் ஒன்றே விஷ ஊசி ஏற்றப்பட்டதாக முதலில் சந்தேகத்திற்குரிய அரசியல்வாதிகளாலும், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களாலும் பரவவிடப்பட்ட வதந்தி. இலங்கையின் தேசிய இன ஒடுக்குமுறை வரலாற்றில் இன்றைய இலங்கை அரசு மிகவும் திட்டமிட்ட வகையில் தமிழ் பேசும் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் விழுமியங்கள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் தேசிய இன ஒடுக்குமுறை என்பது நேரடியாகத் தெரிந்த இராணுவ ஒடுக்குமுறையாக அமைந்திருந்தது.
இன்றைய அரசாங்கம் நல்லிணக்கம், நல்லாட்சி என்ற சொல்லாடல்களின் கீழ் தேசிய இனங்களை சத்தமின்றி அழிப்பதற்கு திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், இராணுவக் குடியிருப்புக்கள் போன்ற வெளிப்படையாகத் தெரியும் நடவடிக்கைளையும், பாராளுமன்ற ஒற்றையாட்சி முறையைப் பாதுகாப்பதற்கு பல்வேறு மறைமுக நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.
வன்னிப் படுகொலையின் போது நேரடியாக இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களையும், அதனைத் திட்டமிட்டவர்களையும், போர்க்குற்றவாளிகளையும் பாதுகாத்துவருகின்றது. நல்லாட்சி என்ற தலையங்கத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கும் அரசு, சாரி சாரியாக மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டவர்களை மதிப்பிற்குரியவர்களாகப் பேணிவருகிறது.
சரணடைந்த போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறைகளில் இன்னும் விசாரணையின்றி அடைக்கப்பட்டிருப்பவர்கள் போன்றவர்கள் தொடர்பான குறைந்தபட்சத் தகவல்களைக் கூட வெளியிட மறுக்கும் சமூகவிரோத அரசின் பின்னணியில் அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரவர்க்கங்கள் செயற்படுகின்றன.
இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பேரினவாதக் கோட்பாடு இழையோடும் அரசியல் அழிவு நடவடிக்கைகளாகும். தவிர, அமெரிக்க அரசின் போர் வெறிக்கு தெற்காசியாவின் இராணுவ மையமாக இலங்கை மாற்றமடையும் அபாயம் மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி வருகின்றது. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் சூறையாடலுக்கும், அமெரிக்க இராணுவமயப்படுத்தலுக்கும் இலங்கை அரசாங்கம் தங்குதடையின்றி வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.
இவை அனைத்திலிருந்தும் மக்களைத் திசைதிருப்பி தவறான தகவல்கள் அடிப்படையில் கொதி நிலையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை பேணும் நோக்கில் விஷ ஊசி விவகாரம் போன்றவை கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
வெறுமனே பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு தனது வாசகர் தொகையை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள பின் தங்கிய தமிழ் ஊடகங்களைத் தவிர இச் செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபையின் விக்னேஸ்வரன் சார்ந்தவர்கள் உட்பட்டவர்களால் தோற்றுவித்துப் பரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை அரசின் தடுப்பு முகாம்களும் அவற்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்து மரணித்தவர்களின் விபரங்களும் கீழே வெளியிடப்படுகின்றன. தடுப்பிலிருந்த பன்னிரண்டாயிரம் போராளிகளில் மரணித்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது விஷ ஊசி ஏற்றப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் கூறியுள்ளமையை இங்கு குறித்துக்காட்டத்தக்கது.
கீழே தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஊடகவியாபாரிகளும், வாக்குவங்கி அரசியல் வாதிகளும் கட்டவிழ்த்துவிடும் வதந்திகள் போன்று 103 போராளிகள் மரணிக்கவில்லை.
இனியொரு… வெளியிடும் தகவல்கள் தவறானது எனக் கருதினாலோ அன்றி மேலதிகமாக மரணித்தவர்களின் தொகை இருக்கலாம் எனக் கருதினாலோ, பின்னூட்டங்களாக அவற்றைப் பதிவிடலாம்.
இல | முகாம் | இறந்தவர் பெயர் | இறப்பின் காரணம் |
01 | பம்பைமடு – பெண்கள் | சிவகௌரி – கிளிநொச்சி | தலையில் புற்று நோய் |
02 | பூந்தோட்டம் பெண்கள் | ||
04 | பம்பைமடு – ஆண்கள் | ||
05 | பம்பைமடு – ஆயுள்வேத நிலையம் – ஆண்கள் | ||
06 | நெளுக்குளம் – ஆண்கள் | வனசுதர் –மட்டக்களப்பு. | தடுப்பில் இருந்த போதே மரணம் |
07 | மருதமடு – ஆண்கள் | ||
08 | வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்- ஆண்கள் | ||
09 | ஓமந்தை மத்திய மகாவித்தியாலயம் – ஆண்கள் | ||
10 | வேப்பங்குளம் – முஸ்லீம் மகா வித்தியாலயம் – ஆண்கள் | ||
11 | பூந்தோட்டம் கூட்டுறவுக் கல்லூரி – ஆண்கள் | ||
12 | வெலிக்கந்தை தடுப்பு முகாம் – ஆண்கள் | ||
14 | கந்தபுரம் வாணி வித்தியாலயம் – ஆண்கள் | ||
15 | உளுக்குளம் தடுப்பு முகாம் – ஆண்கள் | ||
15 | வெளிக்குளம் தடுப்பு முகாம் – ஆண்கள் | ||
17 | கோவிற்குளம் இந்துக் கல்லூரி – ஆண்கள் | ||
18 | முதலியார்குளம் தடுப்பு முகாம் – ஆண்கள் | ||
19 | இறம்பைக்குளம் தடுப்பு முகாம் – ஆண்கள் |
பக்க நோயால் பீடிக்கப்பட்டு மரணமடைந்தவர்கள். (இவர்கள் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டிருந்தமையால் பம்பைமடு ஆயுள்வேத முகாமில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்)
- சசிக்குமார் (ராகுலன்) – பாரதிபுரம், கிளிநொச்சி.
- ரகுராம் – விநாயகபுரம் – கிளிநொச்சி.
- ஹேமா – பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
இனம் தெரியாத நோயினால் மரணமடைந்தவர்கள்:
- சோ.டிகுணதாசன் – பாண்டியன் குளம், முல்லைத்தீவு
*தவிர, மகசீன் சிறைச்சாலை, பூசா சிறைச்சாலை போன்றவற்றில் தடுத்துவைக்கப்பட்ட தமிழினி உட்பட்ட போராளிகளின் தகவல்கள் எமக்குக் கிடைக்கவில்லை. மேலும், சில இரகசிய முகாம்கள் இருந்ததாக சில அரசியல்வாதிகள் கூறிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.