பிரபாகரன் போர் களத்தில் கொலை செய்யப்படவில்லை என்றும், உயிருடன் கைது செய்யப்படபின்னரே கொலை செய்யப்பட்டார் என்றும், மகிந்த ராஜபக்ச பிரபாகரனைச் சந்தித்க பின்னரே அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் ஊடகங்களில் வெளியாகிய தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என மகிந்தவின் நெருங்கிய சகாவும், முன்னை நாள் அமைச்சருமான கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச ஜோர்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தமையால் இச் செய்தி பொய்யானது என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இத்தகவலைத் தெரிவித்த ரம்புக்வெல தேர்தல் காலத்தில் இத்தகவல்கள் வெளியிடப்படுவது உள் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்திருந்தார்.
மகிந்த அரசின் தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராகி உதவி அமைச்சராகப் பதவிவகித்த கருணாவை மேற்கோள் காட்டி பிரபாகரன் உயிருடன் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. பின்னதாக அத் தகவல்கள் தன்னால் கூறப்படவில்லை எனக் கருணா மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இத்ற்கு முன்னதாக இனியொரு இணையத்திற்கு சனல் 4 ஊடகவியலாளர் தனது சிங்கள ஆவணப்படம் தொடர்பாக வழங்கிய நேர்காணலில் பிரபாகரன் போர்க்களத்தில் கொல்லப்படவில்லை என்பதைத் தடையவியல் ஆதாரங்கள் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
உலகின் மூலை முடுக்கெல்லாம் உளவு பார்க்கும் அரசுகள் பிரபாகரனின் மரணத்தின் பின்னாலுள்ள உண்மையை வெளியிடத் தயாரில்லை.
பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் பிழைப்புவாதிகள் அந்த படுகொலை தொடர்பான உண்மை வெளிவராமல் தடுக்கப்படுவதையே விரும்புகின்றனர். பிரபாகரன் உயிருடன் வாழ்கிறார் என்ற மாயையை எற்படுத்தி வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் அவரை அனாதையாக வைத்திருக்கவே விரும்புகிறது. மைத்திரி அரசிடம் கூட இது தொடர்பான உண்மையை வெளியிடுமாறு இதுவரை யாரும் கோரிக்கை விடுத்ததில்லை.
2009 ஆம் ஆண்டு மே மாதம் பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியிருந்தால் தமிழ் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும். புலம்பெயர் நாடுகளில் போராட்டங்கள் எழுச்சிபெற்றிருக்கும். ஈழத் தமிழர்கள் தொடர்பான புதிய அரசியல் தோற்றம் பெற்றிருக்கும். நடந்த போராட்டத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய மக்கள் சார்ந்த அரசியல்திட்டம் தோன்றியிருக்கும்.
புலிகளின் தொடர்ச்சி என மாயையை ஏற்படுத்திவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரபாகரனின் மரணம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அவர்கள் நம்பும் ‘சர்வதேசத்தைக்’ கூடக் கேட்டதில்லை.
இனியொரு இணையத்திற்கு கலம் மக்ரே வழங்கிய நேர்காணல்:
]