இலங்கையிலிருந்து நியூசிலாந்து நோக்கிப் பயணித்த அகதிகள் கப்பலைச் செலுத்திவந்த மாலுமிகளுக்கு லஞ்சம் வழங்கி அகதிகளை இந்தோனேசியாவில் தரையிறக்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் கட்டளையிட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
சிட்னி மோர்னிங் ஹெரால்ட் என்ற அவுஸ்திரேலிய ஊடகம் இவ்வாதாரங்களை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்க டொலர்கள் இலங்கையிலிருந்து அகதிகளைக் கடத்திவந்த ஆறு மாலுமிகளுக்கு அவுஸ்திரேலியாவால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் நூசா தங்காரா திமூர் என்ற மானிலத்தின் போலிஸ் பொறுப்பதிகாரி தன்னிடம் சிக்கிய இந்த ஆதாரங்களை ஊடகங்களுக்கு வழங்கினார். அப்போது கருத்துத் தெரிவித்த அவர், ‘நாங்கள் ஆதாரங்களை உங்களிடம் தருகிறோம், இனிமேல் நீங்களும் ஏனைய அமைப்புக்களும் அவுஸ்திரேலிய அரசிடம் இதுகுறித்துக் கோருவது உங்களைப் பொறுத்தது’ எனக் கூறினார்.
லஞ்சம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களை கப்பலில் சென்ற அகதிகளும் வழங்கியுள்ளனர். இரண்டு படகுகளில் 65 அகதிகளை இந்தொனேசியாவை நோக்கித் திசை திருப்பியுள்ளனர். ஒரு பரல் எரிபொருள் மட்டுமே இந்தோனேசியா செல்வத்ற்கு இருபடகுகளுகும் எஞ்சியிருந்திருக்கிறது. ஆக, தற்கொலைக்கு அகதிகள் அனைவரையும் அவுஸ்திரேலிய அரசு அனுப்பி வைத்திருக்கிறதா என்று இந்தோனேசிய போலிஸ் அதிகாரி கேட்கிறார்.
கப்பல் கடற்பாறை ஒன்றைத் தாக்கியதாகவும், அதன் பின்னரே இந்தோனேசியக் கிராமவாசிகள் படகைக் காப்பாறிய்தாகவும் கூறும் இந்தோனிசிய அதிகாரி, கடலலை அதிகமாகவிருந்திருந்தால் அகதிகளைக் காப்பாற்றியிருக்க முடியாது என மேலும் குறிப்பிடுகிறார்.
இந்தோனிசியப் போலிஸ் அதிகாரி என்டாங், தனது விசாரணை முடிவுகளை தேசிய போலிஸ் இடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறுகிறார்.
இதே வேளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்திற்கான (UNHCR) இந்தோனேசியப் பிரதிநிதி தோமஸ் வார்காஸ் அகதிகளிடம் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்த தகவல்கள் அவுஸ்திரிலியா லஞ்சம் வழங்கியதை உறுதிப்படுத்துவதாகவும் கூறுகிறார்.
அவுஸ்திரேலியாவும் மேற்கு அரசுகளும் உற்பத்தி செய்யும் அகதிகள் உலகின் பாதுகாப்புத் தேடி உலகம் முழுவது அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்தியா மற்றும் ரோகோ, பெனின், கென்னியா, ரஷ்யா, துருக்கி, உக்ரையின், நேபாளம் போன்ற உலக வரைபடத்தின் அரைப் பகுதி நாடுகளில் தமிழர்கள் அனாதரவாக விடப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டின் இனவழிப்பின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக உலகின் சந்துபொந்துக்களிலெல்லாம் தமிழர்கள் மறைந்து வாழ்ந்துகொண்டிருக்க நினைவு நாட்களைக் களியாட்ட விழாக்களாக்கும் தமிழ்த் தலைமைகள் இனவழிப்பைத் துரிதப்படுத்தத் துணை செல்கின்றன.
அகதிகளைப் பாதுகாப்பதற்கென உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய நிறுவனம் UNHCR செயலிழந்து கேலிக் கூத்தாகிவிட்டது. முதலாளித்துவ ஜனநாயகம் கேலிக்கூத்தானது போல.