சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை உரிய விதிமுறைகளுடன் செயல்படுத்துமாறு தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
மோடி தலைமையிலான இந்திய அரசு பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுக்க 34,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு 5.35 லட்சம் கோடி செலவில் பிரமாண்டமான ஹைடெக் சாலைகளை அமைத்து வருகிறது. கட்டணம் செலுத்தி பயணிக்கும் இந்த சாலைகள் பெரும்பாலும் விவசாய நிலங்களைப் பிளந்து உருவாக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் முதல் சென்னை வரையில் 277.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு எட்டுவழிச் சாலை உருவாக்குவதற்கான அறிவிப்பாணையை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டன. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும் இந்த திட்டத்தின் ஒப்பந்தத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஒருவர் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதனால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எடப்பாடி ஆர்வம் காட்டினார்.
இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியையும் ரத்து செய்ததோடு எட்டுவழிச்சாலை திட்டத்தையே ரத்து செய்தது. இத்தீர்ப்பை விவசாயிகள் கொண்டாடிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரின.
இந்த வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் . சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கியிருப்பதன் மூலம் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது. ஆனால் , தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் நிலங்களை அள்வீடு செய்வது, கையகப்படுத்தியதையும் ரத்து செய்துள்ளது. நிலங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அந்தப் பகுதியை மட்டும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியை மட்டும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மீண்டும் உரிய அறிவிப்பாணைகள் வெளியிட்டு சுற்றுசூழல் உட்பட உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நிலம் கையகப்படுத்தி மீண்டும் எட்டுவழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால், சில ஊடகங்கள் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது போல பேசி வருகிறார்கள்.