கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணை இரண்டு தேசத்தில ஒண்டை கொண்டுவந்து தாறன் என்ர கட்சிக்கு அள்ளிப் போடுங்கோ என்று களம் இறங்கியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள் போய்விட்டால் காணும் அதுக்குப் பிறகு இரண்டில ஒண்டு பாக்கஇறதாச் சொல்லுறார். வெளியில இருந்து ரண்டில ஒண்டை எடுக்கேலாதோ என்று மக்கள் கேட்டாலும் உள்ளை இருந்து கேக்கிறமாதிரி வருமோ என்று அண்ணை அள்ளி வீசியிருக்கிறார்.
மக்களின் தீர்வை பெற்றுக் கொடுக்க ஏன் பாராளுமன்றம் போகவேண்டும்? தமிழ் மக்களது எந்த உரிமை பாராளுமன்றத்தில பேசியதால கிடைச்சது? செல்வநாயகம் ,அமிர்தலிங்கம், சம்பந்தன் இவை எல்லாரும் பாராளுமன்றத்தில பாய் விரிச்சுப் படுத்தோ கிடந்தவை? அவை உரிமை வேணும் எண்டு கேட்டு ஒண்டுமே பேசவே இல்லையோ? அப்பிடிப் பேசியிருந்தால், கேட்டும் குடுக்கேல்லை எண்டா, கஜேந்திரன் எப்புடி ரண்டில ஒண்ட வாங்குவார்?
பாராளுமன்றத்தில போய் அழுது அழுது கேட்பாரோ? நேற்று ஊரில் இருக்கும் பெரியவர் ஒருவரிடம் கஜேந்திரன் சொல்லுறதை செய்வான் போல கிடக்கு அவருக்கே புள்ளடி போடலாமே என்று கேட்டன். அதுக்கு அவர் சொன்னார் “தம்பி, உழுற மாடு ஊருக்குள்ளையே உழும், பாராளுமன்றத்தில போய் உழவேண்டியதில்லை “என்று.
இன்னொருவரிடம் கேட்டேன் விலை போகாத தலமை , தூய்மையிலும் தூய்மை என்றெல்லாம் சொல்லுறாங்களே அவங்களை ஏன் நீங்கள் நம்பிப் புள்ளடி போடக்கூடாது என்று. அதுக்கு அந்த மனுசன் சொன்னபதில் எனக்கு கன்னத்தில விளாசினது போல இருந்திது. ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டிறது அவன் விடுற விடுகையில இல்லைத் தம்பி அவன்ர வரலாறைப் பாருங்கோ எண்டார். அதுக்குப் பிறகு சொன்னார், அடி ஆமணக்கு நுனி நொச்சி மரம் எண்டு சொன்னா நம்புறதுக்கு நான் என்ன தம்பி அடி முட்டாளோ என்று.
விலை போகாத தலைமை ஏன் அமெரிக்காவின்ர நிதி நிறுவனத்தோட நிக்குது? விலை போகாத தலைமை ஏன் அமெரிக்கன் உயர்ஸ்தானியத்துக்கு அடிக்கடி போட்டு வருது.
இரண்டு தேசம் ஒரு நாடு. சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு ஆனா எப்பிடி இதை எடுப்பியள் எண்டு சொல்ல வேணும் தானே. பாராளுமன்றத்தில பறந்து பறந்து சுப்பர் மான் போல அடிச்சுக் கேப்பியளோ இல்லை, நல்லூர் கோயில் வாசலில நிண்டு நாதஸ்வரத்தில ஊதிக் கேப்பியளோ இல்லை, இரணமடுக் குளத்தில குதிச்சு செத்திடுவன் ஒரு தேசத்தை தா எண்டு கேப்பியளோ இல்லை, வடமாகாண சபைக்கு முன்னாலை அவித்துப் போட்டு ஆடுவம் தீர்வு வைக்கேல்லை எண்டா எண்டு மிரட்டுவியளோ அல்லது வடிவேல் பாணியில் அமெரிக்காவுக்கு போய் கடுப்பேத்திறார் மை லோட் என்று முழங்கிக் கேப்பியளோ? எப்பிடி எடுப்பியள். சொல்லத்தானே வேணும். அக்காக்கு பிடிச்சது ஆலமரப் பேய் எண்டு சொல்லுறமாதிரி தீர்வு சொல்லுறதே? பேய் பிடிச்சா ஒரு கட்டு வேப்பிலை. குறுக்கால போவாரே நீங்கள் சொல்லுறதுக்கு பலி குடுக்க வன்னில இனிச் சனம் இல்லை.
தாத்தன் பிரசா உரிமை பறிச்சு மிஞ்சிப்போன சனத்தில கொஞ்சம் வன்னியில இருக்கு அங்கை போய் எப்பிடி ராசா வாக்குக் கேட்பியள். உங்களை நாயை விரட்டிறமாதிரி நாட்டை விட்டு விரட்டின கட்சி அள்ளிப் போடுங்கோ என்று கேப்பியளோ?
வன்னியில சனம் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு அலையுதுகள். இவங்கள் அங்கை போய் வீரம் பற்றிக் கதைக்கிறாங்கள். முல்லைத்தீவுக்குப் போன் போட்டு கேட்டேன் ஒரே கஜேந்திரன் அலை போலகிடக்கு உண்மையோ என்று. அந்தாளுக்கு கோவம் வந்திட்டுப் போல. சொல்லிச்சு அப்பன் கிடந்தானாம் கோவணத்தோட மகன் சொன்னானாம் இழுத்துப் போத்துவிடப்பா என்று. நாங்கள் பட்ட காயம் ஆறேல்லை கொழும்பில சொகுசாப் படுத்துக் கிடந்திட்டு இரண்டு கொட்டை ஒரு பழம் எண்டு வாறாங்கள் என்று.
உண்மையாய் சொல்லுங்கோ. அம்மாவாணை இரண்டு தேசம் ஒரு நாடு எண்டா என்ன? கோதாரி விழ கூட்டமைப்பை விட இவங்கள் பெரும் கில்லாடிகளாய் எல்லோ கிடக்கு. வெளிநாட்டுக் காசு. அமெரிக்காவில இருந்து அட்வைசு, எலக்சன் கேட்க முன்னாள் போராளியள். உண்ணாணை சொல்லுங்கோ இந்த முன்னால் பின்னால் போராளியள் யாரவை? மகிந்தவுக்குப் பின்னால போனவையா, சனத்துக்கு முன்னாலை போய் சரண்டைந்தவையா? அமெரிக்காவோட நிண்டு காட்டிக் குடுத்தவையா, கேபியோட போனவையா, விமான நிலையத்தில பாப்போவோட நிண்டு தப்பிப் போகாமல் கோத்தாவுக்கு காக்கா பிடிச்சவையா? யார் ராசா இந்த முன்னாள் போராளியள்?
உது என்ன விளையாட்டு? மக்கள் உயிரை வைச்சு என்ன விளையாட்டு வேண்டிக் கிடக்கு? பகிடி விட உங்களுக்கு இரண்டு தேசம் ஒரு நாடு தான் கிடைச்சுதோ? விளையாடுங்கோ. கொழும்பில இருந்து வந்து எவ்வளவு காலத்துக்குத்தான் ஆடுறியள் எண்டு பாப்பம்.
ஐயனாரே ஒரு ஆட்டுக் கிடாய் நேந்து விடுறன் இருக்கிற மீதிச் சனத்தை நீதான் காப்பாத்தோணும்
தமிழில் தேசம் என்றாலும் நாடு என்றாலும் ஒரு அர்த்தம்தானே. தமிழே சந்தேகமாகி விட்டது. இரண்டு தேசம் ஒரு நாடு என்றால் அது என்ன?
புலிகள் தமிழர்களிற்கு செய்ய தவறிய மிகுதி அழிவினை எப்படியாவது நாங்கள் செய்வோம் எங்களிற்கு வாக்களியுங்கள் என்று இந்த தமிழ் அரசியல் கட்சிகள் முயல்கின்றன.
வயிற்றில் பிள்ளையோ அல்லது பிள்ளைக்கு தாய் பால் கொடுத்துக்கொண்டிந்தாலும் இரக்கமின்றி கொலை செய்த புலிகள். அந்த பயங்கரவாதிகளை அரசியலில் பங்கேற்கச் செய்து வாக்கு பிச்சை கேட்கும் தமிழ் அரசியல் வாதிகள்தான் தமிழ் பயங்கரவாதத்தின் மூலவேர்கள்
த.தே.ம.முன்னனி உண்மையில் மாற்றத்திற்கான குரலா?
கயேந்திரகுமார் தலமையிலான த.தே.ம.முன்னனி வருகின்ற ஒரு தேர்தலில் தம்மை மாற்றுச்சக்தி, தூய்மையலிம் தூய்மை, விலைபோகத்தலமை, தனிதேசம், போன்ற கோசங்களுடன் களமிறங்கியுள்ளது. இங்கு இந்த கோசங்களின் யதார்தத்தினைப்பார்ப்போம்.
1. மாற்றுச்சக்தி-
த.தே. கூட்டமைப்பில் சில குறைபாடுகள் உள்ளன(.உலகிலுள்ள எல்லா அமைப்புக்களிலும் உள்ளதுபோல)ஆனால் அதற்கான மாற்று த.தே.ம.முன்னனியா என்பதே கேள்வி. இதற்கான பதில் இவ்வாக்கத்தின் இறுதியில் கிடைக்கும்.
2.தூய்மையலிம் தூய்மை-
இவர்களே தங்களைத்தூய்மை என அழைப்பது சரி, உண்மையில்தாம் அவ்வாறானவர்களா என்பதை நிரூபிக்கவேண்டும். இதே பொன்னம்பலம் குடும்பத்தினரே மலையகத்தமிழர்களின் பிரசாஉரிமையினை அமைச்சுப்பதவி, அபிவிருத்திபோன்ற சலுகைகளிற்காக பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கினர். பின்பு 1977 தேர்தலில் தனிநாட்டு கோரிக்கையினை எதிர்த்துப் குமார் போட்டியிட்டு தோற்றார். இதெல்லாத்திற்கும் கஜன் எப்படி பொறுப்பாவார் என்று கேட்கலாம். இவர் எப்படி அ.இ.தமிழ் காங்திரஸின் தலைவரானார். இதே குடும்ப வாரிசு என்ற அடிப்படையில்தானே. மேலும் இவை தாம் விட்டபிழைகள் என்று பகிரங்கமாகக்கூறி அதற்கான பிராச்சித்தம் ஏதாவது குறிப்பாக மலையக தமிழர் குறித்து செய்துள்ளாரா. இந்தநிலையில் வன்னியில் குடியேறியிருக்கும் மலையகத்தமிழரிடமும் வாக்கு கேட்பு.
வாரிசு அடிப்படையில் தலமைப்பதவிக்கு பரம்பரை பரம்பரையாக தலமைப்பதவியினை அபகரித்துவரும் யாரும் தூய்மை பற்றி பேசுவது நகைச்சுவை. டான் தொலைகாட்சியில் காசு கொடுத்து விளம்பரம் வேறு
3.விலைபோகாத்தலமை- இராணுவத்தினரிற்கு சவப்பெட்டிகளை தயார் செய்யச்சொல்லி சவால்விட்டுவிட்டு ஐரோப்பாவிலிருந்துவிட்டு போரின்பின்பு செ.கயேந்திரன், மற்றும் பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் எவ்வாறு? என்ன விலை? பேசி என்ன அடிப்படையில்? நாடு திரும்பினார்கள் என நாடறியும்.
விலைபோகத்தலமை ஏன் அமெகரிக்கத்தூதரகத்திற்கு அடிக்கடி காவடி எடுக்கிறார். அமெகரிக்கா எங்காவது ஒடுக்கப்பட்ட மக்களிளிற்கு ஏதாவது செய்துள்ளதா. டொலரில் விலைபோகலாமா. புலம்பெயர் நாடுகளிலிகந்து த.தே.ம.மு இற்கு வரும் நிதி பற்றிய விபரங்கள் மக்களிற்கு வெளிப்படுத்தப்படுகிறதா
4.தனிதேசம்-
ஒரு நாடு இரு தேசம். கோசம் கேட்பதற்கு நன்றாகவுள்ளது. எவ்வாறு இதனை அடைவது என்பதுபற்றிய தெளிவு இவர்களிற்கே இல்லை. பேச்சு பல்லாக்கு தம்பியவை கால்நடைதான். இவர்களை கேட்டால் சரவதேசம் பெற்றுத்தரும் என்பார்கள். அந்த சர்வதேசம் என்பது இவர்களைப்பொறுத்தவரையில் மேற்குலக அரசுகளே சரவதேசம். மேற்குலக அரசுகள் பெற்றோலோ வேறு பெரும் நலன்களோ எதுவுமின்றி இவர்களிற்கு தேசத்தினை மட்டுமல்ல, ஒரு ஊரினைக்கூட கொடுக்க முன்வராது. இந்தியாவுடன் த.தே.ம.முன்னனிக்கு ஏழாம் பொருத்தம். இந்தியா என்ற மாபெரும் சந்தையினை புறக்கணித்து இவர்களிற்கு உதவுவார்களா. நாம் விரும்பாவிட்டாலும் இலங்கையினைப்பொறுத்தவரையில் பிராந்திய வல்லரசு மட்டுமல்ல உலக வல்லரசும் இந்தியாதான்.
மேலும் த.தே.ம.முன்னனியின் நடவடிக்கைகள் மகிந்த கூட்டத்துடன் பல இடங்களில் இணைந்தே செல்கின்றன. அவையாவன
1. போர்க்குற்றவிசாரணைகளை 2005 இற்கு பின்னரானா காலத்தில் மட்டும் மேற்கொள்ளாமல் 1980 களிலிரந்து விசாரிக்கவேண்டும் என்பது. இதனையே மகிந்தவரின் செயலாளராகவிருந்த லலித்வீரதுங்கவும் சென்ற வருடம் அமெரிக்காவில் கோரியிருந்தார். இது கூரையேறி கோழி பிடிக்கமுடியாவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான்.
2.சென்ற சனாதுபதி தேர்தலினை பகிஸ்கரிக்க கூறியமை.
இதனையே மகிந்தவும் வடபகுதியில் விரும்பினார். உதாரணமாக டான் ரீவியில் தேர்தலின் வாக்களிப்பு நேரம் பற்றி தவறான அறிவித்தல் முதல் இராணுவ அச்சுறுத்தல்வரை
3. வடகிழக்கில் த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற பங்களிப்பினை குறைத்தல். வரப்போகும் தொங்கு பாராளுமன்றத்தில் த.தே.கூ ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் என்று எதிர்பார்கப்படும் நிலையில் த.தே.கூ இன் பிரதிநிதித்துவத்தினை குறைக்கவேண்டிய தேவை மகந்தரிற்கு உண்டு. த.தே.ம.மு தனது பிரச்சார கூட்டங்களில் மற்றைய கட்சிகள் எதனையும் விமர்சிப்பதற்கு பார்க்கிலும் த.தே.கூட்டமைப்பினை குறைசொல்வதிலேயை தமது நேரத்தினை செலவிடுகிறார்கள்.
எனவே த.தே.ம.மு உண்மையில் மாற்றத்திற்கான எந்த முகாந்திரத்தினையும் கொண்டிருக்கவில்லை. மாறாக இவர்களின் தெரிவு சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகத்தான் முடியும்.
மாற்றம் என்பது நீண்டகாலநோக்கில் சகல ஒடுக்கப்பட்ட மக்களினதும் விடுதலையினையும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினையும் இரு கண்களாகக்கருதும் சக்திகளை தேர்தலில் நிற்கும் சகல கட்சிகளிற்கூடாகவும், முக்கியமாக தேர்தலிலிற்ககு வெளியில் மக்கள் ஊடாகவுமே மாற்றங்கள் நிகழும்.
மாற்றம் ஒன்றே மாறாதது.