வெளி நாடுகளிலிருந்து இயங்கும் இணையத்தளங்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாகவும், கலாச்சாரத்தைக் கொச்சப்படுத்துவதாகவும், அவதூறான செய்திகளை வெளியிடுவதாகவும் அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
நாட்டுக்கு வெளியில் இருந்து இயங்கும் அனைத்து இணையத்தளங்களும் இலங்கையில் பதிவு செய்ய வேண்டும் . அவ்வாறு பதிவு செய்யபப்டாத இணையத்தளங்களை தொழிநுட்ப ரீதியில் தடை செய்ய வேண்டும் என வெகுஜன ஊடக அமைச்சரைக் கோருவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று சமூக வலைத்தளங்கள், பேஸ்புக், வைபர், வட்ஸப் போன்ற தொடர்பு ஊடகங்களின் ஊடாகவே அதிகமான பாலியல் வக்கிரங்கள் வெளியாகின்றன. வட மாகாணசபையில் தடை உத்தரவிற்கு அவையே முதலில் உட்படுத்தப்பட வேண்டும். கலாச்சாரம் என்ற பெயரில் வட மாகாண சபை கருத்துச் சுதந்திரத்தை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.
உலகம் முழுவதிலும் மக்களின் அன்றாட வாழ்க்கையையே போலியானதக மாற்றியுள்ள பல்தேசிய வியாபார ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற அனைத்தையும் கடந்து இலங்கையில் இணைய ஊடகங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
ராஜபக்ச அரசில் இலங்கையில் ஊடகங்கள் தடைசெய்யப்பட்டன. இலங்கை அரசின் அனுமதி பெறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது, அதற்கு இணையான கருத்துக்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனமே இத் தீர்மானம். வட மாகாண்சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் தேசிய உணர்ச்சி மேலீட்டால், பிரித்தானியாவில் ஒரு பேப்பர் ஒழுங்குசெய்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஒரு மாதத்தின் பின்னர் இனியொரு… தொடர்பான அவதூறு ஒன்று அதன் அச்சுப்பதிவில் வெளியாகியிருந்தது.
பிரித்தானியாவில் விக்னேஸ்வரன் உரையாற்றிய ஒரு பேப்பரின் அவதூறுகளைக் கேள்வி கேட்பதிலிருந்து ஊடக தர்மத்தை வடமாகாண சபை ஆரம்பிக்கலாமே?
புலம்பெயர் நாடுகளிலும் கருத்துச் சுதந்திரம் முழுமையகக் கிடைக்கவில்லை. பெரும் மாபியா அரசியலும், பல்தேசிய நிறுவனங்களும் மிரட்டும் சூழல் ஒன்றின் பின்னணியிலேயே செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.