மைத்திரிபால சிரிசேன என்ற பொலநறுவை சாமானிய மனிதன் மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தையும் சிறையில் போட்டுவார் என்று எண்ணியவர்களின் கனவுகளெல்லாம் ஒரு சில நொடிகளில் கலைக்கப்பட்டுவிட்டது.
மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒன்றுகூடலில் மகிந்தவிற்கு தேர்தலில் வேட்பாளர் நியமனம் வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவரும் இலங்கை ஜனாதிபதியுமான மைத்திரிபால சிரிசேன நேற்று 3ம் திகதி ஜுலை பிற்பகல் இந்த முடிவை தனது தலைமையிலான கூட்டத்தில் முன்வைத்தார்.
மைத்திரியின் இந்த முடிவு சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து மகிந்தவிற்கு நியமனம் கிடையாது என்று கூறிவந்த மைத்திரியின் முடிவின் பின்னணியில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகள் செயற்பட்டனவா என்பது இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது எனினும் பன் கீ மூனின் பேச்சாளர் மகிந்தவின் நியமனம் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் புலிகள் இல்லை. புலிகளின் பெயரால் வியாபாரம் நடத்தும் கும்பல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் புலிகள் இன்னும் தமது வலையமைப்புக்கள் ஊடாகச் செயற்படுகின்றனர். என்று அமெரிக்கா அறிக்கை விடுத்திருந்தமை தற்செயலானதல்ல. இந்த அறிக்கையின் பின்னரே இன்னும் வாழும் புலிகளை அழிக்க தான் ஆட்சிக்கு வந்தாகவேண்டும் என மகிந்த பிரச்சாரங்களை ஆரம்பித்தார்.
பிரதமர் பதவிக்கான வேட்பாளரை தேர்தலுக்கு முன்னதாக அறிவிக்கப்போவதில்லை என மைத்திரி கூறியிருந்தார். இறுதியில் மகிந்தவிற்கே பிரதமர் பதவி வழங்கப்பட்டாலும் வியப்படைவதற்கில்லை.
கிழிந்து தொங்கும் மைத்திரியின் ஜனநாயக முகமூடியின் பின்னால் மேற்கு ஏகாதிபத்தியங்களின் அக்கறையின் அருவருப்பும் வெளித்தெரிகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தோடு போர்க்குற்ற விசாரணையும் ஐ.நாவும் நடத்திய நாடகங்கள் முடிவிற்கு வர, மகிந்த ராஜபக்சவும் அவரது கொள்ளைக்கார சகாக்களும் வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள் கூட்டத்தோடு இரண்டறக் கலந்துவிடுவார்கள்.
அதன் பின்னர் இரண்டு பேரினவாதக் கட்சிகளான யூ.என்.பி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையேயான போட்டி மட்டுமே இலங்கையின் அரசியலாகிவிடும்.
உலகறிந்த இனப்படுகொலையாளியைச் சமூகத்தின் மத்தியில் அப்பாவி மனிதர்களோடு உலாவர விட்டிருப்பதே ஆபத்தானது என ஜனநாயகவாதிகள் அச்சம் தெரிவிக்கும் அதே வேளை, மகிந்தவின் அரசியல் சாக்கடையின் மற்றொரு அழுக்கான மைத்திரிபாலவின் மக்கள் விரோதச் செயற்பாடு இலங்கையின் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை இனவாதப் போராட்டமாக மாற்றி ஜனநாயக சக்திகளிடமிருந்து அன்னியப்படுத்தி அழிக்கும் தலைமைகள் உற்சாகமடைந்துவிடுவார்கள். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள இனவாதிகளுக்கு மகிந்தவின் மீட்சி உற்சாகத்தை வழங்கும் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
இதன் மறுபக்கத்தில் சிங்கள பௌத்த பாசிஸ்டுக்கள் பேரினவாதத் தீயில் எண்ணை ஊற்றி வளர்ப்பார்கள். புலம்பெயர் சருகுப் புலிகளைக் காரணம் காட்டி இராணுவ ஆக்கிரமிப்பும் இனப்படுகொலையும் தீவிரப்படுத்தப்படும்.
தற்காலிகமாகத் தணிந்து போயிருந்த பேரினவாதமும் சிங்கள பௌத்த உணர்வும் மகிந்த மைத்திரி போன்ற சமூகவிரோதிகளின் நலன்களுக்ககத் தூண்டிவிடப்படும்.
பாராளுமன்ற அரசியல் வாதிகளிலிருந்து ஜனநாயக சக்திகள் ஈறாக பொதுமக்களில் பலரும் மகிந்த ராஜபக்சவிற்கான நியமனத்தை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இடதுசாரி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பாசிச அடிவருடி வாசுதேவ நாணயக்கார மகிந்தவின் மீட்சியை வரவேற்றுள்ளார்.
ஊழல் பேர்வளிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதை மக்கள் உறுதிசெய்ய வேண்டும் என மதுலுவாவே சோபித தேரர் கூறியுள்ளார். உயிரிழக்கப் போகிறோம் என்ற அறிவீனத்தின் வெளிப்பாடே மகிந்தவின் மீள்பிரவேசம் எனக் கல்வியமைச்சர் காரியவாசம் தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றியவர்களுக்கு மக்கள் பாடம்புகட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்தவிற்கு வேட்பு மனு வழங்கக் கூடாது என ஜனாதிபதி மைத்திரி ஆதரவாளர்கள் கோரி போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பல தொழிற்சங்கங்கள் ஊட்டாக இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளன. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பிரஜைகள் அமைப்பு மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புக்களினால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி கட்சியை பாதுகாப்பதா நல்லாட்சி அன்றே நாட்டு மக்களை பாதுகாப்பதா, மீண்டும் சர்வாதிகார ஆட்சி எமக்கு வேண்டாம், மக்கள் பிரதிநிதிகளாக ஊழல்வாதிகளுக்கு இடமளிக்காதே என்றெல்லாம் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மைத்திரியோடு சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியின் சார்பில் சூறாவளியாகச் சுழன்ற ராஜித சேனாரட்ன இந்த முடிவு யூ.என்.பி இற்கே சார்பானதாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவிற்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதே தனது ஒரே நோக்கம் என வாக்குகளை பொறுக்கி ஆட்சியில் அமர்ந்துகொண்ட மைத்திரிக்கு எந்தவகையிலும் குறைந்தவரல்ல ரனில் விக்ரமசிங்க. மகிந்தவின் நண்பரான ரனில் ஆட்சியமைத்துக்கொள்ள மகிந்த தேவைப்பட்டால் ரனிலின் பின் வாசல் மகிந்தவிற்காகத் திறந்திருக்கும்.
அழிப்பதற்கு மீண்டும் தயாராகும் இத் திருடர்களின் உள் நோக்கங்களையும், சூழ்ச்சிகளையும் புரிந்துகொண்டால் எதிர்காலத்தில் மக்கள் சார்ந்த புதிய அரசியலை முன்வைக்க முடியும்.