இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அரசுகள் ஏகாதிபத்திய எசமானர்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதற்கான நிர்வாக அமைப்பு என்பதை நடைமுறையில் நிறுவிய சம்பவங்களில் சென்னை வெள்ளப் பேரழிவு பிரதானமானது. பல்தேசிய வியாபார நிறுவனஙகளின் சுரண்டலை இலகுபடுத்தி அதன் மூலதனக் குவிப்பை ஏகாதிபத்திய நாடுகளை நோக்கி நகர்த்துவதற்கான கட்டமைப்புக்களை நிர்வகிப்பதே மூன்றாமுலக நாடுகளின் அரசுகள். மேற்கு ஏகாதிபத்திய நாடுகளால் ஏற்றுமதி செய்யப்பட்டு ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் அப்பட்டமான பாசிசம்.
தமது திறமைக்கு ஏற்ப மக்களின் சொத்துக்களைக் சூறையாடிக்கொள்ளும் உள்ளூர் ஏகாதிபத்திய நிர்வாக அமைப்புக்களான அரசுகள் மக்கள் மத்தியிலுள்ள முரண்பாடுகளைக் கையாள்வதும், அவர்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிப்பதும் கிடையாது. மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிப்பதற்குரிய பல்வேறு நடவடிக்கைகளைக் கூட ஏகாதிபத்தியங்கள் தமது உள்ளூர் ஏஜண்டுகளான அரசுகளிடம் விட்டுவைப்பதில்லை.
ஏகாதிபத்திய நாடுகள் தமது தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக மக்களுக்குப் பிச்சை போட்டுவிட்டு அரசுகளைத் தமது பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு சேவை செய்வதற்காக மட்டும் விட்டுவைத்திருக்கின்றன.
அரசுப் பொறுப்புகளில் அமர்ந்திருக்கும் கொள்ளையர்கள் தமக்குத் தேவையான அனைத்தையும் சுருட்டிக்கொண்டு பல்தேசிய நிறுவனங்களதும் ஏகாதிபத்தியங்களதும் கொள்ளைக்கு வழியேற்படுத்திக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறான அரச நிர்வாகிகளுள் அசாத்திய திறமை கொண்டவர் ஜெயலலிதா! கோடி கோடியாக மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து பல தசாப்தங்களாக எந்த குற்றச்சாட்டுக்களுமின்றி அரசின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்.
இன்று மனிதாபிமானிகள் வழங்கும் நிர்வாகப்
பொருட்களில் கூட ஜெயலலிதாவின் புகைப்படம் ஒட்டப்பட்டே மக்களிடம் சேர்க்கப்படுகிறது. மக்களின் இன்றைய அவலத்திற்கு குறைந்தபட்சப் பொறுப்புக்கூறலைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் அருவருப்பான ஜெயலலிதா பாசிசக் கும்பல் வெள்ள அவலத்தில் அடுத்த தேர்தலுக்கான தயாரிப்புக்களை மேற்கொள்கிறது.
– இரண்டு வருடங்களின் முன்னர் 1400 கோடி ரூபாய் கடற்கரைப் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா அரசு உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறது. அப்பணத்திற்கு என்ன நடந்தது என்பது அனுமானித்துக்கொள்ளலாம்.
– வெள்ளை அபாயம் தொடர்பான எந்தவகையான முன்னெச்சரிக்கையையும் அரசு விடுக்கவில்லை. மக்கள் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பின்னரும் வந்ததிகளே மக்களின் முன்னெச்சரிக்கை சமிக்னையாக இருந்தது.
– ஏழைகளின் குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் மரணித்துப் போயினர். இவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச எச்சரிக்கை கூட விடுக்கப்படவில்லை. அரசால் கொல்லப்பட்ட இந்த மக்களின் குரல் இனியும் கேட்கப்போவதில்லை.
– மருத்துவமனைகளில் குறைந்தபட்ச தேவைகளைக் கூட உறுதி செய்யாமல் அரசு நூற்றுகணக்கானவர்களைக் கொன்று போட்டிருக்கிறது.
– மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த அரசு ஏரிகளைப் பராமரிக்கவில்லை.
– சுனாமி அனுபவங்களைக் கொண்ட தமிழ் நாட்டில் குறைந்தபட்ச வடிகால் திட்டங்கள் கூட இருந்திருக்கவில்லை.
– இன்று சென்னையை மூழ்கடித்திருக்கும் வெள்ளம் நச்சு நீர். கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்டது. அது தொடர்பான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.
– மானில அரசு காற்றழுத்தம் தொடர்பான எந்த ஆய்வுகளையும் கடந்த 15 ஆண்டுகள் மேற்கொள்ளவில்லை.
தமிழ் நாட்டில் மக்களிடமிருந்து முற்றாகத் தனிமைப்படுத்தப்பட ஜெயலலிதாவின் பேரரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிக்கும் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புக்களையும் சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ளது.
அரசின் இருப்பு பல்தேசிய பெரு வியாபார நிறுவனங்களதும் அவற்றின் சேவை நிறுவனங்களதும் நிர்வாகத்தைக் கவனித்துகொள்வதற்காக மட்டுமே மீளமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட முற்படும் போதெல்லாம் அப் போராட்டங்களை முடக்கி உதவிகள் ஊடாக மக்களைச் சமாதனப்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏகாதிபத்திய நிதியில் களமிறக்கப்படுகின்றன.
சென்னையில் அவலத்தினுள்ளும் அரசையும் அதிகாரிகளையும் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடுத்துகின்றனர். சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். அரசும் அதன் அதிகாரிகளும் கொள்ளையடிக்கும் பணம் தொடர்பாகவும் கேள்விகேட்கும் மக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் உள்வாங்கப்பட அரசுகளின் கொள்ளை தொடரும்.
பாசிசக் நிர்வாகக் கட்டமைப்பில் பங்குகொள்ள கட்சிகள் அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிடும். மக்கள் அரசிற்கு எதிராகப் போராடுவதும் ஒட்டு ஜனநாயகத்தைத் தகர்த்து புதிய ஜனநாயக கட்டமைப்பைத் தோற்றுவிப்பதற்காகப் போராடுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.இன்று மக்களின் அதிகரமே அனைத்தையும் நிர்வகிக்கிறது என்பது சென்னையில் வெளிபடையாகத் தெரிகிறது. மக்களின் உதவிகளை அவர்களே நிர்வகித்துகொள்கிறார்கள். முகம்தெரியாதவர்கள் எந்த முகவரியையும் எதிர்பார்க்காமல் வெள்ள்ளத்தைக் கடந்து உதவிகளைசெய்கின்றனர். இந்த மக்கள் நிறுவனமானால் பூமியில் சொர்க்கத்தைப் படைக்கலாம்.
-தரணி