வைகுண்டராஜன் என்ற மணல் மாபியா இந்தியாவிலேயே மிகப்பெரும் கனிமக் கொள்ளைக்காரன். வி.வி.மினரல் என்ற கனிம நிறுவனத்தை ஆரம்பித்துச் சொந்தமாக வைத்திருக்கும் இந்ய்த நபர் தமிழக மண்ணைக் கொள்ளையடித்து கிரேனெட் மற்றும் இலிமினைட் போன்ற விலை உயர்ந்த கனிமங்களை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு இன்டர்போல் நிறுவனம் ஒன்பது சுற்றுச்சூழல் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடப்படுவோர் பட்டியலில் அறிவித்திருந்தது. அப் பட்டியலிலும் வைகுண்டராஜன் இல்லை. தேடப்படுபவர்களில் அனைவருமே வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள். 50 வயதான செர்ஜி டார்மினோவ், ரஷ்யாவில் ஒரு சட்டவிரோத நண்டு-மீன்பிடி நடவடிக்கைக்கு 450 மில்லியன் டாலர் சம்பாதித்ததாக கருதப்படுகிறது. மற்றொருவர், 57 வயதான அட்ரியானோ கியாகோபோன், சட்டவிரோத போக்குவரத்து மற்றும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றுவது, நீர் படுக்கைகளை விஷமாக்குவது, கடத்தல், போன்றவற்றில் குற்றம் சுமத்தப்பட்டவர். 29 வயதான அகமது கம்ரான், தான்சானியாவின் கிளிமஞ்சாரோ விமான நிலையத்திலிருந்து கத்தார் வரை இராணுவ விமானத்தில் 100 க்கும் மேற்பட்ட நேரடி விலங்குகளை – ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் இம்பாலாக்கள் உட்பட கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவை தவிர உலகம் முழுவதுமுள்ள 139 சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகளை இன்டர்போல் ஆரம்பித்திருந்தது. இன்பிரா ரெரா எனப் பெயரிடப்பட்ட நடவடிக்கையின் ஊடாக இன்டர்போல் நிறுவனம் 23 நாடுகளில் ஒளிந்திருக்கும் சந்தேக நபர்களைத் தேட ஆரம்பித்திருந்தது. இந்தப் பட்டியலில் கூட வைகுண்டராஜன் இல்லை. வைகுண்டராஜனின் மாபெரும் கனிமக்கொள்ளை மக்கள் குடியிருப்புக்கள் சார்ந்த பகுதிகளிலிலேயே நடைபெறுகிறது. தென் தமிழகத்தின் கரையோரப் பகுதிகள் முழுவதும் தனக்கே சொந்தம் என கடல் மணலை சட்டத்திற்கு உட்படாத வகையில் திட்ட்டமிட்டுக் கொள்ளையடித்தே இத் திருட்டு நடைபெறுகிறது. அரச நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்குவது மட்டுமன்றி அப்பாவிகளைத் தனது குண்டர்படைகளைப் பயன்படுத்தி மிரட்டும் வைகுண்டராஜனின் செயற்பாட்டால் தென் தமிழகத்தின் கரையோரப்பகுதிகள் கதிரியக்கத்தினால் பாதிப்படைந்து மீன்கள் செத்துப்போகின்றன. பல்வேறு நோய்களுக்கு கரையோரக் கிராம மக்கள் உள்ளாகின்றனர்.
அரசியல்வாதிகளை வளைத்துப்போட்டுக்கொண்டு தப்பித்துக்கொள்ளும் வைகுண்டராஜனின் மற்றொரு அரசியல் வாடிக்கையாளர் “செந்தமிழன்” சீமான். தனது திருமணத்தை முடித்துக்கொண்ட சீமான் விழுந்த முதல் கால் வைகுண்டராஜனுடையதுதான்.
2017 ஆம் ஆண்டு சென்னையைச் சார்ந்த ஊடகவியலாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் வைகுண்டராஜன் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்தமையால் மிரட்டப்பட்டும், வதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டார். சமூகவலைத் தளங்கள் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்திக்கொண்ட வைகுண்டராஜனின் குழு மிக இலகுவாகவே சந்தியாவின் குரல்வளையை நெரித்துவிட்டது. அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்காக வைகுண்டராஜன் ஆரம்பித்த ஊடகம் தான் நியூஸ் 7 தமிழ் என்ற ஊடகம்.
இந்தியாவில் வங்கி மூலதனத்திலிருந்து சிறு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்கள் வரை கொள்ளையடிப்பதற்கு இந்திய அதிகாரவர்க்கம் நியமித்துள்ள அரசு தான் பாரதீய ஜனதாவின் இன்றைய அரசு. தனது கொள்ளையைத் தங்குதடையின்றி நடத்துவதற்காக மத வெறியை ஊட்டி மக்களைத் திசைதிருப்பும் இந்த அரசு தனக்கு வசதியாக ஊடகங்களையும் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. வட இந்தியாவுடன் ஒப்பு நோக்கும் போது தமிழ் நாட்டில் குறித்தளவான ஊடக சுதந்திரம் காணப்பட்டது.
இதனைப் பொறுத்துக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ் – பீ.ஜே.பி அரசு நியூஸ் 18 என்ற ஊடகத்தைக் கையகப்படுத்தி அதிலிருந்த பிரதான ஊடாகவியலாளர்களை வெளியேற்ற மிகவும் அருவருப்பான தந்திரோபாயங்களைப் பயன்படுத்திற்று. குணசேகரன்.செந்தில்வேல்,அசீப், ஜீவசகாப்தம் போன்ற ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டனர்.
இப்போது வைகுண்டராஜனின் நியூஸ் 7 தமிழ் ஊடகத்தையும் கையகப்படுத்த அவரையே பயன்படுத்திக்கொண்ட பீ.ஜே.பி, அவர்மீதான் குற்றங்களைக் முன்வைத்து மிரட்டியது. நியூஸ் 7 தமிழ் இன் நிறம் காவியாக மாற ஆரம்பிக்க சுதந்திரமாகச் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் கேள்விஎழுப்ப ஆரம்பித்தனர். பாரதீய ஜனதா வைகுண்டராஜன் ஊடாக ஊடகவியளார் மீது நடத்திய தாக்குதலின் முதல் பலி நெல்சன் சேவையர் என்ற தலைமை ஊடகவியலாளர். இன்று தனது பதவியை விட்டு விலகியுள்ள நெல்சன், தனது அடுத்த ஊடகப்பயணத்திற்காகக் காத்திருக்கிறார். பிரதான ஒளி ஊடகங்களைக் கையகப்படுத்தும் பாரதீய ஜனதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக முற்போக்கு அணிகள் ஒன்று திரண்டால் மட்டுமே குறைந்தபட்ச ஊடகச் சுதந்திரத்தைக் கூட தக்கவைத்துக்கொள்ளலாம். இதனிடையே உலக அளவில் தேடப்படும் குற்றவாளியாக வைகுண்டராஜனை அறிவிப்பதற்கு தமிழக அரசு கூட ஒத்துழைக்காது என்பதும் வெளிப்படையானது.