தமிழ் பேசும் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தின் தேவை எண்பதுகளிலும் அதிகமாக இன்று காணப்படுகிறது. தமிழ் சிங்கள அதிகாரவர்க்க மேலணிகள் நல்லிணக்கம் என்று இணைந்துகொள்ள அதன் கீழணிகளிடையே மோதலைத் திட்டமிட்டு உருவாக்குவதே இலங்கையின் அரசியலாக நீடிக்கிறது. இந்த நிலையில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தோல்விலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் முளைவிட முனைவதை அழிக்க உலகம் முழுவதும் முனைப்புக் காட்டப்படுகின்றது.
ஒரு தேசிய இனத்த்தின் பிரிந்து செல்லும் உரிமை அடிப்படை ஜனநாயக உரிமையாகும், அதனை மறுப்பதும் நிராகரிப்பதும் சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது. பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவது பிரிவினை அல்ல.
இந்த ஜனநாயகப் போராட்டத்திற்கு பாசிச சாயம் பூசி அழிப்பதற்கு ஒவ்வொரு முனையிலும் முயற்சிகள் நடக்கின்றன. தமிழர்கள் ஜனநாயக வரம்புகளுக்கு உட்படாத பாசிஸ்டுக்கள் என உலகத்திற்கு மீண்டும் மீண்டும் சொல்வதற்கு முனைகிறார்கள்.
புலம்பெயர் நாடுகளில் சுய நிர்ணைய உரிமைக்காகக் குரல்கொடுக்கப் போவதாக தமிழர்கள் மத்தியிலும், சீக்கியர்கள் மத்தியிலும், குர்திஷ் இன மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் மேற்கொண்டுவந்த கிரகாம் வில்லியம்சன் என்பவர் அறியப்பட்ட பாசிஸ்ட்.!
வில்லியம்சன் தேசிய முன்னணி(NF) மற்றும் பிரித்தானிய தேசியக் கட்சி(BNP) என்ற இரண்டு பாசிஸ்ட் கட்சிகளின் உயர்மட்ட உறுப்பினர். இந்த இரண்டு கட்சிகளும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான நிறவெறி வன்முறைக் கட்சிகள்.! பிரித்தானியாவில் குடியேற்ற வாசிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், வெள்ளை நிறத்தவர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் பல வன்முறைகளில் ஈடுபட்ட இக் கட்சிகளின் தேசிய முன்னணியில் உதவித்தலைவராகப் பதவி வகித்தவர் கிரகாம் வில்லியம்சன். இவர் பிரித்தானிய தேசியக் கட்சியின் அதிகார உறுப்பினருமாவர்.
இப் பாசிஸ்ட் பி.என்.பி தலைவரின் ஐரோப்பியப் பாராளுமன்ற முகாமையாளருடனும், பற்றிக் ஹரிங்டன் என்ற தேசிய முன்னணியின் முக்கியஸ்தருடனும் இணைந்து தேசிய விடுதலை கட்சி (National Liberal Party) என்ற கட்சியை உருவாக்கினார். புத்தம்புதிய பாசிஸ்டுகளின் கட்சியின் நோக்கங்களில் ஒன்றாக உலகம் முழுவதும் உள்ள தேசிய இனங்களின் சுய நிர்ணைய உரிமையை வலியுறுத்துவது என்பதாகும்.
ஒரு புறத்தில் ஏனைய மக்கள் கூட்டங்களை மனிதர்கள் அல்ல என்று அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்தக் கும்பல்களுக்கு தேசிய விடுதலை வெறும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான கருவி.
லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தேசிய விடுதலை கட்சியில் (National Liberal Party) திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம் என்னும் ஈழத் தமிழ் மகன் களமிறக்கப்பட்டுள்ளார்.
லண்டன் Pinner, Northwood and Ruislip பகுதியில் பாராளுமன்ற வேட்ப்பாளராக போட்டியிட உள்ளார்.
ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றின் பெயரால் பாசிஸ்டுக்களோடு இணைவது வெறும் வாக்குப் பொறுக்கிகளின் செயல் என்பதோடு நிறுத்திக்கொள்ள முடியாது. இது அவமானம். இந்த அவமானத்தைக் கூச்சமின்றி அரங்கேற்றுபவர்களை புலம்பெயர் தமிழர்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும்.
இக் கட்சி தொடர்பாக சனல் 4 விலாவாரியாக அம்பலப்படுத்தியிருந்தது: