லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இரு வேறு போட்டி அமைப்புக்களால் ‘கொண்டாடப்பட்டது’. வழமையாக பீ.ரீ.எப்(BTF) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், ரீ.சீ.சீ (TCC) மாவீரர் தினத்தையும் நடத்துவதுண்டு, இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை பீ.ரீ.எப் இற்குப் போட்டியாக ரீ.சீ.சீ ஏற்பாடு செய்திருந்தது. அருகருகான இரு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே பீ.ரீ.எப் இன் மேடை அமைந்திருந்த பகுதிக்குள் புகுந்த ரீ.சீ.சீ உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பீ.ரீ.எப் இன் மேடையை ரீ.சீ.சீ கலைக்க முற்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்களின் தலையீட்டால் வன்முறை முடிவிற்கு வந்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து ரீ.சீ.சீ இன் ஊதுகுழல் ஊடங்கள் வழமை போல பொய்யான செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.
பீ.ரீ.எப் புலிக்கொடி ஏந்தி முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடத்தவில்லை என்பதே ரீ.சீ.சீ இன் வன்முறைக்குக் காரணம் என அதன் உறுப்பினர்கள் கூறினார்கள். முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளை சிறீ லங்கா பேரினவாத அரசு நடத்திமுடித்து ஏழு வருடங்களாக புலிக் கொடி வியாபாரச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்களுக்காக யார் என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் இந்தக் கும்பல்களுக்கு பொருட்டல்ல. தமது வியாபாரத்திற்குப் பயன்படும் அடையாளங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கம். தமது வியாபாரத்திற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் முகவர்களை நியமித்து உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருக்கும் ரீ.சீ.சீ, கடந்த ஏழு வருடங்களில் தமது பணப்பையை மட்டுமே நிரப்பிக்கொண்டார்கள்.
மறு புறத்தில் பீ.ரீ.எப் இன் நடவடிக்கைகள் மக்கள் சார்ந்ததல்ல. ரீ.சீ.சீ கும்பலுக்கு மாற்றாக பீ.ரீ.எப் ஐக் கருத முடியாது. தமக்கான அரசியல் திட்டங்களும், எதிர்காலம் குறித்த மக்கள் சார்ந்த நடவடிக்கைகளுமற்று இந்த இரண்டு அமைப்புக்களும், ஏனைய புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்களும் வட கிழக்கில் வாழும் மக்களிலிருந்து முற்றாக அன்னியப்பட்டு அரசியல் நீக்கம் செய்யப்படுவார்கள்.