தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகால உறுப்பினரும் அந்த இயக்கத்தில் செயற்பாடற்றிருந்தவருமான பசீர் காக்கா என்பவரின் அழுகுரலோடு சூடு பிடித்த முள்ளி வாய்க்கால் நினைவு தின அரசியல் வியாபாரம் இம் முறை புலம்பெயர் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி வடக்கில் நிலை கொண்டுள்ளது.
இலங்கை நவ தாராளவாத பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், அதற்கு எதிரான அரசியல் என்ற அனைத்தும் தேர்தல் அரசியலாகக் குறுகிய நிலையில் முள்ளிவாய்க்காலில் நிறைவுற்ற மனிதப் படுகொலைகளை வாக்குகளாக மாற்றுவது எப்படி என்ற போட்டியே ஒன்பதாவது வருட நினைவு தினத்தின் குறிக்கோளாக மாற்றமடைந்துள்ளது.
புலம்பெயர் அரசியல் வியாபாரிகள் தமது அடியாட்களாகச் செயற்படும் ஒரு தனி மனிதனை வாக்குக் கட்சிகளுக்குள் உருவாக்குவதற்கான களமாக முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தைப் பயன்படுத்த, முற்றிலுமாக அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வாக கொச்சப்படுத்தப்பட்டு கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான போலித் தேசியம், கஜேந்திரகுமார் பொன்னம்பலக்தின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் பொருந்தாத புலி வேடம், தமிழரசுக் கட்சியின் செத்துப்போன கூச்சல் என்ற அனைத்தும் சமூகம் முழுவதையும் அரசியல் நீக்கம் செய்ய ஆரம்பித்துள்ளன.
முள்ளிவாய்க்கால் அழிவு என்பது புதிய போராட்டம் ஒன்றின் ஆரம்பமாக அமைந்துவிடாமல் பாதுகாப்பதே இலங்கை அரசினதும் அதன் பின்புலத்தில் செயற்படும் இந்தியா உட்பட்ட ஏகபோக நாடுகளதும் அடிப்படை நோக்கம். புலம்பெயர் நாடுகளின் தமிழ் அமைப்புக்களும் இலங்கையின் வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளும் அந்தப் பணியினைச் சிறப்பாகவே நிறைவேற்றுகின்றன.
பிரபாகரனைக்கூட அரசியல் அனாதையாக மரணிக்கச் செய்த புலி வேடதாரிகளின் நேர்மையற்ற அரசியலுடனேயே பார்த்தே புதிய இளைய சமூகம் வளர்ச்சியடைகின்றது,
இவர்கள் எப்போதும் போல மௌனித்திருக்கப் போவதில்லை, தமது தந்தையர் தாயை நல்வழிப்படுத்தும் இளைஞர் கூட்டம் ஒடுக்கப்படும் மக்களின் பலத்துடன் புதிய அரசியல் முன்வைக்கும் வரை முள்ளிவாய்க்கால் என்பது எழுச்சி நாளாக மாற்றமடையாது.