சுன்னாகம் அனல் மின் நிலையைத்திலிருந்து அழிப்பு நடத்திய நோதேர்ன் பவர் என்ற நிறுவனத்தையும் அதன் ஊழியர்களையும் இடை நிறுத்துமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இத்தீர்ப்பிற்கு எதிராக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் நோதேர்ண் பவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் மேல் முறையீடு செய்திருந்தது. சுன்னாகம் அனல் மின் நிலையத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றியது சட்டத்திற்குப் புறம்பானது என யாழ். உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆக, 06ம் திகதி திங்கள் ஊழியர்கள் மறுபடி வேலைக்குச் செல்லலாம்.
வட மாகாண சபை அமைத்திருந்த நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியிலுள்ள நிலக்கீழ் நீரில் நஞ்சு கலந்திருக்கவில்லை என கூறப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நூற்றுக்கணக்கான கிணறுகளில் ஆய்வு செய்தும் சுகாதார அமைச்சு 25 கிணறுகளில் எடுத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்கள ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்தும் பெற்றோலியக் கழிவுகள் நீரில் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
தேசிய நீர்வழங்கல் சபையின் அறிக்கையை நிராகரித்து புதிய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வட மாகாண சபையின் பின்புலத்தில் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் செயற்பட்டதா என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.
புலம்பெயர் நாடுகளில் தீவிர தேசிய வாதம் பேசிக்கொண்டு மக்களிடம் பணத்தைச் சுருட்டிக்கொள்வது போன்றே, வன்னியில் நடைபெற்றது இனப்படுகொலை என்று கூறிய மறு கணமே எம்.ரி.டி வோக்கஸைப் புனிதப்படுத்தியிருக்கிறார் விக்னேஸ்வரன்.
இப்போது மீண்டு எம்.ரி.டி வோக்கஸ் உற்பத்தியை ஆரம்பிக்க தமக்கு அனுமதி வழங்குமாறு கேட்கிறது.
இதேவேளை ஜேர்மனியிலிருந்து சுன்னாகம் பகுதிக்கு விடுமுறையில் சென்ற புலம்பெயர் தமிழர் ஒருவர் இப்போது உடலில் ஏற்பட்ட தோல் வியாதி காரணமாக ஜேர்மனியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கள மனித உரிமை வாதிகள் சுன்னாகம் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்குகூட புலம்பெயர் அமைப்புக்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. சில அமைப்புக்கள் தம்மிடமுள்ள ஆவணங்களைக் கூட ஊடகங்களுக்கு வெளியிடத் தயக்கம் காட்டுக்கின்றன.
எம்.ரி.டி வோக்கஸ் மீண்டும் உற்பத்தியை ஆரம்பிக்குமானால் மிகக் குறுகிய காலத்திற்கு உள்ளாகவே யாழ்ப்பாணக் குடா நாட்டின் பெரும் பகுதி மனிதர்கள் வசிப்பதற்கு உகந்த பிரதசமாக இருக்காது.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் மக்கள் செறிந்து வாழ்வதற்கான அடிப்படைக் காரணம் நீர் வளம் என்பதே. மக்களின் செறிவைக் குறைத்து யாழ். குடா நாட்டை பல்தேசிய நிறுவனங்களின் தொழில் பேட்டையாகவும் இராணுவக் குடியிருப்புக்களாகவும் மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே எம்.ரி.டி வோக்கஸின் அழிப்பு நடைபெறுகிறதா என்ற சந்தேகங்கள் பலராலும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் இலங்கையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழிப்பது அரசுகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. யாழ்ப்பாணத்தை மக்கள் வாழ முடியாத பிரதேசமாக மாற்றி அங்கிருந்து தமிழர்களை வெளியேற்றுவதனூடாக தேசியத் தன்மையைச் சீர்குலைக்க பேரினவாத அரசு முயல்கிறது.
தமிழீழம் பிடித்துத் தருவதாக நினைவஞ்சலிகளை மட்டுமே நடத்திப் பிழைப்பு நடத்தும் புலம்பெயர் தேசிய வியாபாரிகளை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்காமல் போராட்டங்களை நடத்துவது இன்றைய தேவையாகும். புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையிலும், உலகம் முழுவதிலும் சுன்னாகத்தில் நடத்தப்படும் திட்டமிட்ட அழிவிற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இதே வேளை நிப்போ என்ற அமைப்பு வட மாகாண சபையின் அறிக்கை எழுத்துருவில் இன்னும் வெளியிடப்படவில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளது.