2009 ஆம் ஆண்டு வன்னியில் இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது. ஐ,நா மூச்சுவிடாமலிருக்கிறது. ஆங்காங்கு ஐ.நாவில் சலசலப்புக்களின் பின்னர் அனைத்தும் ஓய்ந்து போய்விடும். அமெரிக்கா இலங்கை அரசை இனப்படுகொலைக்கு வழி நடத்திக்கொண் டிருந்தது. பிரித்தானிய அரசு ஆயுதங்களை மட்டுமன்றி இரண்டு நிரந்தர ஆலோசகர்களைக்கூட இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது. இவர்கள் அனைவருடனும் இணைந்து இந்திய அரசின் முழு ஆலோசனையுடன் வன்னி இனப்படுகொலை சத்தமின்றி, சாட்சியின்றி நடத்தி முடிக்கப்படுகிறது. இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும் போதே அது ஐரோப்பாவிலுள்ள போராடும் இயக்கங்கள் மற்றும் மக்கள் மத்தியில் தாக்கங்களை ஏற்படுத்திவிடாதவாறு திட்டமிடப்படுகிறது. இந்தியாவில் பாரதீய ஜனதா வெற்றிபெற்றுவிடும் என்றும் நகர்ந்து சென்று முள்ளி வாய்க்காலில் குந்தியிருங்கள் என்று புலம்பெயர் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அமெரிக்காவின் கப்பல் வந்து காப்பாற்றும் எனக் கதை பரப்பினார்கள். பக்கம் பக்கமாக கட்டுரை எழுதினார்கள். நாங்கள் இருக்கிறோம் பார்த்துக்கொள்கிறோம் என புலிகளை ஏமாற்றினார்கள். மறுபக்கத்தில் புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கூடக் கொந்தளித்து விடாது பார்த்துக்கொண்டார்கள். “தலைவர் உள்ளேவிட்டு அடிப்பார்” என மக்களை ஏமாற்றினார்கள். முள்ளிவாய்க்காலின் மூலை வரை நகர்த்திச்சென்று மொத்தமாக அனைவரையும் அழிக்கும் திட்டம் ஐ.நா, அமெரிக்கா, தன்னார்வ நிறுவனங்கள்,இந்தியா, பிரித்தானியா போன்றன மட்டுமல்ல புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் வர்க்க நலனின் அடிப்படையிலுமே கட்டமைக்கப்பட்டது.
வன்னி இனப்படுகொலை காலகட்டம் தொடர்பாக அறிந்தவர்களின் முன்னால் தெரிந்த எதிரி இலங்கை அரசு என்றாலும் அடிப்படை எதிரி ஐ.நா போன்ற அமைப்புக்களும் ஐரோப்பிய அமெரிக்க அரசுகளும் தான். இவர்களின் ஆணையை இந்திய அரசும் இலங்கை அரசும் செயற்படுத்தின.
இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய அனைவரையும் விட இன்று முக நூலில் ஈழத் தமிழர்களின் எதிரியாகக் காட்டப்படுவது கருணாநிதி என்ற தனி மனிதன் தான். ஈழப்போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த கருணாநிதி தனது பாராளுமன்ற அரசியல் வரம்புகளை மீறிக்கூட பல சந்தர்ப்பங்களில் ஈழத் தமிழர்களை ஆதரித்தார். இலங்கையில் இந்திய இராணுவம் அழிப்பு நடத்திக்கொண்டிருந்தத் வேளையில் இந்தியாவிலிருந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக ஒரு அரசியல்வாதி கூடக் குரல் கொடுக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி த.பாண்டியன் போன்றவர்கள் கூட இந்தி இராணுவத்தை ஆதரித்தனர். கருணாநிதி மட்டுமே அதற்கெதிராகக் குரல்கொடுத்தார்.
பாராளுமன்ற அரசியலின் வரைமுறைகளுக்கும், அதிகாரவர்க்கத்திற்கு எதிரான அரசியலுக்கும் இடையிலான ஊசலாட்டமே கருணாநிதி என்ற தனி மனிதன் என்றாலும் எந்த சந்தர்ப்பதிலும் தனது சுய மரியாதைக் கொள்கைகளை கருணாநிதி விட்டுக்கொடுத்ததில்லை. அதிகாரவர்க்கத்தின் கூறுகளைப் பயன்படுத்திக்கொண்டு சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் செல்வதே கருணாநிதியின் அரசியல் சமரசமாக இருந்தது.
ஆக, ஈழத்தில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய அரசுகளதும், நிறுவனங்களதும் அடிமைகளாகவிருக்கும் தமிழர்களில் சிலர் கருணாநிதியை எதிர்ப்பது ஏன் என்பதும் ,தனது காலம் முழுவதும் தமிழுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கருணாநிதி ஈழப் போராட்ட காலத்தில் மவுனம் காத்தது ஏன் என்பதும் இந்தப் பின்னணியிலிருந்தே ஆராயப்பட வேண்டும்,
அண்ணாவின் பின்னர், பெரியாரின் ஆதரவோடு கருணாநிதி முதல்வரானதும் வட இந்திய பார்ப்பனப் பத்திரிகைகள் அச்சம் தெரிவித்தன. ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தமிழ்த் தீவிரவாதி கருணாநிதிக்குப் பதிலாக நெடுஞ்செழியன் முதலமைச்சானால் நாட்டிற்கு பாதுகாப்பானது எனத் தலையங்கம் எழுதியது.
இந்தியாவின் எந்த மானிலத்திலும் இல்லாதவாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டங்களையும் மீறி, தமிழ்த் தாய் வாழ்த்தைத் தேசிய கீதத்திற்குப் பதிலாக அறிமுகம் செய்த கருணாநிதி என்ற தமிழறிஞர் தாக்கப்படுவது பாரதீய ஜனதா போன்ற பார்ப்பன இந்துத்துவா கட்சிகளாலும், முள்ளிவாய்க்காலில் வீழ்ந்த பிணங்களை வைத்து அரசியல் வியாபாரம் நடத்தும் சமூகவிரோதி சீமான் போன்றவர்களாலும் கருணாநிதி தாக்கப்படுவது என்பது ஒரு புறமிருக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதாரவாளர்கள் என்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கும் சிலராலும் கருணாநிதியின் மேல் திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது.
வராலாற்றின் பகுதிகளை தெரியாமலிருப்பது வேறு அதனை திட்டமிட்டே மாற்றிச் சொல்வது உள் நோக்கம் கொண்டது. பொதுவாக பாரதீய ஜனதாவுடன் இணையும் இக்கும்பல்கள் ஏதாவது ஒரு அதிகாரவர்க்கத்தின் அடிவருடிகளே.
அதுவும் புலம் பெயர் நாடுகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் சிலாரலேயே இத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. இவர்களில் பின்னணியை அவர்களின் முகநூல் பக்கங்களிலேயே ஆராய்ந்து பார்த்தாலே அவர்கள் யாரென சட்டெனப் புரிந்துவிடும்.
இவர்களில் பொதுவாக அனைவருமே இனப்படுகொலை நடத்திய இந்திய அரசு, இலங்கை அரசு, ஐரோப்பிய அரசுகள், அமெரிக்க அரசு போன்றவற்றின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். இடதுசாரி வெறுப்பாளர்களாக இருப்பார்கள். ஐ-நா போன்ற இனப்படுகொலைக்கு ஆதரவளித்த நிறுவனங்களை காவலர்களாக உருவகப்படுத்தியிருப்பார்கள்.
அமெரிக்கா வருகிறது என்றும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருகிறது என்றும் விடுதலைப் புலிகளை ஏமாற்றி முள்ளிவாய்க்கால் வரை நகர்த்திச் சென்று இலங்கை அரசிற்கு கூண்டோடு அழிப்பதற்குத் துணை சென்றவர்களாக இருப்பார்கள். இவைகள் அனைத்தும் இல்லாத யாராவது ஒரு ஈழத் தமிழர் கருணாநிதியை விமர்சிக்க முற்பட்டால் அதில் நியாயத்தைத் தேடிப்பார்க்கலாம். இனப்படுகொலையோடு நேரடியான தொடர்புடைவர்களைத் தவிர்த்து கருணாநிதியைத் தாக்கும் இவர்களின் உள் நோக்கம் சந்தேகத்திற்கு உரியது. ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட பெரும்பாலான இக் கும்பல்கள் இந்திய பார்பனீய அரசின் நேரடி முகவர்கள் என்ற சந்தேகம் எழுவது இயல்பானது. ஏன் ஐரோப்பிய உளவுத்துறைகளின் அடியாட்களாகக் கூட இருக்கலாம். இனப்படுகொலையைத் தூண்டிய தங்களது குற்றச் செயலை மறைப்பதற்குக் கூட கருணாநிதியை இவர்கள் பயன்படுத்திக்கொள்ளாலாம்.
முள்ளிவாய்க்காலில் குந்தியிருங்கள், அமெரிக்கா வந்து காப்பாற்றும் என இவர்களைப் போல கருணாநிதி தப்பிகொள்ளவில்லை. தலைவர் உள்ளேவிட்டு அடிப்பார் என உணர்ச்சிவசப்படுத்தி மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தவில்லை.
பிரித்தானியாவில் போருக்கு எதிரான கூட்டமைப்பு என்ற குழு பல ஜனநாயகவாதிகளைக் கொண்டது. பல போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார்கள். ஈராக்கில் பிரித்தானியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான இவர்களின் போராட்டத்தில் அரை மில்லியன் பிரித்தானியர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். வன்னி இனப்படுகொலைக்கு எதிராக இக் கூட்டமைப்பு அடையாளப் போராட்டத்தைக்கூட நடத்தவில்லை என்பதற்காக அவர்களைத் துரோகிகள் என்றா கூறுவது. அவ்வாறு ஒரு போராட்டம் ஒன்றை நடைபெறாதவாறு பிரித்தானிய ஆளும்கட்சியோடு இணைந்திருந்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்த புலம்பெயர் தமிழர்கள். போருக்கு எதிரான கூட்டமைப்பைப் போன்றே கருணாநிதியை ஈழப் பிரச்சனையிலிருந்து திட்டமிட்டு அன்னியப்படுத்தியவர்களைக் விசாரணை செய்தால் இன்னும் தெளிவான உண்மைகள் புலப்படும்.
வாக்கு அரசியல் கட்சிகளுக்கு எல்லைகள் உண்டு, கருணாநிதி முன்வைத்த சீர்திருத்தவாத அரசியலைக்கூட முழுமையாக வழி நடத்த முடியாத அளவிற்கு அதற்கு வரம்புகள் உண்டு. சீரழிவும் சந்தர்ப்பவாதமும் வாக்கு அரசியலோடு ஒட்டிப்பிறந்த குழந்தைகள். இதையெல்லாம் கடந்து இந்திய சூழலில் இந்துதுவா அரசியலுக்கு எதிராக தனது அதிகாரத்தைப் பயன்படுத்திய எந்த அரசியல் வாதியும் இந்திய வரலாற்றில் இல்லை.
இன அழிப்பிற்கு துணை சென்ற ஈழத் தமிழர்கள், சீமான் சமூகவிரோதக் கும்பல், பாரதீய ஜனதா போன்ற இந்துத்துவா கும்பல்கள் போன்றவற்றால் கருணாநிதி தாக்கப்படும் போதே அவரின் பெறுமானம் வெளிப்பட்டுவிடுகிறது.
கருணாநிதியின் பிரிவால் துயருறும் தமிழக மக்களோடு இனியொரு.. தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.