தமிழர்கள் அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள், தமது வாழ்க்கைக்காகவும் இருப்பிற்காகவும் ஏகாதிபத்தியங்களுடனும் நிறவாதிகளுடனும் சமரசம் செய்துகொள்ளத் தயார் நிலையிலிருப்பவர்கள் என்ற விம்பத்தை M.I.A தகர்த்துள்ளர். ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால நிறுவனர்களில் ஒருவரான அருளர் என்ற அருள்பிரகாசம் அவர்களின் மகளான M.I.A சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராகச் தனது குரலைப் பல தடவை உரக்க ஒலித்துள்ளார்.
இனப்படுகொலைக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், நிறவாதத்திற்கு எதிராகவும் உரிமை என்ற பெயரில் வியபாரம் செய்யும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராகவும் M.I.A சரணடைவுகளுக்கு விட்டுக்கொடுப்புக்களும் அப்பால் தனியாகப் போராடியுள்ளர். அமெரிக்காவிலும், பிரித்தானியாவிலும் பிரபல ஹிப் ஹொப் பாடகியாகத் திகழும் மாயாவின் போராட்டம் இன்றையை புதிய சந்ததிக்கு முன்னுதாரணம். பின் தங்கிய சிந்தனையில் ஊறியுள்ள ஈழத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்து M.I.A போன்றவர்களின் தோற்றம் இன்று அவசியமானது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ், அமெரிக்காவின் அழுகிய முகத்தை உலகிற்குக் காட்டிய எட்வார்ட் ஸ்னோடன் போன்றவர்களுக்காகக் குரல் கொடுத்த மாயா, வன்னி இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் தனது குரலைப் பதிவுசெய்திருக்கிறார்.
41 வயதாகும் மாதங்கி அருட்பிரகாசம் M.I.A என்ற பெயரிலேயே உலகெங்கும் அறியப்பட்டவர்.
ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று லண்டன் நகரில் வெளியாகும் என்ற நாழிதழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் பின்னர் உலகப் புகழ் பெற்ற AFROPUNK நிகழ்விலிருந்து நீக்கப்பட்டுள்ளர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ம் திகதியன்று லண்டனில் நடைபெறும் விழாவில் உலகின் புகழ் பெற்ற பாடகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். அதேவேளை M.I.A அந்த நிகழ்ச்சியிலிருந்து ஒழுங்கமைப்பாளர்களால் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களைப் பற்றி அமெரிக்காவின் டைம்ஸ் கோபுரத்திலோ, பிரித்தானிய தேம்ஸ் நதி ஓரத்திலோ உட்கார்ந்து பேசினால் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் அப்படிப் பேசுபவர்களைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே இலங்கை அரசிற்கு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் ஆனால் அங்கெல்லாம் ஆப்கானிஸ்தானிலும் சிரியாவிலும் இலங்கையிலும் ஏன் உலகின் ஏனைய பகுதிகளிலும் இந்த நாடுகள் நடத்தும் யுத்த வெறியாட்டங்களையும் சூறையாடலையும் பற்றிப் பேசினால் மட்டும் சிக்கலுக்கு உள்ளாக்கப்பட வாய்ப்புக்கள் உண்டு,
இன்று இலங்கையில் தமிழர்களின் மீதான இனப்படுகொலையை சிங்கள உழைக்கும் மக்களுக்கு உணர்த்தினாலோ அவர்களுடன் போராட்டங்களில் கைகோர்த்துக்கொண்டாலோ அழிக்கப்படுவோம். இம் முறை இலங்கை அரசு போர் வெற்றியைக் கொண்டாடவில்லை. இன்னும் சில வருடங்களில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் மாவீரர் தினத்தைக் கொண்டாட அனுமதித்தாலும் வியப்படைவதற்கில்லை. அதற்கிடையில் இலங்கையின் ஏழை மக்களும், தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரும் ஒட்டச் சூறையாடப்பட்டிருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் எமது நண்பர்கள் என்றும், ஒடுக்கும் அதிகாரவர்க்கம் எங்கிருந்தாலும் அவர்கள் எதிரிகள் என்றும் மக்களுக்குக் கூறுவதற்கு இலங்கையில் அரசியல் தலைமை இல்லை. அதேவேளை மாயா கூறுகிறார் ‘உலகம் முழுவதுமுள்ள மக்களுக்காக நான் குரலெழுப்புகிறேன். ஒருவர் மற்றொருவரை விட முக்கியமானவர் என்று கூறமுடியாது. சமமான உரிமை தான் இங்கு முக்கியமானது’.
எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக உலகம் முழுவதையும் கொலைக் களமாக மாற்றும் அமெரிக்காவிடம் மண்டியிடுவோம் என அறைகூவிய தமிழ்த் தலமைகளுக்கு மத்தியில் மாயா உயர்ந்து நிற்கிறார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொல்லப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் முன்வைத்துத் தோன்றிய அமைப்புத் தான் Black Lives Matter (கறுப்பர்களின் வாழ்க்கை முக்கிய விடையம்)
தன்னார்வ நிறுவனம் போன்ற இந்த அமைப்பின் உயர் மட்ட உறுப்பினர்கள் அமெரிக்காவை நேசிப்பதாகவும் அங்கு வாழும் கறுப்பினத்தோரின் வாழ்க்கையை உறுதி செய்வதே தமது நோக்கம் என்கிறார்கள். அமெரிக்காவை மட்டுமல்ல அந்த நாடு ஒடுக்கப்படும் மக்கள் மீது மேற்கொள்ளும் கொலைகளையுமே அவர்கள் நேசிக்கிறார்கள் என்பதே அத்ன் உள்ளர்த்தம். ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற அமைப்பையே உருவாக்கி வைத்திருக்கும் எமது தமிழ்த் தேசியவாத ‘முனோடிகளுக்கு’ இதெல்லாம் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் தான்.
அடையாளம் ஒன்றை முன்வைத்து மட்டுமே அரசியல் நடத்தும் இந்த நிகழ்ச்சிப் போக்கிற்கு எதிராக மாயாவின் கருத்துக்கள் கோபம் நிறைந்தது. அவர் Evening Standard இற்கு வழங்கிய நேர்காணலில், ” Beyoncé அல்லது Kendrick Lamar ‘இஸ்லாமியர்களின் வாழ்க்கை முக்கியமான விடயம்’ என்றோ ‘சிரிய மக்களின் வாழ்க்கை முக்கியமான விடையம்’ என்றோ கூறுவார்களா? அல்லது பாக்கிஸ்தானிய குழந்தைகள் பற்றி ஏதாவது கூறப்போகிறார்களா? அப்பிள் இல் ஒரு பாட்டாக அதனை நீங்கள் கேட்க முடியாது, ஓனன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் நீங்கள் அதனைக் கேட்க முடியாது. ரிவிட்டரில் டாக் ஒன்றை உருவாக்க முடியாது. மிஷேல் ஒபாமா உங்களைக் கொண்டாடப் போவதில்லை. இவைதான் சுவாரசியமான கேள்விகள். ”
இக் கருத்துக்களுக்காகத் தான் மாயா இலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தம்மைக் அமெரிக்கக் கறுப்பினத்தவரின் குரலாக அடையாளப்படுத்திக்கொள்ளும் குறிப்பிடும் இந்த இரண்டு பாடகர்களும் சிரியாவைப் பற்றியோ திட்டமிட்டு அழிக்கப்படும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் உலகம் முழுவதும் வாழும் மக்களைப் பற்றியோ பேசப் போவதில்லை என்பதை மாதங்கி அருள்பிரகாசம் தனது நேர்காணலில் போட்டு உடைத்ததை விழா ஒருங்கிணைப்பாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இங்கு ஒலிக்கிறார்.
பல் கலாச்சார நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும் இல் மாயாவின் கருத்துக்களுக்கு இடமிலை.
இலங்கை அரசு இப்போது மாயா அங்கு செல்வதற்கான தடையை நீக்கியுள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கு மாயா விரும்பவில்லை என்கிறார். கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மாயா, தான் ஒரு குழந்தையின் தாய் என்பதால் இபோது தனது வாழ்க்கையை இலங்கைக்குச் சென்று ஆபத்திற்கு உட்படுத்த விரும்பவில்லை என்கிறார்.
அமெரிக்கா மத்திய கிழக்கில் நடத்தும் சட்டவிரோத யுத்த்தினால் தமது சொந்த நிலத்திலிருந்து பிடுங்கியெறியப்பட்ட அகதிகளுக்காகப் பாடிய ஒரே பிரபல பாடகர் மாதங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக மாதங்கி அருட்பிரகாசத்தின் முன்னால் மேற்கு ஏகாதிபத்தியங்களின் பின்னால் அலையும் புலம்பெயர் மற்றும் இலங்கை அரசியல்வாதிகள் குறுகிய நோக்கம் கொண்ட வியாபாரிகளே.
அகதிகளுக்கான மாதங்கியின் பாடல்: