மான்களையும் மயில்களையும் சிறகுகள் பிய்த்து கொன்று விட்டு
வளம் செய்யும் தேனீக்களையும் மண்புழுக்களையும் தீயிட்டு எரித்து விட்டு
வான்முகில் பொழிய நினைத்த மழை நீரை தடுத்து விட்டு
அழகும் வாசமும் தர வீடு விரைந்த பூக்களை காலடியில் மிதித்து விட்டு
ஒளி நிறைந்த கண்களும் மனங்களும் கொண்டு
பால் வடியும் குழந்தை முகங்களோடு வந்தவர்களை
துரோகிகளாய் கொன்று போட விட்டு விட்டு
கடைசியாய் முள்ளிவாய்க்காலாய் பெயரிட்டு
மே பதினெட்டே நமது அறுவடை!
வரலாற்றை தேடாதவரும் அதை கல்லாதவரும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்து
மூத்த குடியென மடமை பேசுவோரும்
தொடங்கும் போதே தோற்று விட்டதை அறியாதவரும்
இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும்
முள்ளிவாய்க்கால் கரையோரம் அழுது புலம்பவே காலம் பணிக்கும் !
திசை தேடி அலைகிறோம்
பயணம் எங்கென்று தெரியவில்லை
புத்துணர்வு பாய
புதிய வழி வேண்டும்
அது ஒடுங்கிய மக்களின் முதல் காலடிகளில் தொடங்கும்
விலங்குகள் நொறுங்க
விடுதலை சூரியன் ஒளிர்வதை காண
இருப்போமோ இல்லையோ தெரியாது
ஆனாலும்
தெருக்களில் களனிகளில் நெருப்புக் கூடங்களில்
வாடும் மனிதருடன்
புத்தன் சிலையின் நிழலில் ஒதுங்கி
நீர்வற்றிய குளத்தின் கரையில்
தம்பசியாற
தாமரை கிழங்கினை கிளறும்
சுகுமாவதிகள் உடன்வர
எமை சூழ்ந்த
நுண்இழை அதிகாரங்கள் திகைத்துப் போக
நிலமும் காற்றும் நீரும் ஒளியும்
நெடு வானமும் பார்த்திருக்க
இயைந்து வாழ்ந்திடும்
ஒரு காலம் தொடர்ந்திடும்!
மகிழ்வும் நிம்மதியும் வேர் விடும் பூமியில்
எமக்கான வாழ்வும் எமக்கான இருப்பும் அங்கு நிலைத்திடும்!