சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்திய நிறுவனம் அப்பிரதேசத்தின் நீர் வளத்தையும் நிலத்தையும் நச்சாக்கியமை தெரிந்ததே. நிலக்கீழ் நீரை நஞ்சாக்கி சுற்றுச் சூழல் பேரவலத்தை ஏற்படுத்திய நோதேர்ன்பவர் என்ற நிறுவனத்தையும் அதன் தாய் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸையும் காப்பாற்றும் நோக்கில் வட மாகாண சபை போலி நிபுணர் குழு ஒன்றை நியமித்து ஆய்வு முடிவுகளைச் சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கை சமூகப்பற்றுள்ள பலரின் கண்டனத்திற்கு உள்ளானது.
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பாதிக்கப்பட்ட மக்கள் எம்ரி.டி வோக்கஸ் நிறுவனத்தாலும் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களாலும் அனாதரவாக விடப்பட்டனர்.
மக்களின் வாழ்வாதரம் மீதும், இயற்கையின் மீதும் நடத்தப்பட்ட வரலாறு கண்டிராத இத் தாக்குதலுக்கு எதிராக பல்வேறு ஆபத்துக்களைக் கடந்து ஒரு சில மக்கள் பற்றுள்ளவர்கள் மட்டுமே குரல்கொடுத்துவருகின்றனர்.
வட மாகாண சபையின் போலி அறிக்கைக்கு எதிரான முதலாவது எதிர்பு நடவடிக்கையாக நேற்று 18/12/2015 அன்று கருத்தரங்கும் ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன், தனி மனிதனாக, பல்வேறு ஆபத்துக்களையும் கடந்து சுன்னாகம் பேரழிவில் மக்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்றார்.
தெளிவான துறைசார் ஆய்வு ஒன்றை முன்வைத்துப் பேசிய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன், வட மாகாண சபையின் அறிக்கை எவ்வாறு போலியாகத் தயாரிக்கப்பட்டு மின்னிலையத்தை நடத்திய நிறுவனம் எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது தொடர்பாக என்பதை தரவுகளுடன் விளக்கினார்.
உரையைத் தொடர்ந்து பலரின் கேள்விகளுக்கு வைத்திய நிபுணர் பதிலளித்தார்.
ஒன்றுகூடலில் கலந்துகொண்ட பலரின் கருத்துக்களும் எதிர்ர்புக் குரலும் மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டியது.