மகிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உட் பிரிவுகள், ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக்காக உழைத்தன. இப்போது ரனிலுக்கும் ஏனையோருக்குமான மோதல் கூர்மையடைகிறது. கருத்து மோதல்கள் பல தடவைகள் நேரடியானவையாகக் காணப்படுகின்றன. ரனில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சம்பிக்க ரனவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ரனில் – சந்திரிக்கா இடையேயான நீண்ட காலப் பகை மீண்டும் தலை தூக்கியுள்ளது. சந்திரிக்கா – மைத்திரி கூட்டை சிதைப்பதற்கு ரனில் மகிந்தவுடன் நல்லிணக்கத்தைப் பேணுவதாக மைத்திரி தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன. இந்த இடைவெளிக்குள் மகிந்த மீண்டும் முளைவிட ஆரம்பித்துள்ளார்.
இதனிடையே இலங்கை ஜனாதிபதியின் இணைப்பாளரான சிரால் லக்திலக ரனில் விக்ரமசிங்கா மீது அரசியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் இறுதிப்பகுதியில் பாராளு மன்றத்தைக் கலைக்க வேண்டும் என ரனில் அரசு கூறி வருகிறது.
புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட பின்னரே தேர்தல் நடத்த முடியும் என மைத்திரி குழு கூறி வருகிறது. ரனில் குழு தேர்தல் நடத்தக் கோரி அரசை விட்டு வெளியேறினால் சோபித தேரரை அடுத்த பிரதமராக்குவேன் என லக்திலக தெரிவித்துள்ளார்.
தேர்தல் முரண்பாடுகள் அதிகரிக்கும் போது யார் பேரினவாதி என நிறுவுவதற்கு கட்சிகள் போட்டிபோடும் நிலை தோன்றும். அந்த வகையில் ரனில் பேரினவாதக் கருத்துக்களை உமிழ ஆரம்பித்துள்ளார்.