தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் சிவனேசதுரை சந்திரகாசன் என்ற பிள்ளையான் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல்கள் இலங்கை அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மிக முக்கியமாக இலங்கை அரசின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவைக் கொலைசெய்யுமாறு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டதாக பிள்ளையான் கூறியிருப்பது இலங்கை அரச வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னை நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேனவை கிழக்கு மாகாணத்தில் அல்லது பொலநறுவையில் வைத்துக் கொலை செய்யுமாறு கூறியதாகவும், தான் கொழும்ம்பில் வைத்து கொலை செய்ய முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். கொழும்பில் கொலை செய்தால் தன் மீது சந்தேகம் உருவாகும் என்பதால் மகிந்த திட்டத்தை மாற்றக் கோரியுள்ளர். இதனால் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரின் துணையுடன் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பொரலேஸ்கமுவவில் வைத்துக் கொலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மைத்திரிபால சிரிசேன மயிரிழையில் உயிர்தப்பினார் எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னதாக முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் ஊடாக எதிர்க்கட்சிக்கு இக் கொலை முயற்சி தொடர்பாக பிள்ளையான் அறிவித்ததாகவும் ஆனால் எந்த எதிர் வினையும் ஆற்றப்படவில்லை எனவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ரி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திக் கொலை செய்யப்பட்டதாகவும், ராஜன் சத்தியமூர்த்தியைப் பாராளுமன்ற உறுப்பினராக்கும் நோக்கத்துடனேயே இக் கொலை நடத்தப்பட்டதாகவும் ஆனல் ராஜன் சத்தியமூர்த்தி புலிகளால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
புலிகளின் பிளவின் பின்னர் பல உறுப்பினர்கள் இலங்கைப் புலனாய்வுத் துறையினல் கொலைக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இத் தகவல்களைத் தொடர்ந்து பல புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அரச தரப்பு தெரிவிக்கிறது.
மகிந்த அரச சர்வாதிகாரத்தின் கொலைக் கருவியாகப் பிள்ளையான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது அவர் வழங்கும் தகவல்களிலிருந்து தெளிவாகின்றது. இது காலம் வரைக்கும் பிள்ளையானை முன்வைத்து புலம்பெயர் நாடுகள் முழுவதும் கிழக்கு அடையாளத்தை முன்னிறுத்தும் வலையமைப்பு ஒன்று இயங்கிவந்துள்ளது. இலக்கியச் சந்திப்பு, மனித உரிமை, பெண்ணியம், புலியெதிர்ப்பு ஜனநாயகம், சாதிச் சங்கங்கள் போன்றன பிள்ளையான் குழுவை ஆதாரமாக முன்வைத்து செயற்பட்டுவந்தன. பிரான்சில் வசிக்கும் எம்.ஆர்.ஸ்டாலின் என்பவர் பிள்ளையானின் ஆலோசகர் என்ற பதவியை வகித்துவருகிறார்.
வெறுமனே மகிந்தவின் துணைப்படை போன்றதாக அல்லாமல் மகிந்தவுடன் ஆலோசனை நடத்தி கொலை செய்யும் அளவிற்கு பிள்ளையான் செயற்பட்டிருக்கிறார். பலம்மிக்க மாபியா பாணியிலான அமைப்புப் போன்று இயங்கிவந்த பிள்ளையான் குழுவிற்கு தென்னிந்திய பின்னவீனத்துவ அடையாள அரசியலின் ஆதரவும் இருந்துவந்திருக்கிறது. தவிர, பிள்ளையான் குழுவை பிரேமகுமார் குணரத்தினம் சந்தித்ததாக வெளியான தகவல்களும் அதன் பின்னர் அவரது புலம்பெயர் ஆதரவுக் குழுகளுடன் பிள்ளையான் ஆதரவுக் குழுக்களுக்கு நிலவிய அரசியல் உறவும் இங்கு கவனிக்கத்தக்கது.