இலங்கையில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என மைத்திரி – ரனில் அரசின் போலிஸ் படை தெரிவித்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்களும் அரசியல் கைதிகளாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. அரச இராணுவ ஒடுக்குமுறையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நோக்கத்துடன் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களும் அரசியல் கைதிகளாகவே கருதப்படவேண்டும், அவர்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் போராடிக் கைதானவர்களும் சரணடைந்தவர்களுமாகும்.
மகிந்த பாசிசத்தின் பின்னர் மைத்திரி பாசிசம் தோன்றுவதற்கான ஆரம்பக் கட்டமாக போலிஸ் படையின் இந்த அறிக்கையைக் கருதலாம்.
சிறைகளிலிருக்கும் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களை வெளியிடுவதும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஆயுதம் ஏந்தியிருந்தால் அவர்களை விடுதலை செய்வதும் உடனடடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையாகும். இந்த நிலையில், தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் அரசியல் கைதிகளின் வகையீட்டுக்குள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் எனப் போலிஸ் தரப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கோரமான போர்க்குற்றங்களைத் தூண்டிய இனக்கொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கும் அவரின் பரிவரங்களுக்கும் எதிராக வழக்குத் தொடர்வதை இடை நிறுத்தக்கோரும் மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சி அப்பாவிப் போராளிகளை விடுதலை செய்யவோ அவர்களது விபரங்களை வெளியிடவோ மறுக்கிறது.
அமெரிக்காவையும். ஐரோப்பிய நாடுகளையும், ஐ.நா போன்ற அமைப்புக்களையும் பிடித்துவந்து ராஜபக்சவைத் தண்டிக்கப் போவதாகப் பிழைப்பு நடத்திய புலம்பெயர் அமைப்புக்கள், அமெரிக்க ஆதரவு மைத்திரி அரசு அரசியல் கைதிகளை சட்டவிரோதமாகக் கடத்திச் சித்திரவதை செய்வதற்கு எதிராக என்னசெய்யப் போகிறார்கள்.?
ஒரு அரசியலை முன்வைத்துப் போராடாமல் பிரபாகரனையும் புலி அடையாளங்களையும் முன்வைத்துப் பிழைப்பு நடத்திய இந்த அமைப்புக்கள் தமிழ்ப் பேசும் மக்களை நட்டாற்றில் விட்டுள்ளன.
ஏகாதிபத்தியங்கள் கட்டவிழ்த்துவிட்ட நல்லாட்சி என்ற கருத்தை மந்திரம் போல உச்சாடணம் செய்யும் அரச ஊதுகுழல் ஊடகங்கள் அரசியல் கைதிகளை தொர்பாக மூச்சுவிடுவதில்லை.
இலங்கையில் எல்லாம் வழமைக்குத் திரும்பிவிட்டது என உலக மக்களை ஏமாற்றும் அதிகாரவர்க்கத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சிங்கள மக்களும் கூட மாற்றங்கள் அதிகம் இல்லை என்று பெரு மூச்சு விடுகிறார்கள். அவர்களது அதிருப்தியும் அரசின் காதுகளிற்கு எட்டியிருக்கிறது.