முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தின் நாடுகடத்தப்படுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற குமார் குணரத்தினம், இலங்கையில் அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் அதிகமாகத் தங்கியிருந்தமையைக் காரணமாக முன்வைத்து இலங்கை அரசு அவரைக் கைது செய்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் முன்னைலை சோசலிசக் கட்சியும் தேர்தலில் போட்டியிட்டது. அக்காலப்பகுதியில் இலங்கை சென்ற குமார் குணரத்தினம் அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் முன்னிலை சோசலிசக் கட்சி போட்டியிட்டது. ஜே.வி.பி இலிருந்து பிளவடைந்து முன்னிலை சோசலிசக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்த குழுவில் தலைமைப் பொறுப்பை வகித்த குமார் குணரத்தினம் சம உரிமை இயக்கம் என்ற என்ற அமைப்பையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் எதிரொலியாகவே குமார் குணரத்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சி தெரிவிக்கிறது. அரச படைகளால் கோரமாக ஒடுக்கப்பட்ட மாணவர் போராட்டங்களில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பங்கும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி உடன் கோட்பாட்டளவில் முன்னிலை சோசலிசக் கட்சி பாரிய முரண்பாடுகளக் கொண்டிராத போதிலும், ஜே.வி.பி கண்டன அறிக்கைகள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. அதே வேளை குமார் குணரத்தித்தின் கைதிற்கு ஜே.என்.பி கட்சியில் தலைவர் விமல் வீரவங்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.