கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது. புலம்பெயர் நாடுகளிலும் கேப்பாபுலவு மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன. லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் கேப்பாபுலவில் போராடும் மக்களைக் காட்டிகொடுக்கும் வியாபார அடையாளங்கள் எதுவும் முன்னிறுத்தப்படாமை புதிய ஜனநாயக வெளி ஒன்று ஆரம்பமாகியுள்ளதற்கான அடையாளமாகக் கருத்தில் கொள்ளலாம்.
கேப்பாபுலவில் போராடும் மக்களின் போராட்டத்தைத் தலைமை தாங்க வேண்டிய பொறுப்பிலிருகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை அரசிற்குக் காட்டிக்கொடுக்கும் நிலையில் இருப்பதால் போராட்டம் தலைமையற்று அனாதரவாக விடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற ஏனைய வாக்குப் பொறுக்கும் கட்சிகள், எழுக தமிழ் நிகழ்வின் பின்னர் ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு மாறி விட்டன.
வன்னிப் படுகொலைகள் நடத்தப்பட்டு ஐந்து எழு ஆண்டுகளின் பின்னரும் ஐ.நா சபை என்ன செய்கிறது என்பதை மையமாகக் கொண்டு அதன் மீதான போலித்தனமான நம்பிக்கையின் அடிப்படையிலேயே புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்களும், அவற்றின் உள்ளூர் ஏஜண்ட் போன்று தொழிற்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் செயற்படுகின்றன.
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பல பரிணாமங்களைக் கொண்டது. வெறும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் என்ற எல்லையைக் கடந்து தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் தொடர்ச்சியான இருப்பினைச் சிங்கள உழைக்கும் மக்களுக்குக் கூறும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது. கேப்பப்புலவும் மக்களுக்கு ஆதரவாக சிங்கள மக்கள் போராடியுள்ளனர். இலங்கை அரசின் பேரினவாத முகத்திரையைக் கிழித்தெறியும் வலிமைகொண்ட இவ்வாறான போராட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அமெரிக்காவினதும் ஐ.நாவினதும் ஆசியுடன் தோற்றுவிக்கப்பட்ட இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைக்காகத் தண்டிக்கப்படுமா என்ற கேள்விகளைத் தாண்டி, இலங்கை அரச பேரினவாதத்கைப் பலவீனப்படுத்தும் அரசியல் செயற்பாடுகள் இன்று அவசியமானவை.
லண்டனில் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின் இறுதியில் இலங்கை அரசைப் பலப்படுத்தும் வகையிலும், போராடும் மக்களைக் காட்டிக்கொடுக்கும் வகையிலும், அடையாளங்களை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் பின்னணியில் செயற்படுபவர்கள் குறித்த அவதானம் தேவை.
கேப்பாப்புலவை முன்மாதிரியாக்கொண்டு மக்கள் சார்ந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். போராட்டங்களைத் தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் விசமிகளைக் கடந்து மக்கள் இயக்கங்களும் அதனூடாக அவற்றைத் தலைமை தாங்கும் அரசியல் இயக்கங்களும் உருவாக வேண்டும்.
கேப்பாப்புலவை முன்மாதிரியாக்கொண்டு மக்கள் சார்ந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். போராட்டங்களைத் தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் விசமிகளைக் கடந்து மக்கள் இயக்கங்களும் அதனூடாக அவற்றைத் தலைமை தாங்கும் அரசியல் இயக்கங்களும் உருவாக வேண்டும்.