கமலினி செல்வராஜன் இன்று காலமானார். ஈழத்தின் சினிமா நாடக நடிகை, பாடகி, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளர் என்ற பல்வேறு கலை இலக்கியப் பரிமாணங்கள் ஊடாக அறியப்பட்ட கமலினி சில்லையூர் செல்வராஜனின் மனைவி. இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதர கதாவ” என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார்.
இடதுசாரி அரசியல் செயற்பாட்டளாரான சில்லையூர் செல்வராஜனின் மனைவியான கமலினி, இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோரின் மகள்.
1970 களில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஈழத்தின் கலை இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய மாற்றம் ஈழத்தமிழர்களின் தனித்துவத்தை முன்னிறுத்தியது. தென்னிந்திய கலை வியாபார ஆகிரமிப்பிற்கு எதிரான கலை இலக்கிய மறுமலர்ச்சிக் காலத்தில் கமலினி செல்வராஜன் மற்றும் சில்லையூர் செல்வராஜன் ஆகியோரின் பங்கு பேசப்படும்.