முதலாளித்துவ பொருளாதாரத்தின் தத்துவார்த்த அடிப்படையாக தேசியமும், அதன் அதிகார அமைப்பாக தேசங்களும் உலகம் முழுவதும் தோன்றியிருந்தன. 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரஞ்சுப் புரட்சி ஊடாக முதலாவது பிரஞ்சு குடியரசு உருவானது. இத்தாலிய தேசம் பல்வேறு இனக் குழுகளதும், மொழிகளதும் இணைப்பாகத் தோற்றம் பெற்றது. மன்னர்கால நிலப்பிரபுத்துவ அடிமைத்தனம் அழிக்கப்பட்டு முதலாளித்துவ ஜனநாயகம் ஐரோப்பா முழுவதும் தோன்றியது. தேசங்களின் உள்ளே தமது தேவைக்கும் அதிகமான மூலதனம் சேர்ந்துகொள்ள நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. அமெரிக்கா என்ற புதிய முதலாளித்துவ நாடு 1776 ஆம் ஆண்டு செவ்வியந்திர்களின் அழிவில் தோன்றியது. இந்தியா, இலங்கை உட்பட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆக்கிரமிக்கப்பட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளும் அடிமை நாடுகளாக்கப்பட்டன.
தேசங்களாக இந்த நாடுகள் தோன்றுவதற்கு முன்பே முதலாளித்துவம் இந்த நாடுகளுக்கு எல்லாம் காலனி ஆதிக்க நாடுகளால் ஏற்றுமதி செய்யப்பட்டது. சிதைவடைந்த முற்றிலும் முற்றுப் பெறாத முதலாளித்துவப் பொருளாதாரம் இந்த நாடுகளில் தோன்றின.
காலனி நாடுகள் தமது உரிமைக்காகப் போராட ஆரம்பித்த போது, அந்த நாடுகளை விட்டு வெளியேறிய காலனி அதிகாரம், புதிய காலனி அமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டது. தமது அடியாட்களையும், தரகர்களையும் அதிகாரத்தில் அமர்த்திவிட்டு தமது நாடுகளிலிருந்தே தாம் ஆக்கிரமித்த மூன்றாமுலக நாடுகளைக் கட்டுப்படுத்தின.தமது பொருளாதாரம்க் கட்டமைப்பு நெருக்கடிக்கு உள்ளான போது, முசோலீனி, ஹிட்லர் போன்ற நாசிஸ்டுக்களை உருவாக்கிய காலனி ஆதிக்க, ஏகாதிபத்திய நாடுகள் உலகப் போர்களையும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவே தோற்றுவித்தன.
1939 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற உலகப் போரின் பின்னர், அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
உலகப் போர் நடந்து முடிந்த உடனேயே 1945 ஒக்ரோபர் மாதம், சான் பிரன்ஸ்சிகோ நகரில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் அமெரிக்காவின் தலைமையில் தோன்றியது. அதற்கு ஒரு வருடங்களுக்கு முன்பதாக போர் முடிவடையில் நிலையில் உலக வங்கி அமெரிக்காவின் நியூ ஹாம்செயர் நகரில் உருவக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் தோன்றியது.
இந்த அமைப்புக்கள் அனைத்தும், அமெரிக்காவின் ஏகபோக அதிகாரத்தைக் உறுதிப்படுத்தவும் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுத்தவுமே பயன்பட்டன.
அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக இந்த அமைப்புக்களில் ஒன்றான உலக சுகாதார அமைப்பிற்கான நிதிக் கொடையை நிறுத்திக்கொள்வதாக ரம் நிர்வாகம் அறிவித்தது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் வெளியான ரம்பின் இந்த அறிவிப்பிற்கு சற்று முன்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் ரம் என்ற தனிமனிதன் கேள்விக்கு உள்ளாக்கினார்.
இவை அனைத்தையும் ரம் என்ற குரூரமான அரசியல் கோமாளியின் அறிவிப்பாகவே பெரும்பான்மையான ஆய்வுகள் சுருக்கிக்கொண்டன. அதற்கும் அப்பால் அமெரிக்க முதலாளித்துவத்தில் ஏற்பட்ட முதலாவது பிளவின் வெளிப்பாடாகவே இந்த அறிவிப்புக்கள் அமைந்திருந்தன. அமெரிக்க ஏகபோக அரசின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தவரே ரம் என்ற தனி நபரும் அவர் சார்ந்த அனைத்து ஆலோசகர்களும் ஏனைய பரிவாரங்களும்.
தனது கட்டுப்பாட்டிலிருந்த ஏகாதிபத்தியக் கூறுகளுக்கு எதிராக ரம் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு , சீனாவின் மூலதன விரிவாக்கமும் ஆதிக்கமும் பிரதான பங்கு வகித்திருந்தது. அமெரிக்காவில் ஏற்பட்டிருந்த அதிகாரவர்க்க உள் முரண்பாடிலும் சீன மூலதனம் குறித்தளவிலான செல்வாக்குச் செலுத்தியிருந்தது..
அமெரிக்க திறை சேரியில் மட்டும் 1.1 ரில்லியன் டொலர்களை சீன அரசு சொந்தமாக வைத்திருக்கிறது. இது மொத்த 22 வீதம் அமெரிக்காவின் வெளி நாட்டுக் கடனும், 7.1 வீதம் உள் நாட்டுக் கடனுமாகும். தவிர நூற்றுக் கணக்கான பெரு நிறுவனங்களை சீன முதலீடு பாதுகாத்திருக்கிறது.
கொரோன நோய்த் தொற்றின் பின்னர் அதிகரித்த சீன – அமெரிக்க அதிகார வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடு என்பது, அமெரிக்க அதிகாரவர்க்கங்களுக்கு இடையேயான உள் முரண்பாடாகவும் வெளிப்பட்டது.
கடந்த தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் பல் தேசிய நிறுவனங்கள் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் வழங்கிய நன்கொடைகளிலிருந்தே இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ளலாம்.
சேவைத்துறை சார்ந்த பல் தேசிய நிறுவனங்கள் ஜனநாயகக் கட்சிக்கும், ஏனையவை குடியரசுக் கட்சிக்கும் தமது நன்கொடை முதலீட்டை அதிகமாக வழங்கியிருந்தன. கடந்த தேர்தலிலிருந்தே ஆரம்பித்த இந்த முரண்பாடு உலகப் போருக்குப் பின்னான அமெரிக்க நிறுவனங்களில் மட்டுமன்றி, அந்த நாட்டின் உள்ளேயும் வெளிப்பட்டது.
அமெரிக்க உளவு நிறுவனமன எப்.பி.ஐ உடன் ரம் நிர்வாகத்தின் முரண் தொடர்பாக Peoplesworld என்ற அரசியல் இணையத் தளம் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது.
கொரொனா ஆரம்பித்த காலம் முதல் இந்த முரண்பாடு வெளிப்படையாகச் சந்திக்கு வந்திருந்தது.socialistalternative என்ற இணையம் குறிப்பிடும் போது, “வலதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒரு பகுதியினர் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் உடனடியாக நாடு மீண்டும் திறக்க வேண்டும் என்று கடுமையாக போராடுகிறார்கள், அதே நேரத்தில் ஆளும் வர்க்கத்தின் மற்றொரு முழுமையாக நிராகரிக்காமல் எச்சரிக்கையுடன் கையாள வலியுறுத்துகிறது. ஆளும் வர்க்கத்தின் உட் பிளவை இது வெளிப்படையாக உணர்த்துகிறது.”
ஏகாதிபத்திய அதிகார வர்க்கங்களிடையிலான பிளவு என்பது வழமையானது தான். ஆனால் உலகப் பொருளாதர நெருக்கடியும், சீனாவின் ஆதிக்கமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள் முரண்பாடுகளும் அமெரிக்காவை உலகின் “பேட்டை ரவுடி” என்ற நிலையிலிருந்து தரமிறக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வானது, இந்த பிளவை நிறுவன மயப்படுத்தியுள்ளது.
சரிந்து விழுந்துகொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்தின் உட் பிளவைச் சரி செய்வதற்கும், மீண்டும் அமெரிக்க உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், சீனாவுடனான மூலதனப் போட்டியை எதிர்கொள்ளவும் அதிகாரவர்க்கம் தெரிவு செய்துள்ள புதிய நிர்வாகி தான் ஜோ பைடன்.
17 ஆம் நுற்றாண்டில் ஆரம்பித்த தேசங்களின் தோற்றத்தின் போது தோன்றிய தேசியவாதம் மேற்கு ஏகபோக நாடுகளில் இப்போது காலவதியாகிவிட்டது.இதன் காரணமாகவே, தேசியம் என்ற அடையாளம் அதன் உண்மையான உள்ளர்த்தில் இருந்து விலகி நிற வெறியாகவும் மொழி வெறியாகவும் மத வெறியாகவும் மாற்றமடைந்துவிட்டது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அரசின் அதிகாரவர்க்கத் தத்துவம் உள் நாட்டில் நிற வெறியாகவும், வெளி நாடுகளில் அமெரிக்க ஏகபோக ஆதிக்கமாகவும் காணப்படுகிறது. பைடனின் ஆட்சியும் இந்த அடிப்படையில் தான் தொடரும். மிகவும் அதிகமாகவே உலக நாடுகள் மீதான் ஆக்கிரமிப்பு தீவிரப்படுத்தப்படும். நிற வெறி ஒபாமா காலத்தைப் போன்று நிறுவனமயப்படுத்தப்படும்.
“லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து குடியேறிய அகதிகள் அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள்; சிறைக் கூடங்களில் கறுப்பினக் கைதிகளோடு வெள்ளையினத்தவரை அடைத்து வைக்க முடியாது” போன்ற அருவருப்பான கருத்துக்களை முன்வைக்கும் கமலா ஹரிஸ் ஜனநாயகக் கட்சியை நிறவாதக் கட்சியாக நிறுவன மயப்படுத்த துணை செல்வார் என்பது நிச்சயம்.
ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளரும், முன்னை நாள் சீ.ஐ.ஏ இன் ஏஜண்டுமான அபிகாயில் ஸ்பான்பேர்க்கர் கூறியிருக்கும் கருத்து எதிர்வரும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் முன்னறிவிப்பு:
“நாம் மீண்டும் சோசலிசம் என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடது, இது பல திறமையான உறுப்பினர்களை அன்னியப்படுத்தியுள்ளது.”
கமலா ஹரிஸிடம் கறுப்பின மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய போது,
“கறுப்பின மக்களுக்காக மட்டும் வளர்ச்சித் திட்டங்களா? ஒரு போதும் கிடையாது, அது எல்லோருக்குமானது” என்று கூறியிருப்பது, எதிர்கால அமெரிக்காவின் நிற வெறிக்கான பைடனின் பாதையைத் தெளிவுபடுத்துகிறது.
மேலதிக வாசிப்பிற்கு:
https://www.thebalance.com/how-much-u-s-debt-does-china-own-417016
https://www.businessinsider.com/fortune-500-companies-republican-democrat-political-donations-2018-2?r=US&IR=T#cisco-11
Trump’s Criminal Mismanagement – Ruling Class Divided on Addressing Crisis
https://afropunk.com/2019/01/kamala-harris-has-been-tough-on-black-people-not-crime/