ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுவிட்டன. அமைச்சரவை எண்ணிக்கையினை அதிகரித்து, தேசிய அரசாங்கத்தை அமைத்தமை கண்டனத்திற்குரியது என்று விசனம் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி, அரசின் தேசிய நிறைவேற்று சபையில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் குறிப்பிட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலர் அரசாங்கத்துடன் கைகோர்த்தபின் நிமல் சிறிபாலடி சில்வா எதிர்க்கட்சி தலைவராவாரா எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியது.
மக்கள் விடுதலை முன்னணியினால் நேற்று பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில் மக்களிடம் ஏனைய அரசியல் கட்சிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியினர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்குறுதி கொடுத்தனர். மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகார ஆட்சியினை வீழ்த்தி நாட்டில் ஜனநாயகத்தினை கொண்டுவர வேண்டும் என்ற பிரதான காரணம் முன்வைக்கப்பட்டதுடன் அமைச்சரவை கூட்டமைப்பு அதிகாரப்பகிர்வு என முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினர். இதில் தனித்து மஹிந்த ராஜபக்ஷவை மட்டும் வீழ்த்தியது மட்டும் அல்லாது பிரதான அமைச்சர்கள் சிலருக்கு எதிராகவும் செயற்பட்டோம். ஆனால் இன்று அவர்கள் அனைவரையும் மீண்டும் அமைச்சர்களாக தேசிய அரசாங்கத்திற்குள் இணைத்துக் கொண்டுள்ளனர்.
மக்களை மைத்திரி ஏமாற்றிவிட்டார்
மைத்திரிபால சிறிசேனவை நம்பி அவரை ஜனாதிபதியாக்கிய பொது மக்களை ஏமாற்றிவிட்டு மீண்டும் ஊழல் அரசாங்கத்தை அவர் உருவாக்கிவிட்டார். இன்று அமைச்சரவையின் எண்ணிக்கை 77 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று உருவாகியிருப்பது தேசிய அரசு என்று சொல்கின்றனர். ஆனால் தேசிய அரசாங்கம் தமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டது. இனிமேல் இவர்களை தேசிய அரசாங்கம் என கூற முடியாது. இவ்வாறு ஒரு அரசாங்கத்தை நடத்த மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை, மக்கள் விரும்பவும் இல்லை. ஏனவே அரசாங்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தினை கலைத்து பாராளுமன்ற தேர்தலின் மூலம் புதிய பாராளுமன்றத்தினை அமைக்க வேண்டும்.
அதேபோல் தேசிய நிறைவேற்று சபையில் நாம் அங்கம் வகிக்கின்றோம். தேசிய நிறைவேற்று சபையின் மூலம் பல விடயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம். ஆனால் நாம் தேசிய அரசில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் இன்று அரசாங்கத்தின் செயற்பாட்டில் எமக்கு திருப்தி இல்லை. தொடர்ந்தும் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிப்பது தொடர்பில் நாம் தீர்மானமெடுப்போம். அதே போல் இவ் தேசிய நிறைவேற்று சபை தொடர்ந்து நீடிக்கப் போவது இல்லை. எனவே அவசியமில்லாதவிடத்து நாம் வெளியேறுவதே சிறந்த முடிவு.
மேலும் இன்று பாராளுமன்றின் எதிர்க்கட்சி யார்? தேசிய அரசாங்கம் ஆளும்தரப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி என்று சென்றார்கள். ஆனால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து விட்டது. நாளை பாரளுமன்றம் கூடும் இதில் நிமல் சிறிபாலடி சில்வா எங்கு அமர்வார். அவர் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா என்பதை தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தினை விளையாட்டு மைதானமாக்கிவிடக் கூடாது. எதிர்கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை இவர்கள் சரியாக செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.