இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, ஐ,நா நிபுணர்குழு அறிக்கை போன்றன ஆதாரபூர்வமாக தகவல்களைத் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மக்கள் குடியிருப்புக்களில் இராணுவம் சுதந்திரமாக உலாவருகிறது. 99 வீதம் சிங்களப் பெருந்தேசிய வெறியூட்டப்பட்ட இராணுவத்தின் தொடர்ச்சியான இருப்பு ஆபத்தானது. எப்போதும் வெடித்துச் சிதறக்கூடிய நேரக் குண்டுகளின் மேல் மக்களின் வாழ்க்கை அச்சத்துடன் தொடர்கிறது.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் கிராமத்தில் மக்களின் நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்துள்ள இராணுவம் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் நிலை கொண்டுள்ளது. இராணுவத்தை வெளியேறக் கோரி நிலங்களதும் வீடுகளதும் உரிமையாளர்கள் நடத்தும் போராட்டம் மக்கள் பங்களிப்பின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்குக் கிழக்கிலுள்ள வாக்குப் பொறுக்கும் அரசியல் தலைமைகள் மக்களை அணிதிரட்டுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில்லை. மக்கள் முன்னெடுக்கும் தன்னிச்சையான போராட்டங்களைக்கூட அவர்களை அணிதிரட்டுவதற்கானதும் அமைப்பாக்குவதற்கானதுமான கருவிகளாகப் பயன்படுத்திக்கொள்வதில்லை.
பரவிப்பாஞ்சானில் இரவு பகலாக நூற்றுக்கணக்கில் மக்கள் போராட்டம் நடத்திவருவதாக வழமை போல ஊடகங்கள் பரபப்புச் செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. வியாபாரத்தையும் அடையாளத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த ஊடகங்கள் பின் தங்கிய சிந்தனையின் சமூகக் குறியீடுகளாக மாறிவிட்டன.
வடக்குக் கிழக்கின் அரசியல் தலைமைகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வைத்திருக்கும் நம்பிக்கையை மக்கள் மீது வைத்ததில்லை. இலங்கை முழுவதிலும் மிகவும் பலவீனமான மக்கள் ஆதரவற்ற அரசின் ஆட்சியைக்கூட அசைத்துபார்க்கத் துணியாத இத் தலைமைகள் மக்கள் சார்ந்த அரசியலால் பிரதியிடப்பட வேண்டியதன் அவசியத்தைப் பரவிப்பாஞ்ச்சான் மக்களின் தனிமைப்படுத்தப்பட்ட போராட்டங்கள் உணர்த்துகின்றன.