13 நாட்களைக் கடந்து டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் மேலும் மேலும் திவீரமடைந்து வருகிறது. மத்திய அரசுடன் நடந்த ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், மோடி அரசு அமல் படுத்திய மூன்று மசோதாக்களிலும் திருத்தம் கொண்டு வருவோம் என்று எழுத்து பூர்வமாக மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை விவசாயிகள் நிராகரித்து விட்டனர்.
“நாங்கள் திருத்தம் கோரி டெல்லிக்கு போராட வரவில்லை. மாறாக மூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்யக் கோரியே டெல்லி வந்தோம்” என்று கூறி மத்திய அரசு சொன்ன திருத்தங்களை நிராகரித்து விட்டன. போராட்டங்களை மேலும் திவீரமாக்கும் நோக்கோடு டிசம்பர் 14-ஆம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
உலகில் இதுவரையில் அதிக அளவில் மக்கள் கலந்துகொண்ட போராட்டம் என்ற புகழ்பெற்ற இப் போராட்டத்திற்காக பல்வேறு தடங்கல்களைக் கடந்து விவசாயிகள் டெல்லியை அடைந்தனர். போராட்டத்தின் ஆரம்பமே ஒரு சாகச சினிமாவைப் போன்றும்புராணக் கதைகளைப் போன்றும் அமைந்திருந்தது. இந்திய இந்துத்துவ மதவெறி அரசு மட்டுமல்ல, பல்வேறு தத்துவங்களின் பின்னால் ஒளிந்துகொண்டு பாசிசத்தின் தொங்கு தசையாகச் செயற்பட்ட பல்வேறு தனி நபர்களையும், குழுக்களையும் கட்சிகளையும் வெளிப்படையாக இனம் காட்டியுள்ள இப் போராட்டமானது ஒரு அமைப்பு மாற்றத்திற்கான புரட்சியின் முதலாவது படி நிலையாக அமைய வாய்ப்புக்கள் உண்டு.
இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில், பொருளாதாரம் முறையே 24% மற்றும் 7.5% சுருங்கியது. வேலையின்மை அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் வாங்கும் திறன் குறைந்துவிட்டது. தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பொருளாதாரத்தின் அனைத்து துறைகளும்; கல்வி, சுகாதாரம், விவசாயம், வனவியல், பாதுகாப்பு, காப்பீடு, வங்கி, ரயில்வே மற்றும் பல தனியார்மயமாக்கல் மற்றும் பெருநிறுவன கொள்ளைக்காக திறக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் சட்டங்களின் திருத்தங்கள் பெருநிறுவன இலாபங்களை அதிகரிக்கும் நோக்கத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலை அதிகரிக்கும். அது அதானி, அம்பானி போன்ற பெரிய நிறுவனங்களின் பைகளை வளமாக்கும். தொழிலாள வர்க்க எதிர்ப்பு தேசிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு சட்டம் (இ.ஐ.ஏ), தொழிலாளர் குறியீடு மற்றும் விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) ஆகியவை அனைத்துமே விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
பாசிசம் கோலோச்சும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை முற்றாக இழந்துள்ளனர். பிரித்தானிய அரசால் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகம் பாசிசத்தையும், மதவாதத்தையும், இனவாதத்தையும் இலகுவாக உள் நுளைக்கக்கூடிய அத்தனை ஓட்டைகளையும் தன்னகத்தே வைத்துள்ளது. முதலாளித்துவ உற்பத்தி முறை அதன் உண்மையான உள்ளர்த்தில் வளர்ச்சியடையவில்லை. அரைகுறையாகத் திணிக்கப்பட்ட முதலாளித்துவம் அன்னிய மூலதனத்தில் தொங்கிக்கொள்ள ஆரம்பிக்க அதனோடு பின் தங்கிய நிலப்பிரபுத்துவ ஆதிக்கமும் இணைந்துகொண்டது. அரசுகளுக்கு இன்னும் கோட்பாட்டு முலாமை மதவாதமும், இனவாதமுமே வழங்கிக்கொண்டிருக்கிறது.
இன்றைய விவசாயிகளின் புரட்சி இந்த ஆதிக்கத்திற்கும் எதிரான என்பது மட்டுமல்ல, உற்பத்திச் சுரண்டலையும் மூர்க்கமாக எதிர்க்கத் தயாராகிவிட்டது. தெற்காசியாவின் ஒட்டவைக்கப்பட்ட ஜனநாயகத்திற்கு எதிரான ஆரம்ப்ப இயக்கமாகக் கூட இது அமையலாம்.