சனிக்கிழமைகளில் இலங்கை தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான தபாலகங்களை மூடுவதென அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக திணைக்களத்தின் தொழிங்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தபால் மா அதிபர் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பிற்கிடையே நேற்று (01) நடைபெற்ற பேச்சவார்த்தையின் போது கருத்துரைத்த தபால் மா அதிபர், இது திணைக்களத்தின் தீர்மானம் அல்லவெனவும், இது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தபால் சேவை சங்கத்தின் பிரதான செயலர் ரோஹன பெரன்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், சாதாரணமாக வாரத்தில் ஆறு நாட்கள் பொது மக்களின் பணிகளுக்காக இலங்கை தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான தபாலகங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கும். அரசாங்கத்தின் புதிய தீர்மானத்தின் அடிப்படையில், இனிவரும் காலங்களில் சனிக்கிழமைகளில் நடைபெறும் மக்களுக்கான சேவைகள் இடைநிறுத்தப்பட்டு தபாலங்கள் மூடப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
சனிக்கிழமை பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்று வழங்கப்படுகின்றது. இந்தக் கொடுப்பனவுகள் அடுத்த வருடத்தில் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, இதற்குத் தேவையான நிதி மானியங்களை வழங்குவதில்லையென திறைசேரி தீர்மானித்துள்ளதாக பதிலளித்துள்ளனர்.
அரசாங்கமும், அமைச்சர்களும் எவ்விதத்தில் மூடிமறைக்க முயற்சித்தாலும் தற்போது நடைமுறைப்படுத்துவது சர்வதேச நாணய நியத்திடம் பெற்றுக்கொண்ட கடனுதவிக்கான நிபந்தனைகள் எனவும், இதனூடாக அரசாங்கம் தனது செலவீனத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.