எல்லாவற்றிற்கும் ஒரே சுற்றில் தீர்வு என்று ஆட்சியைக் கையகப்படுத்திய ரனில் மற்றும் மைத்திரி அரசு எந்தப் பிரச்சனைக்கும் பகுதியான தீர்வையோ தீர்வுத் திட்டத்தையோ முன்வைக்கவில்லை. சரணடைந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தில் பதிந்தவர்களைக் கூட ராஜபக்ச பாசிஸ்டுக்கள் அழித்துத் துடைத்துவிட்டார்கள். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தில் பதிவு செய்த ஒருவருக்கு அதற்கான பதிவு இலக்கமும் வழங்கப்படிருந்தது.
அதன் பின்பு ஒரு மாதமளவில் குடும்பத்தினருடன் இணைந்திருந்த பின்னர் மேலதிக விசாரணைக்கு எனக் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் கைதானவர் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை என குடும்பத்தினர் ஆதாரபூர்வமாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர். கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்டவருக்கு மரணச் சான்றிதழ் வழங்கி அதில் கையெழுத்திடுமாறு மிரட்டி ஒன்றைரை லட்சம் ரூபாவை மரணத்திற்கு விலை பேசியுள்ளனர்.
உதிரிகளாகப் போராடி பலன் கிடைக்கவில்லை என்றும் இன்று அணிதிரள்வதற்குத் தயார் என்றும் வெளிப்படையாகக் கூறுகின்றனர். இலங்கையிலோ அதற்கு வெளியிலோ மக்களை அணிதிரட்டவும் போராடவும் அரசியல் தலைமைகள் அற்றுப்போன அவலமான சூழலில் ஐ.நா போன்ற ஏகாதிபத்திய அமைப்புக்களை மக்கள் நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.