இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தை அங்கீகரிக்கக் கோரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ‘சர்வதேச விசாரணை’ என்ற போலி முழக்கத்திற்காக மோதிக் கொள்கின்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சர்வதேச விசாரணையக் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணையைக் கோருவதாகவும் புலம்பெயர் ஊடகங்கள் பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன.
ஒற்றையாட்சி பாசிசப் பாராளுமன்றத் தேர்தலை நிராகரிப்பதா இல்லையா என்ற விவாதங்களை நிராகரிக்கும் இணைய ஊடகங்கள் தாம் போலித் தேசியவாதிகள் என மக்கள் மத்தியில் கூற ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச விசாரணையா அல்லது உள்ளக விசாரணையா; அரசாங்கத்தைத் தண்டிப்பதா அப்பாவிப் புலிப் போராளிகளைத் தண்டிப்பதா, விசாரணையே நடத்தாமல் காலம் கடத்துவதா என்ற விடையங்களைத் தீர்மானிப்பது அமெரிக்காவும் அதன் துணை நிறுவனம் போன்று செயற்படும் ஐ.நாவுமே தவிர இலங்கை வாக்குப் பொறுக்கும் அரசியல்வாதிகள் அல்ல.
விசாரணை நடத்துவோம், ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்ற சுலோகங்களை முன்வைப்பதெல்லாம் மக்களை உசுப்பேற்றி வாக்குப் பொறுக்குவதற்கு மட்டுமே.
2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசியல் தஞ்சம் கோரிய பல போராளிகள் ஐரோப்பிய நாடுகளால் போர்க்குற்றவாளிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இவற்றை கஜேந்திரகுமாரோ கூட்டமைப்போ கண்டுகொள்ளவில்லை. புலம்பெயர் ஊடகங்களும் புலம்பெயர் போலித் தேசியவாதிகளும் இது குறித்து மூச்சுகூட விடவில்லை.