ஈழத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் எவ்வளவு தியாகங்களையும் அர்ப்பணங்களையும் எமக்கு முன்னால் விட்டுச் சென்றிருக்கிறதோ அதே அளவிற்கு தனிநபர் பயங்கரவாதம், உட் கட்சிப் படுகொலைகள், அதிகாரவர்க்க அரசியல் என்ற அனைத்தையுமே தன்னகத்தே கொண்டிருந்தது. அன்னிய அரசுகள் போராட்டத்தின் எச்ச சொச்சங்களே தெரியாத அளவிற்கு அழித்துத் துடைத்தெறிவதற்கான அடிப்படைகளே அவற்றிலிருந்து தான் ஆரம்பமானது.
அவை அனைத்துமே போராட்டத்தின் நியாயங்களாக புதிய சந்ததிக்குக் கூறப்பட்டது. முழுமையான இருளுக்குள் மூழ்கடிக்கப்பட்ட புதிய தலைமுறைக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை இனவாதிகளும், ஏகாதிபத்திய அடியாட்களும், குற்றவாளிகளும் மறுத்தனர். வர்த்தகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஊடகங்கள் அவர்களுக்குத் துணை சென்றன.
தோற்றுப் போனதற்கான காரணங்களைப் புதிய தலைமுறைக்கும் உலகத்திற்கும் எடுத்துச் செல்வதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போராட்டத்தின் தோல்விக்கு நாம் காரணமல்ல சர்வதேசம் உள்ளே புகுந்து அழித்துவிட்டது என்று தவறுகள் அனைத்தையும் நிறுவனமாக்கும் பிழைப்புவாதிக்ளின் கூட்டம் அழிவுகளின் பின்னான தலைமையைக் கையகப்படுத்திக்கொண்டது.
உலகின் மூலை முடுக்கெல்லாம் போராட்டங்கள் அதிகாரவர்க்கத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றன. மிகப் பெரும்பாலான போராட்டங்கள் முன்னைய தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னெழுந்திருக்கின்றன.
நமது நிலைமையோ வேறானது. மாவீரர் நாளை வெறும் சடங்காக்கி கோவில்களிலும், நினைவுக் கூடங்களிலும் முடக்கிவிட்ட வியாபாரிகள் கூட்டம் உரிமைக்கான போராட்டத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பின் தள்ளியிருக்கின்றன.
இதுவரை நடந்தவை அனைத்தும் அப்பழுக்கில்லாத அரசியல் தவறுகள் இல்லாத புனிதமான போராட்டம் என்று மதச் சடங்கு போல அதனை மாற்றியமைத்துவிட்டனர். தவறுகளற்ற மாபெரும் இராணுவப் போராட்டம் அழிக்கப்பட்டுவிட்டதால் இனிமேல் அடங்கிப் போய் கிடைத்தைப் பெற்றுக்கொள்வதே ஒரே வழி என இலங்கை அரசிடம் ஒரு கும்பல் தஞ்சமடைந்துள்ளது; இன்னொரு கும்பல் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் காலடியில் ஏவல் நாய்களைப் போலக் காத்துக்கிடகின்றது.
ஆக, மாவீரர் தினம் என்பதை அடிமைச் சாசனமாகவும் சடங்காகவும் மாற்றிய கும்பல்களே இலங்கையிலும், ஐரோப்பாவிலும் “தமிழ்” அரசியலின் முகவர்கள். இவர்களின் கூட்டுச் சதியிலேயே மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்
ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த ஒரு சந்ததியே நமது அரசியல் தவறுகளால் அழித்துத் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றை சுய விமர்சனத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தி புதிய அரசியல் திசை வழியை அமைத்துக்கொள்ள தேசியப் பிழைபுவாதிகள் அனுமதிப்பதில்லை. கொலைகளையும், கோராங்களையும், மனித விழுமியங்களுக்கு எதிரான வன்முறைகளையும் நியாயப்படுத்தும் பிழைப்புவாதக் கும்பல்கள் சிறுகச் சிறுக எமது சமூகத்தைக் கொன்று தின்றுகொண்டிருக்கின்றன.
அவர்களின் கொலை வெறியைத் தூண்டியது பணப் பசி மட்டுமே. இப் பணப் பசியின் உச்சமாக நவம்பர் மாதத்தில் கொண்டாட்டப்படும் களியாட்டமான மாவீரர் தினம் அமைந்துள்ளது.
உலக மக்களுக்கும், ஒடுக்கப்படும் மக்கள் கூட்டங்களுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும், மனிதாபிமானிகளுக்கும் நமது சமூகத்தின் அரசியலை பிழைப்புவாத வன்முறையின் உச்சம் என வெளிப்படையாக் கூற மாவீரர் நாளைப் பிழைப்புவாதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
விட்டில் பூச்சிகள் போன்று மரணித்துப் போவதற்கு என்றே புலிகளுடன் இணைந்துகொண்ட தியாக உணர்வு மிக்க பல போராளிகள் இப் பிழைப்புவாதக் கும்பலை நிராகரிக்கின்றார்கள்.
தவறுகளை வெளிப்படையாக விமர்சனத்திற்கு உட்படுத்தி அவற்றை எதிர்கால சந்ததிக்குச் வெளிப்படுத்தி, அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் வழிமுறைய முன்வைக்க வேண்டும் என்ற உணர்வு இறுதிவரை போராடிய போராளிகள் மத்தியில் தோன்றியுள்ளது.
இந்த மாற்றம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் போது தேசியப் பிழைபுவாதிகள் ஓரம் கட்டப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பிரபாகரனுக்கு ஒளிவட்டம் கட்டி மரணித்துப் போனவர்களின் தியாகங்களின் மீது பிழைப்பு நடத்தும் இக் கும்பல்களே பிரபாகரனின் மரணத்திற்கும் காரணமாயின.
தாம் கடவுளுக்குச் சமமாக நேசிப்பதாகக் கூறும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மாவீரர் தினத்தில் எந்த விளக்கும் ஏற்றப்படுவதில்லை.
பிரபாகரனைப் பயன்படுத்தி மக்கள் பணத்தைச் சூறையாடிய இக் கும்பல்கள் அவரை அனாதையாக்கியுள்ளன.
——–*——-
1980 களின் மத்திய பகுதியில் நான்கு பிரதான விடுதலை இயக்கங்கள் ஒரு கூட்டமைபை ஏற்படுத்திக்கொண்டன. இக் கூட்டமைப்பிற்கு ENLF என்று பெயர் சூட்டப்பட்டது. ஈழப் போராட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கை வைக்க ஆரம்பித்திருந்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்துகொண்டனர். தமது இளவயதின் மகிழ்ச்சி என்பதே போராடி மரணிப்பது என்றே அவர்கள் நம்பினர். பள்ளிக்குப் போவதாக புத்தகங்களையும் காவிக்கொண்டு சென்ற குழந்தை இராணுவப் பயிற்சிக்கு என இந்தியா சென்றுவிட்டதாக பெற்றோர்கள் கேள்ள்வியுற்று மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று இருந்தது.
மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்திருக்கவில்லை. வெகுசனப் போராட்டங்களால் தெருக்கள் ஆர்ப்பரித்தன.
இந்திய அரசு இயக்கங்களை ஒன்று சேர்த்து அழிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது ENLF என்பதை அப்போது யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை.
புலிகள் இயக்கம் முதலில் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO ஐ அழித்தது. போராளிகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமலே தெருக்களில் மரணித்துப் போனார்கள். கிழக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இளைஞர்களுக்கு போக்கிடம் இருந்திருக்கவில்லை. பதினைந்திற்கும் இருபத்தைந்து வயதிற்கும் இடைப்பட்ட போராளிகள் கிடைக்கும் இடங்களில் மறைந்துகொண்டார்கள். திருனெல்வேலியில் இரண்டு கிழக்குமாகாண இளைஞர்கள் புலிகளின் மேலிடத்து உத்தரவால் உயிரோடு எரிக்கப்பட்டார்கள்.
டெலோ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் சரண்டைய வேண்டும் என ஒலி பெருக்கி உத்தரவால் யாழ்ப்பாணம் அதிர்ந்தது. வழமையாக விமானக் குண்டு மழை பொழியும் இலங்கை அரச விமானங்கள் அன்று அனைத்தையும் நிறுத்திக்கொண்டன.
இவை எல்லாம் நியாயம் எனப் போதிப்பதற்கு புதிய கூட்டம் ஒன்று தோன்றியது. இறுதி நாள் வரை டெலோவின் ஊதுகுழலாகச் செயற்பட்ட புதுவை இரத்தினதுரை புலிகளின் கவிஞனாக மாறினார். தவறுகளை நியாயப்படுத்த என்றே புதிய புத்திசீவிகள் கூட்டம் தோன்றியது.
இதே போலத்தான் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமும் அழிக்கப்பட்டது. போராளிகள் தெருத்தெருவாகக் கொல்லப்பட்டனர். புத்திசீவிகள் என்று கூறிக்கொண்ட கூட்டம் முழு மக்களின் மனிதாபிமான உணர்வுகளைக் குழி தோண்டிப் புதைப்பதற்குத் துணை போயிற்று.
மனிதத்தின் மீதான வன்முறையை நியாயம் எனப் போதித்தது. உலகிற்கு தமிழினத்தை வன்முறை மீது காதல்கொண்ட இனமாக அறிமுகப்படுத்திற்று. அக்கூட்டம் முள்ளிவாய்க்கால் வரை புலிகளை அழைத்து வந்து கொன்று போடும் அளவிற்கு விருட்சமாக வளர்ந்து இன்றும் எமது அவமானச் சின்னமாக உலகில் வலம் வருகின்றது. இன்று வரைக்கும் வன்முறைகளுக்குப் பொழிப்புக் கூறும் இக் கூட்டம் தவறுகளை நியாயப்படுத்தி எதிர்காலத்தை இருளின் விழிம்பிற்குள்ளேயே வைத்திருக்கிறது.
இவர்களுக்குப் பயன்படுவது பிரபாகரனும் புலிகளின் அடையாளமும் மட்டுமே. புதிய தலைமுறைக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை மறுக்கும் இந்த வன்முறைக் கும்பல்களின் பிடியிலேயே மாவீரர் தினம் என்ற பொன்முட்டை போடும் வாத்து அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது.
பிரபாகரனுக்கு அஞ்சலி செய்வதன் ஊடாக உலகத்திற்கு உண்மையைச் சொல்லும் தலைமுறை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்படுமானால், சிறீ சபாரத்தினம், பத்மநாபா போன்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும். போராடி மரணித்துப் போன அனைத்து இயக்கப் போராளிகளும் துரோகிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்.அவர்கள் அஞ்சலிக்குரியவர்களே. நம்மை வன்முறையாளர்கள் பட்டியலிரிருந்து நீக்கிக் கொண்டு உலக மக்கள் மத்தியில் ஜனநாயகவாதிகளாக அறிமுகப்படுத்தும் முதல்படியாக இது அமையும். வக்கிர மனோபாவம் நிறைந்த சந்ததி ஒன்று உருவாகுவதைத் தடுப்பதற்கான நுளைவாசலாக இது அமையும்.
~மீள் பதிவு~
மறுபடியும் ஒரு உணா்வுபூா்வமான வேண்டுகோள் புாிந்துகொள்வாா்களா இந்த வியாபாாிகள்??
தலைவரின் தியாகத்தினையே மறைக்கும் புலம்பெயர் கொள்ளைக் கூட்டம், மற்றைய விடயங்களில் மக்களிற்கு எவ்வாறு உண்மைசொல்லும்.
பொப்பியைச் சூடு
காந்தளைச் சூடு
இன்னும் எதுவோ அதனையும் சூடு
இன்னும் ஒன்றையும் செய் -எங்களுக்கு வாழ்வு குடு.
நினைவுகளை மீட்டு
கூட்டங்களைக் கூட்டு
நாடுகளைச் சேர்த்து விசாரணையும் கூட்டு
வீடுகள் இல்லையிங்கு அதனையும் கட்டு.
நஞ்சினைச் சுமந்தோம் –ஆதரித்தாய்
வெஞ்சினம் கொண்டோம்-ஆர்ப்பரித்தாய்
நாதியில்லை எனக்கிங்கு எங்கு நீ போனாய்
ஏதிலியா நாமிங்கு இப்போ? –என்ன நீ ஆனாய்
கோடி கோடியாய்க் கொட்டினாய்
நாடு வேண்டும் எனக்கென்றாய்
இரத்தமும் சதையும் கொடுத்தோம்
இரக்கும் நிலைக்கு விழ நீ விட்டாய்
இறந்தவரைத் கொண்டாடு
மறைக்கப்பட்டோரை ஊரைக் கூட்டித் தேடு
செத்துப் பிழைத்தோம் அதையும் பாரு
வத்திப் போச்சு எம் கண்ணின் நீரு.
சோறா சுகந்திரமா நிறுத்து உன் பேச்சை
சோறு இல்லை அதனால் நிற்குது முர்ச்சை
சோறும் சுகந்திரமும் வேணும் என்று மாற்று உன் பேச்சை
ஆறும் என்று எண்ணாதே இங்கிந்த சுகந்திர வேட்கை