இலங்கை பேரினவாத பாசிச அரசு மாவீரர் தினம் நிகழ்த்தப்படும் போது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் பேரினவாத அரசியலைப் பாதுகாப்பது மட்டுமே தமிழ் சிங்கள அதிகாரவர்க்கங்களின் இருப்பிற்கு தேவையானது என்பதை இலங்கை அரசுகள் மீண்டும் மீண்டும் சந்தேகமில்லாமல் தெரிவிக்கின்றன. போராட்டத்தில் மரணித்த மக்களையும் போராளிகளையும் அவர்களது உறவினர்கள் நினைவுகூர்வதைக் கூடத் தடைசெய்யும் இலங்கை அரசின் நோக்கம் நல்லிணக்கமோ நல்லாட்சியோ கிடையாது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசின் அடியாள் படையாகச் செயற்படும் இலங்கை அரசு பேரினவாத்த்தையும் இனவாதத்தையும் அழிப்பதற்கு எப்போதும் முன்வரமாட்டாது.
தேவைப்படும் போதெல்லாம் பேரினவாதத்தைத் தூண்டி தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதே இலங்கை அதிகாரவர்க்கத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் நோக்கம்.
மறு புறத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் தொடர்பான எந்த அக்கறையுமற்ற அடிப்படைவாதிகள் குழு ஒன்று மாவீரர் தினத்தை வியாபாரமாக்கியுள்ளது. மக்களின் சகல பிரிவினர்களையும் அணிதிரட்டி எழுச்சி நாளாக மாற்ற வேண்டிய மாவீரர் தினமும் அது போன்ற நினைவு நாட்களும் மத அடிப்படைவாதம் போன்று உணர்ச்சிவசப்படுத்தி மாற்றப்பட்டுள்ளது.
இலங்கை அரச பாசிசத்திற்கு தீனி போடும் தமிழ் இனவாதமும் அடிப்படைவாதமும் தீபமிட்டு வளர்க்கப்படாமல் தீயிட்டுக் கொழுத்தப்பட வேண்டும்.