அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். இச் சந்தர்ப்பத்தில் நம்மால் அக் குழுவை மீறி அவளுக்கு உதவ முடியாவிடில், உடனே யாரை அழைக்கத் தோன்றும்? காவல்துறையைத் தானே?! காவல்துறையே இப் பாதகத்தைச் செய்தால்? அதுவும் பலர் பார்த்துக் கொண்டிருக்கையில்? கட்டுநாயக்க, சுதந்திர வர்த்தக வலயத்தில் அதுதான் நடந்தது.
வன்னியில் இனப்படுகொலையை நடத்தி முடித்த இலங்கை இராணுவம் 2011 ஆம் ஆண்டு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தகவலையத் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் தான் இது நடந்தது.
தமது மறு வேளை உணவிற்காக இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எந்தச் சொத்துமற்ற ஆடைத் தொழிலாளர்கள் தமகுக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியத்திற்காக நடத்திய போராட்டம் இலங்கை இராணுவத்தை வழி நடத்திய கோத்தபய ராஜபக்சவை வெறிகொள்ள வைத்தது.
ஊர்வலத்தைத் தடுப்பதற்காக, ஊர்வலத்தில் முன்வரிசையில் நின்ற பெண்ணொருவரின் ஆடையானது காவல்துறையினரால் கழற்றப்பட்டது. அத்தோடு தமது கைகளிலிருந்த லத்திக் கம்புகளால் கூட்டத்தைத் தாக்கத் தொடங்கியது காவல்துறை. கண்ணீர்க் குண்டுகளை அக் கூட்டத்தின் மீது பிரயோகித்ததோடு, இறப்பர் குண்டுகளைத் துப்பாக்கிகளிலிட்டு கூட்டத்தை நோக்கி சுடவும் தொடங்கியது.
ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக கோத்தாபய தனது தனியார் இராணுவமான அவன்கார் மரிரைம் என்ற நிறுவனத்தின் இராணுவத்தைப் பயன்படுத்தினார் என்ற தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
ஊழியர்களின் எதிர்ப்பை அடக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார்.
ஊழியர்களின் எதிர்ப்பை அடக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் ரொஷான் கொல்லப்பட்டிருந்தார். இதனை அடக்குவதற்கு மகிந்த அரசு தனது வழக்கமான பாணியை கடைப்பிடித்தது.
ரொஷானின் இறுதி ஊர்வலத்திற்கு நீதிமன்றத்தின் மூலம் கட்டுப்பாடு விதித்தது. அச்சுறுத்தல் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை பணியச் செய்தது. எனினும், இந்த மரணம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. ரொஷானின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடிக்கலாமென நினைத்த அரசு, நீதிமன்றத்தின் மூலம் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ரொஷானின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த பின்னர், நூற்றுக்கணக்கான அதிரடிப்படையினர், அந்த வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.
மரணச்சடங்கின் முதல்நாள், தேவாலயத்தை விட வேறெங்கும் உடலை கொண்டு செல்ல முடியாதென்றும், ஒரு மதகுரு மற்றும் ஒரு நண்பரின் உரைக்கு மட்டுமே நீதிமன்றத்தின் மூலம் அனுமதியளித்தது. அது தவிர, மக்கள் போராட்டம் வெடிக்கக்கூடாதென்பதற்காக அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. இது தவிர, மரணச்சடங்கில் அரசிற்கு எதிரான போராட்டங்கள் நடந்து விடக்கூடாதென்பதற்காக, மரணச்சடங்கையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
மரணச் சடங்கையும் கோத்தாபயவின் தனியார் இராணுவ ஊழியர்களே நடத்தினர். இதுவரை இச்சம்பவங்கள் தொடர்பாகப் பேசுவதற்கு அச்சமடைந்திருந்தேன் எனக் கூறும் ரொஷானின் சகோதரர் கோத்தாபயவின் கொலைகளுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழுந்த எதிர்ப்புக்களை உள்வாங்கிக்க்கொண்டு அவர்களின் அரசுக்கு எதிரான உழைக்கும் மக்களோடு இணைந்து சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை புதிய அரசியலின் அடிப்படையில் முன்னெடுக்கத் தவறிய தமிழ் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுக்கள், போராட்டத்தை அமெரிக்காவிடமும் ஐ.நாவிடமும் விற்பனை செய்துவிட்டு தமிழர்களை நடுத்தெருவில் விட்டுள்ளன.