உங்கள் நாட்டுக்குச் செல்லுங்கள் அல்லது கைதாவீர்கள் என்ற சுலோகத்துடன் பிரித்தானிய அரச உள்துறை அலுவலகத்தின் வெள்ளை வான் ஒன்று வெளி நாட்டவர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உலா வருகின்றது. தெரு நாய்களைப் பிடிப்பதற்கு ஆசிய நாடுகளில் உலா வரும் வாகனங்களைப் போல, இலங்கை ராஜபக்ச அரசின் வெள்ளை வான் கைதுகளைப் போல பிரித்தானியாவிலும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு எதிராக இச் சுலோகம் பொறிக்கப்பட்ட வாகனம் உலாவருகிறது. பிரித்தானியாவில் பாசிசக் கட்சிகளின் வெளி நாட்டவர்களுக்கு எதிரான சுலோகமான ‘உங்கள் நாடுகளுக்குச் செல்லுங்கள்’ என்பதை உள்துறை அலுவலகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஆங்கிலேயர் பாதுகாப்பு அமைப்பு போன்ற பிரித்தானிய நிறவாத அமைப்புக்கள் கடந்த ஐந்து வருடங்களில் பிரித்தானியா எங்கும் வளர்ச்சி பெற்றுள்ளது. பிரித்தானியாவில் வறிவர்களுக்கான சமூக நலத் திட்டங்களை அழித்து மக்கள் மீது அதீதமாக வரிச் சுமையைச் செலுத்திவரும் அரசு மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்ப நிறவாதத்தை விதைக்க ஆரம்பித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த ஊர்திப் பிரச்சாரம் வெளி நாட்டுக் குடியேறிகள் அனைவரையும் அச்சத்திற்கு உள்ளாக்கும் நோக்கத்தையும் கொண்டது.
‘பிரித்தானியாவில் சட்டவிரோதக் குடியேறிகளா? நாட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள் அல்லது கைதாவீர்கள், உதவிக்கு HOME to 78070 என்ற தொடர்பிற்குக் குறுஞ்செய்தி அனுப்புங்கள்’ என்ற சுலோகத்துடன் ஈலிங், ஹவுன்சிலோ, பிரென்ட், பார்க்கிங், ரெட்பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் இந்த ஊர்தி கடந்த சில நாட்களாக உலாவருகிறது.