உலகம் முழுவதும் எதிர்பார்த்திராத பொருளாதார நெருக்கடிக்குள் உபட்டுள்ளது என்றும் உடனடித் தீர்வுகளற்ற இந்த நெருக்கடியால் வறிய நாடுகளே அதிகம் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலகப் பேரழிவு என வர்ணிக்கும் நிதியம் உலகின் வறிய நாடுகளில் வறுமை தலைவிரித்தாடும் என்கிறது. குறிப்பாக மூலப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகள் மூலப் பொருட்களின் விலைச் சரிவினால் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 52 நாடுகள் ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன மேலும் 63 நாடுகள் பாதிப்படையும் என ஜூபிலி கடன் பிரச்சாரம் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது. வளர்ச்சியடையும் நாடுகள் என்று அழைக்கப்படும் உலகமயத்தால் மறு காலனியாக்கப்பட நாடுகளின் கடன் தொகை 10 வீதத்தால் அதிகரிக்கும் என குறிப்பிடுகிறது.
ஐ.எம்.எப் வழங்கும் கடன் தொகை மீளப் பெறமுடியாதவையாகிவிடும் என்று அறிவிக்க அதன் மறுபக்கத்தில் சீன அரசு பல நாடுகளுக்கு பெரும் தொகைக் கடன் தொகையை வழங்கி வருகிறது. இலங்கைக்கு மட்டும் 500 மில்லியன் டொலர் கடனை சீனா உறுதி செய்துள்ளது. கொரோனாவிற்குப் பின்னான வல்லரசுப் போட்டியில் அமெரிக்கா தனது பிடியை இழந்து வருகிறது. அதனை மீட்பதற்கு ஐ,எம்.எப் மற்றும் உலக வங்கியின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது
அமெரிக்கா பிரித்தானியா உட்பட ஏகபோக நாடுகள் பணத்தை புதிதாக அச்சிடுவதன் ஊடாக தமது கடன் தொகையை தற்காலிகமாக எதிர்கொள்ள முனைவதால், மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 15 சத விகிதம் கடன் தொகையாக மாறும் என மதிப்பிடப்படுகிறது.
76 ஏழ்மையான நாடுகள் பிற அரசாங்கங்களை திருப்பிச் செலுத்துவதற்கு 18 பில்லியன் டாலர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு நிறுவனங்களை திருப்பிச் செலுத்துவதில் 12 பில்லியன் டாலர் மற்றும் தனியார் கடன் வழங்குநர்களான வங்கிகள் மற்றும் ஹெட்ஜ் நிதி போன்றவற்றை திருப்பிச் செலுத்துவதற்கு 10 பில்லியன் டாலர் செலவிடும் என கணிக்கப்படுகிறது.
ஐ.எம்.எப், மூன்றாம் உலக நாடுகளுக்கு கொரோனா நிதியா 100 பில்லியன் டலர்களைக் கடனாக வழங்கியதாகக் கூறுகிறது, இதன் மறுபக்கத்தில் இத் தொகையானது முன்னைய கடனைத் திருப்பிச் செலுத்த மட்டுமே பயன்படும் என பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர். கொரோனாவிற்கான தீர்வு என்பது திட்டமிட்டோ அல்லது இயல்பாகவோ எட்டப்படாத நிலையில் மூன்றாவது உலக நாடுகளை ஏகபோக நாடுகள் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பொறிமுறையாக கொரோனா கடன் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் பயன்படுகின்றனவா என பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.