எரியிற வீட்டில புடுங்கிறது லாபம் என்று அரசியல் செய்யக் கிழம்மியிருக்பிறது தமிழ் தேசிய மக்கள் முன்னணி. கஜேந்திரன் கோஸ்ரியின் பொறுப்பு எரிப்பது, புடுங்கிற பொறுப்பு புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பேரில் வியாபாரம் செய்பவர்கட்கு. லண்டனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு கொடுப்பது பற்றி நடந்த கூட்டத்தில் மக்கள் அக்கறையே தமது பாரிய கடமை போல காட்டுவதற்காக யாழ் மாவட்டம் தவிர வேறு எங்கும் தேர்தலில் முன்னணி நிற்காது என்று கூறிவிட்டு, தேர்தல் திகதி அறிவித்ததும் தங்கள் நிறத்தைக் காட்டிய இந்தக் கட்சி வென்றால் என்ன செய்யும் என்பதை ஊகிக்க எல் எல் பி முடிக்கவேணும் எண்ட அவசியம் இல்லை.
யாழ் மாவட்டம் தவிர வேறு எங்கும் கேட்க மாட்டோம் என்று கூறவேண்டி ஏற்பட்டதற்கான காரணம், கூட்டத்துக்குச் சமூகம் தந்திருந்த மக்களில் பெரும் பாலானோருக்குத் தெரியும் யாழ்ப்பாணம் தவிர வேறு எங்கையும் இந்தக் கட்சி வெல்லாது என்று. அது மட்டுமல்ல, இக் கட்சி கேட்டால், அது வாக்குக் பிரிக்கும் , தமிழ் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்பதால் தேர்தல் திகதி அறிவிக்கும் வரை வெட்டி ஓடுவம் என்கிற அதி உயர் ராஜதந்திரத்தை உபயோகித்திருக்கிறார்கள். தேர்தல் திகதி அறிவித்ததும் எல்லா மாவட்டங்களிலும் வேட்பாளர்களை இறக்கி விளையாட்டைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். மக்களும் இவங்களை ரொம்ப நல்லவங்கள் என்று நினைப்பாங்கள் என்பது கூட இவர்களது ராஜதந்திர நகர்வுகளில் ஒன்று.
வாக்குகளைப் பிரித்து மகிந்தவை வெல்ல வைக்க அவர்களால் என்ன முடியுமோ அதை செய்திருக்கிறது இந்தக் கட்சி. அண்மையில் கனடாவில் இருந்து வந்த சக்தி என்ற பெண்மணி ( அவர், தான் ஊடகவியலாளர், ஊடகவியலாளர் என்று உளறியதை வெளியே எடுத்தால் மிஞ்சியது ஒன்றுமில்லை.) ஒரு பேப்பர் கோபியுடன்( முன்னணியின் லண்டன் பரப்புரையாளர்) தினேஸ் ஐபிசி தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டியில், யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆசனங்கள் கிடைக்கலாம். திருகோணமலை, மட்டக்களப்பில் ஒரு ஆசனமும் கிடைக்காது என்கிறார்.)
கிடைக்காது என்று தெரிந்து கொண்டே களம் இறக்கிய நோக்கம் என்ன? புலம் பெயர் நாடுகளிலை கடை விரிச்சுப் போட்டு இருக்கிறவைக்கு வியாபாரம் சூடு பிடிக்குதில்லை. தேசியத்துக்கு சாயம் வெளுக்கிறதாலை அதையும் விக்கேலாமல் இருக்கு. கடைகளில போய் தேசியத் தலைவர் அது இது எண்டு சொன்னா எல்லாருமா சேந்து கொண்டுபோட்டு, கலக்சனுக்கோடா வாறியள் என்று காறித் துப்பாத குறை. போட்ட கடையை மூடேலாது. கமலகாசன் சொல்லுவார் எனக்கு நடிக்கிறதைத் தவிர வேறை தொழில் தெரியாது என்று. அதேமாதிரித்தான் அமெரிக்காவோட சேந்து இயக்கத்தை அழிச்சுப் போட்டு திடீர் முதலாளி ஆனவைக்கு தேசியத்தை விக்கிறதைத் தவிர வேறை வேலை தெரியாது.
தெரிஞ்சாலும், ஈசியா சம்பாதிக்க வழி இருக்கும் போது யாராவது கஸ்ரப்பட்டு உழைக்கலாமோ சொல்லுங்கோ. ஈழத்தில பிரச்சனையைக் கிளப்பக் கூடிய கட்சி ஆட்சிக்கு வரவேணும். அது மகிந்த தலைமையிலான கட்சி. அதுக்கு கூட்டமைப்புக் காறங்கள் ஆதரவு குடுக்காங்கள். அப்ப ஒரே வழி அவங்கட பிரதிநிதித்துவத்தை குறைப்பது, வடக்கு கிழக்கில் மக்களுக்கு இனவாத்த்தை ஊட்டுவது , மகிந்தவை இறக்கி ஆமியை வைத்து அடிப்பது அந்த ரென்சனை புலம்பெயர் பினாமிகள் காசாக்குவது. எதையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது என்ற தியரியை கரைச்சுக் குடிச்சிருப்பாங்கள் போல.
இவர்கள் கொள்கைப் பிடிப்பில் உறுதியானவர்களாம் என்று கனடாவிலை இருந்து ஊடகவியலாளர் என்று சொல்லிக் கொண்டு லண்டன் வந்து கிளாஸ் எடுக்கிறா சக்தி மேடம். மேடம் சொன்னாப் பிறகு அப்பிடி என்னதான் இவங்கள் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் இருக்கிறாங்கள் என்று வரலாற்றைக் கொஞ்சம் புரட்டி உருட்டிப் பாத்தால் ,கூட்டமைப்பில ஆசனம் கேட்டாங்கள், இல்லை எண்டதும் வெளில வந்தாங்கள். கொள்கையில ஏற்பட்ட முரண்பாடு என்று வெளில வந்தம் எண்டாங்கள். பிறகு கஜேந்திரன் சொல்லிறார் சம்மந்தரும் சுமந்திரனும் இல்லை என்றா சேருவம் எண்டு. அப்பாடா கேட்கும் போதூ கொள்கைப் பிடிப்பு எப்பிடி எண்டு விளங்குதோ? ஆருக்கும் புல்லரிக்குதோ? எக்கு இப்பவே கண்ணக் கட்டுதே.
யாழ்ப்பாணத்தில மட்டும் தான் கேட்பம் எண்டாங்கள், பிறகு எல்லா தமிழ் மாவட்டங்களிலையும் கேக்கிறாங்கள். பொங்கு தமிழை உசுப்பேத்தினார் குட்டி கஜேந்திரன். பக்கவாத்தியம் வாசிச்சது பத்மினி மேடம். ஆமி கலைக்க மாணவர்களை அம்போ என்று விட்டிட்டு நோர்வே ஓடின கொள்கைப் பிடிப்பிருக்கே காத்தவராயன் கூத்து மாதிரி விடிய விடியச் சொல்லலாம். மேடம், அரசியலை அலாக்காத் தூக்கிச் சாப்பிட்டிருக்பினா போல. பேட்டியைப் பாக்க பாக்க எனக்குள்ள ஒரு ஒளி வட்டம் விளத் தொடங்கிற்று. தலை எழுத்து, இந்த மாதிரி அறிவிலிகளின் பேச்சை எல்லாம் மக்கள் கேட்கவேண்டும் என்று.
வகுப்பெடுக்க வந்த சக்தி மேடம் சொல்லுறா தோத்தால் இன்னும் மக்களுக்கை வேலை செய்ய வேணுமாம். வடி வேலு சொன்ன மாதிரி இதைத்தானேடா இவ்வளவு காலமும் சொன்னம். மக்களுக்கை வேலை செய்யுங்கோ என்று. அப்ப இன்னும் மக்களுக்கை வேலை செய்யாம பாராழுமன்ற அரசியலை எதிர்த்த ஒரு தலைவனின் ஊரில போய் விளக்குக் கொழுத்தி ஒப்பாரி வச்சா சனம் வாக்குப் போடுமே? சும்மா முசுப்பாத்திக்குக் கேக்கிறன், ஆயுதப் போராட்டதை பிரபாகரன் நடத்தியதே றப்பர் தோட்ட முதலாளியை பாராளுமன்றம அனுப்பத்தானோ? றப்பர் தோட்ட முதலாளி, யாரை அடிமைகளாக மலேசியாவில் வைத்து வேலை வாங்குகிறாரோ அதே மக்களை இலங்கையிலிருந்து நாடுகடத்தின கட்சிட தலைவர் புலம் பெயர்ந்த மக்கள் ஏதோ புலன் பெயர்ந்தவை என்ற கணக்கில், தங்களிடம் வளங்கள் இல்லாத காரணத்தாலை மக்களுக்கை இறங்கி வேலை செய்யேல்லையாம். அள்ளித் தரட்டாம்.
அப்துல் கலாம் சாகும் போது மரணச்சடங்கிற்கு பேரூந்தில வந்தார்அண்ணன். கடைசி வரைக்கும் சட்டசபைக்குள் நுழையாமல் பெரியார் சாதியத்துக்கு எதிராக சாகும் வரைக்கும் உழைத்தார். மக்கள் மீதும், அவர்களது உரிமை மீதும் றப்பர் தோட்ட முதலாளிக்கு அக்கறை இருந்தால் தன்வீட்டு வளங்களில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும் உங்கள் பணியை. புலம் பெயர் மக்கள் என்ன கேணயங்களா எரும்மாடு இங்கிலாந்து ராணியை மீற் பண்ணப் போகுது என்றதை நம்புவதற்கு.
அட வல்வெட்டித்துறையிலை கூட்டம் போட்டியள் சரி, பருத்தித் துறையிலை பஞ்சாப் பறந்தியள் சரி. முல்லைத் தீவில கூட அலுவலகம் திறந்தியள் ஓகே. அட லண்டன் அம்மன் கோயிலிலை பனர் கட்டி ஆதரவு கேக்கிறியளே அப்ப ஊரில இருக்கிறவன்/வள் எல்லாம் என்ன மாங்காய் மடையரே. அம்மன் கோயிலுக்கும் போனா ஆர் என்ன சாதி, ஆற்றை கழுத்தில ஐம்பதை பவுண் நகை தொங்குது, தேர் எப்ப வரும். காட்டு மிராண்டியள் போல உரண்டியளா பிரண்டியளா எண்டு இருக்கிறதை விட்டிட்டு ஊரில இருக்கிறவைக்கு அட்வைஸ்.
நீங்கள் அரங்கேற்றமும், ஊரைக் கூட்டி சாமத்தியவீடும் பிறந்தநாளும் கொண்டாடும் போது அங்கை அவர்கள் அனுதினமும் ஓடி ஒளித்து குண்டடிபட்டு, குஞ்சு குருக்கானை இழந்து வாழ வழியில்லாமல் தத்தளித்த மக்கள். அவர்களுக்குத தெரியும் யார் வியாபாரிகள். யார முகவர்கள். யார காட்டிக் கொடுத்தவர்கள், யார் உசுப்பேத்திவிட்டு நோர்வேக்கு ஓடியவர்கள். யார் பசிலோடு ஒப்பந்தம் போட்டவர்கள், யார் சரண்டையச் சொன்னவர்கள். யார் ரெலிபோனை அணைத்துவிட்டு பசிலோடு பாட்டி வைத்தவர்கள் என்று.
17 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல். பிழையான அரசியலை பிழையான நடைமுறையைத் தேர்ந்தெடுத்த தமிழினம் கொடுத்த விலை எமது சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் அளப்பெரியது. உலகில் எந்தப் போராட்டம் வரலாற்றில் பின்னோக்கிச் சென்று அரசர்களையும் , அறியாமையையும் , அலங்கோலங்களையும் அரசியலாக்கி, மக்கள் மயப்படுத்தல் என்ற உன்னத கோட்பாட்டிலிருந்து திசை மாறி மக்களைப் போட்டுத் தள்ளுதல் என்ற கோட்பாட்டின் மேலாதிக்கத்தால் நாசமாய் போனது? நாம் உருவாக்கிய எதிரிகளைப் பட்டியல் இட்டால் சீனா இலங்கையிலிருந்து ரஸ்யா ஊடாக தென்அமெரிக்க நாடுகளுக்கு போட இருந்த றோட்டை விட நீளமாய் போகும்.
கடவுள் தான் காப்பாற்ற வேணும் என்று ஒரு, கையால் ஆகாத தலைவர். தமிழீழம் என்று சொன்ன போது எப்படி வரும் என்று கேட்காத மந்தைக் கூட்ட அரசியலுக்குள் மூழ்கி ரத்தப் பொட்டு வைத்து எதிர் கட்சிகளின் கூட்டத்தில் கல்லெறிந்து உணர்ச்சி ஊட்டி சோழனையும் பண்டார வன்னியனையும் துணைக்கழைத்து 77 ல் நாம் நடத்திய கூத்தின் விளைவை ஆயுதப் போராட்டமாய் அறுவடை செய்தோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
இரண்டு தேசம் ஒரு நாடு. ஆறாவது திருத்தத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று உறுதிப் படுத்திக் கொண்டே தான் வேட்பு மனுவில் கையெழுத்திட வேண்டும். பாராளுமன்றில் பதவிப் பிரமாணமும் அவ்வாறே. அப்படி என்றால், எங்கள் உரிமையை மறுக்கிற ஆறாவதை நீக்குவதற்கான போராட்டத்தை முன்னெடுத்து உங்கள் பாசையில் சர்வதேசத்தைக் கூட்டிவந்து அதை நீக்கி விட்டல்லவா தேர்தலில் நிற்பதற்கு முடிவெடுத்திருக்க வேண்டும். ஒருபக்கம் சத்தியம் செய்யிறியள் ஆறாவது திருத்தத்தை ஏற்றுக் கொள்கிறோம்என்று. இன்னொரு பக்கம் விஞ்ஞாபனத்தில சொல்லுறியள் ஆறாவதுக்கு எதிராவை எண்டு. விலாங்கு மீன் தான் தலை வால் காட்டும் எண்டு சொல்லுவாங்கள். இவங்கள் யமனை பச்சடி போட்ட ஆக்களாக் கிடக்கு. புலம் பெயந்த ஆக்களுக்கு ஒரு தலை, பசிலாக்களுக்கு ஒரு தலை, தமிழ் மக்களுக்கு ஒரு தலை, விஞ்ஞாபனத்தில ஒரு வால், விளக்கு கொழுத்தேக்குள்ள ஒரு வால், ஜனாதிபதி தேர்தலில பஸ்கரிப்புக் கோரி ஒரு வால், மாகாணசபைத் தேர்தலில ஒரு வால், மாணவர்களை விட்டிட்டு ஓடேக்கை ஒரு வால் எண்டு ஏகப் பட்ட வாலும் ஏகப்பட்ட தலையும். இதில ஏகபிரதிநி என்று சொன்னவருக்கே வாலாட்டிறாங்கள் எண்டா டீல் கொஞ்சம் பலமானது போலத்தான் தெரியுது.
மக்களே வாக்குப் போடுவது உங்கள் உரிமை. யாருக்குப்போடுவது என்பதும் உங்கள் உரிமை. இங்கிலாந்துக்கு எதிராக போராடிய ஐஆர்ஏ இன் கட்சியான சின்பெயின் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு போவதில்லை. வெல்வார்கள். ஆனால் பாராளுமன்றம் போவதிலை. அது தங்கள் பாராளுமன்றம் இல்லை என்று. குறைந்தது கஜேந்திரன் வென்றால் பாராளுமன்றுக்குப் போகாமல் பதவி இழப்பாரா? அட நாயா பேயா அலைஞ்சு வாக்குத் திரட்டிறது பதவி இளக்கவே? பசிலோட போட்ட ஒப்பந்தத்திற்கு யார் பதில் சொல்லிறது?
மக்களே, அண்மையில் டிபி ஜெயராஜ் என்பவர் இலங்கை டெயிலி மிரர் பத்திரிகைக்கு எழுதின கட்டுரை ஒன்று படித்தேன். அவர் முடிவில் இப்படிச் சொல்கிறார். ” செல்வநாயகம், கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் சொல்கிறேன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை வெற்றி பெற வைத்தீர்களானால், தமிழர்களை கடவுளாலும் காப்பாத்த முடியாது” என்று. வாக்குப் போடும் போது இம்முறையாவது போலிக் கூத்துக்கு மேடை கட்டாதையுங்கோ. பிறகு அம்மாளாச்சி முன்னணியிடம் இருந்து எங்களைக் காப்பாத்து என்று கதறி அழுதாலும், பாலும் பருப்பும் குடுத்தாலும் , ஆடு வெட்டி பூசை செய்தாலும் அம்மாவாணை உங்களைக் காப்பாத்த ஆரும் வரமாட்டாங்கள். அவங்கள் ஓடுறதுக்கு ரெடியா இருப்பாங்கள் எண்றதை ஒரு கணம் யோசிச்சுப் போட்டுப் போடுங்கோ. இல்லை அவங்களைத் தான் தெரிவு செய்யப் போறியள் எண்டா, ஆபத்து வரும்போது என்னை யார் எண்டு கேட்பாங்கள் .யார் எண்டு சொல்லிடாதையுங்கோ. அடியும் கட்டாயம் விழும் அப்பவும் சொல்லிடாதையுங்கோ. பத்மினி குதிரை என்று கேட்டு அடிப்பாங்கள். காட்டிக் குடுக்காதையுங்கோ. காட்டிக் குடுக்கிறதெண்டா நீங்கள் லண்டனுக்கும் நோர்வே நாட்டுக்கும் போக வேண்டி வரும்.
ஈழமாறனின் கருத்து இனியொருவின் கருத்துக்கள் அல்ல