பாராளுமன்ற அரசியல் வழிமுறை என்பது மக்களுக்கானதல்ல. உலகத்தின் எல்லா நாடுகளிலும் தோற்றுப் போன தேர்தல் அரசியல் மாற்றங்களுக்கானதல்ல. இலங்கையின் இன்றைய அழிவைத் துரிதப்படுத்தியதற்கு அங்கு ஒட்டவைக்கப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் ஜனநாயகமும் ஒரு காரணம். பாராளுமன்றத்தின் ஊடாக அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளில் மனோ கணேசனும் ஒருவர்.
இலங்கைப் பேரினவாத அரசின் ஒரு அங்கமாகச் செயற்பட்டாலும், மக்களை உருவேற்றி அதன் அழிவின் சாம்பலில் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளில் மனோ கணேசன் ஒருவரல்ல.
ஆவா குழுவினர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டவில்லை என்றும் அந்த நடவடிக்கைகளில் தனது பங்கும் குறித்து மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவ்வேளையில் ஆவா குழுவின் சூத்திரதாரி முன்னை நாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்ச என்று அரசாங்கத்தின் பிரதான அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆவா குழுவின் உறுப்பினர்கள் பிணையில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளின் பின்னணியில் மனோ கணேசன் செயற்படிருக்கலாம், எது எவ்வாறாயினும், அரசாங்க அமைச்சர் தெளிவாகத் தகவல் தெரிவித்த போதும் ‘நல்லாட்சி’ அரசு கோத்தாபய மீது எந்த நடவடிக்கையிம் மேற்கொள்ளாமையின் காரணம் என்ன?
ஆவாக் குழுவில் ஆர்வம்கொண்ட மனோ கணேசன் இது தொடர்பான தகவல்களையும், கோத்தாபய கைது செய்யப்படாமையின் காரணத்தையும் மற்றொரு அறிக்கையில் மக்கள் மத்தியில் முன்வைக்கத் தயாரா?
மனோ கணேசனின் அறிக்கை:
ஆவா குழு உறுப்பினர்கள் என சமீபத்தில் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சார்ந்த இளைஞர்களின் விவகாரம், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து அகற்றப்பட்டு, சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டு, கைப்பற்றப்பட்ட வாகனங்களும் மீளளிக்கப்பட்டு, இது தொடர்பில் கடந்த வாரம் என்னை சந்தித்து உருக்கமாக வேண்டுகோள் விடுத்த சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் அளித்திருந்த உறுதிமொழி நிறைவேறியுள்ளது.
சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழேயே வைக்கப்பட்டிருப்பார்களாயின் இவர்களது எதிர்காலம் ஒரேயடியாக பாழாகியிருக்கும். இவர்களின் இளம் வயது விபரங்களை அறிந்த பிறகே நான் இந்த விவகாரத்தில் தலையிட்டேன். அத்துடன் மீண்டும் பயங்கரவாத சட்டம் பயன்படுத்தப்பட்டு எவரும் இந்த நாட்டிள்கைது செய்யப்பட கூடாது என்பபது எனது கொள்கை நிலைப்பாடாகும். இதன் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று கொள்கை நிலைப்பாட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன்.
ஆனால், இந்த வழக்குகள் முடியவில்லை என்பதை சந்தேக நபர்களும், யாழ் மக்களும் அறிந்துக்கொள்ள வேண்டும். குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். குற்றங்கள் நிரூபிக்கப்படுமானால், இவர்களுக்கு குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. விரைவில் இந்த வழக்குகளை யாழ்ப்பாண நீதிமன்றங்களுக்கு மாற்றி தருகிறேன். அதன்பிறகு இந்த வழக்குகள் யாழ் நீதிமன்றங்களுக்கு வரும்போது, உரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டு இவர்கள் சமூகத்தில் உள்வாங்கப்படவேண்டும். அதுதொடர்பில் யாழ் மாவட்ட நீதிமன்றங்கள் முறைப்படி கவனத்தில் எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. யாழ் மக்களுக்கு தொல்லை தரும் வண்ணம், மீண்டும் வடக்கில் ஆவா குழு நடவடிக்கைகள் தலை தூக்குமானால், எந்தவித தயக்கமும் இல்லாமல் மிக கடுமையான போலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் இங்கே கூறி வைக்க விரும்புகிறேன்.