2009 க்கு பின்னர் பல மாவீரர் நாள்கள், பெரிய நினைவஞ்சலிகள் இறந்தவர்களுக்காக வைக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த முன்னாள்போராளிகளுக்கு குறிப்பாக பாதி உடற் திறனை இழந்தவர்களுக்கு காத்திரமான உதவிகள் வழங்கப்படவில்லை,
வடமாகாண சபையால் முள்ளந்தண்டு பாதிக்கப்படோருக்கு என்று தொடங்கப்பட்ட இல்லம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
ஒத்துக்கப்பட்ட அரச நிதிகளை வடமாகாணசபை ஊழல்வாதிகள் முற்றாக விழுங்கியதை தவிர எந்தவித உருப்படியான காரியமும் நடைபெறவில்லை.
வெளிநாட்டிலிலுள்ள புலம்பெயர்ந்தோர் தங்கள் விடுமுறை வருகையில், குடும்ப விழாக்கள் நடத்தும்போதும் தெளிக்கும் சில பேனை கொப்பி சைக்கிள் கோழிக்கூடு கோழிக்குஞ்சுகள் தவிர இதுவரை எவரும் குறித்த நலிவுக்குழுவின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பியதாக தெரியவில்லை.
துயிலுமில்லங்களை துப்பரவு செய்வதும் வெளிநாடுகளில் அதன் மாதிரிகளை அமைத்து அங்கு 30,000 மக்களுடன் லண்டன் அதிர்ந்து என்று பெருமைப்படுவோர், இனவிடுதலைக்கு போராடி உடலில் போராட்ட வடுக்களை சுமந்து, வாழும் எச்சங்களாக இன்றும் அல்லலுறுவோரை ஏன் பாதுகாக்க தயங்குகிறீர்கள் என்று புரியவில்லை.
தென்னிந்திய சினிமாவில் முதலிடவும் நடிகர்சங்க கட்டடத்துக்கு பெருநிதிக்கொடை வழங்கவும் வலுவுள்ள, ஐக்கிய ராச்சிய பணக்காரர்களில் ஒருவராக பெயரடுத்த லைக்கா முதலாளி போன்றோர் தாங்கள் வருமானவரிகளிலிருந்து விலக்குப்பெற தாயின்பெயரில் சங்கம் வைத்து வாகனங்களில் வலம்வந்ததைத்தவிர என்ன செய்தார்கள் என்று இன்றுவரை புரியவேயில்லை.
தமிழின் பெயரில் சங்கம் நடத்தும் பிரித்தானியாவில் இருக்கும் பாதிரியாரின் சங்கமும் முன்னாள் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வேலைத்திட்டங்களை செய்துமுடித்த சங்கங்களும் தம்முள் அதிகாரப்போட்டியிடுவதை தவிர என்ன பங்களிப்புச்செய்கின்றன என்பதும் தெரியவில்லை.
விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு நிதிதிரட்டல் மையமாக தொழிப்பட்டு இன்றும் இயங்குகின்ற TCC
என்ன பங்களிப்பு செய்கிறார்கள் என்று விளங்கவில்லை.
நல்லாட்சியில் நாங்கள் தெரிவுசெய்த TNA தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சா அறிமுகத்துக்கு விற்பனைக்கும் ஏகபோக தொழிலதிபராக மாறியதும் பிரதமர் ஜனாதிபதி போன்றோரே பெயர் சொல்லி சுட்டிகாட்டுமளவு அவரே எங்கள் இனத்தை வேரறுப்பதும் சகிக்கமுடியவில்லை.
வெளிநாடு சென்ற 90 வீதமானோர் போராட்டத்தை அல்லது புலிகளில் அங்கம்வகித்தோம் அல்லது புலிகளால் உயிர் அச்சுறுத்தல் என்றே அடைக்கலம் பெற்றது பெறுவது ஒரு பொதுப்படை.
ஆனால் அவர்களுக்கு பொருளாதார நல்வாழ்வளித்த குறித்த கூட்டத்துக்கு சிறிதளவாயினும் உதவிபுரியாமை மிகவும் வருந்தத்தக்கது,
உண்மையை கூறின் உங்களில் எத்தனைபேர் உயர்கல்வித்தகமையினால் வெளிநாடு சென்றீர்கள் உங்களை அண்ணா அக்கா கணவன் மனைவி அங்கு அழைத்திருப்பினும் உங்களை அழைத்தோர் எப்படி அங்கு சென்றனர்?
உலகத்தில் தமிழன் என்று தொட்டதுக்கெல்லாம் புகழும் நீங்கள் உங்கள் சொந்த இனவிடுதலைக்காக போரிட்டு வருந்தும் குறித்தோரை கைவிடுவது நியாயமா?
குடும்பமே எங்கள் இனத்தின் பண்பு, அங்கு பிழைகள் நிகழின் அதனை சுட்டிக்காட்டி எங்களின் பிழைகளை நாம் திருத்துதல் நன்று.
இறுதியாக உங்களிடம் ஒன்றை வேண்டிக்கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்,
பல அந்நிய நிதி நிறுவனங்கள் எங்கள் மண்ணில் படையெடுத்து சுரண்டிச் செல்கிறார்கள் அதனால் கடந்த இறுதிப்பகுதியில் இரு தற்கொலையும் வவுனியாவில் நடந்தது,
வெளிநாட்டிலுள்ள நீங்கள், ஏன் ஆகக்குறைந்தது ஒரு கடன் நிறுவனம் அல்லது ஒரு தவணை முறை சார்ந்த நிறுவகங்களை திட்டடங்களை அமூல்படுத்த விரும்பவில்லை?
தனிநபராக செய்யவிரும்பாவிடில் கூட்டு நிறுவனமாக ஆரம்பியுங்கள் அதற்குரிய காப்புறுதிகளை செய்து இங்கு வாருங்கள்,உங்களுக்கு இது வியாபாரமாகவும் எங்களுக்கு அது பொருளாதார ஊக்கியாகவும் இருக்குமே சிந்தியுங்கள்.
பயனாளிகளை அல்லது சேவை பெறுவோரை சமூகத்துணையுடன் அதிகாரிகளின் துணையோடு பரீட்ச்சார்த்தமாக தெரிவுசெய்யுங்கள்.
இலவசமாக எங்களுக்கு வேண்டாம்,
நீண்டகால கடனாக வட்டியில்லாமல் அல்லது குறைந்த வட்டியுடன் பொருத்தமான முயற்சியை நீங்களே தெரிவு செய்து தாருங்கள், நிச்சயம் நாங்கள் முன்னேறி உங்களது கடன்களை நன்றியோடு திருப்பித்தருவோம்.
தயவுசெய்து சிங்கள அரசை சாட்டு சொல்லாதீர்கள் நீங்கள் வர்த்தக நிறுவனத்தை அல்லது மனிதநேய உதவிகளை வழங்கும்போது குறித்த சட்டதிட்டங்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
இது UN முகவரகங்கள் மற்றும் ஏனைய தொண்டுநிறுவனங்களுக்கும் பொருந்தும் அவர்களும் இலங்கை சட்டங்களூடு தான் உதவிகளை செய்கிறார்கள்.
நீங்கள் உதவிக்கு வரும் அமைப்பாக வந்தால் இப்போது வரிசலுகைகள் 2% வரை குறைப்பட்டுவிட்டது முதலீட்டுச்சபை பல சலுகைகளையும் வழங்குகிறது தயவு செய்து வாருங்கள் உதவுங்கள் உங்களை நாம் காலம்காலமாக மறக்கமாட்டோம்.
வெளிப்படையாகவே கூறுகிறேன் நீங்கள் இன்று விடுமுறையில் வந்தால் நந்தவனம் செல்லவேண்டிய தேவையில்லை முன்னர் போல மாதத்துக்கு ஒருமுறை அல்லது வருடத்தில் என்று வெளிநாடுகளில் பங்களிப்பு நிதி வழங்கவேண்டிய நிலை இல்லை.
ஒளிவீச்சு மற்றும் ஏனைய படைப்புக்களை நிதி செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்கள் அறவே இல்லை, ஆயுதத்துக்கு என போராட்ட பங்களிப்பு என்று நிதிகளை வழங்க தேவை ஒன்று இன்றில்லை,
இறுதித்தடவை ஒரே ஒரு முறை மனமிரங்கி உங்கள் இரக்ககுணத்தை இந்த வலுவிழந்த சமூகத்தில் காட்டுங்கள் அவர்களும் அவர்களது பிள்ளைகளும் வாழும் இறுதிக்காலம் வரை நன்றியோடிருப்பர், நீங்கள் உதவப்போகும் ஒரே ஒரு தமிழ்த் தலைமுறை இது மட்டுமே.
ஒருவரை ஒருவர் எதிரெதிராக கைகாட்டி அவர் செய்யட்டும் என்று தப்பிக்காதீர்கள். இந்த ஒருமுறை காத்திரமான உயர்ந்த உதவிகளை வெளிப்படை கணக்குப்பேணல்கள் நிதிக் கையாளுகை நியமங்களுடன் அமுல்படுத்தி உதவி செய்யுங்கள். உங்களில் பலரும், உங்களது பிள்ளைகள் பலரும் துறைசார் வல்லுனர்களாக இருக்கிறீர்கள்.
நான் உங்களின் இனத்தவன், நீங்கள் என் குடும்ப அங்கத்தவர்கள், உங்களோடு சண்டையிடவும், அன்பை பரிமாறவும், பிழையை சுட்டிக்காட்டிடவும் எனது பிழைகளை தேவைகளை உங்களுக்கு சொல்லவும் உரிமையுண்டு என்ற எண்ணத்தில் உங்கள் முன் அவர்களுக்காக உங்கள் முன் 2017ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிநாட்டில் வாழும் உங்கள் வீடுகளின் முன் நின்று கையேந்திக் கேட்க்கிறேன், தயவுசெய்து மனமிரங்குங்கள்.
புலிகளின் முரண்பாட்டு கொள்கையாளரே தயவு செய்து சேறடிக்காதீர்கள், நான் கேட்பது இங்கு நலிவுற்றவருக்கான பிச்சை உங்களோடு கருத்து மோதலை செய்யவில்லை.
இதனை பொறுமையோடு வாசிக்கும் அனைவர்க்கும் உங்கள் பெறுமதியான நேரங்களை செலவிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்.
எதிர்பார்ப்போடு,
சிவகுருபரன்.