இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அரசியலில் ஈடுபடவும் இலங்கையைத் தொடர்ந்து சூறையாடவும் அனுமதிப்பதா இல்லையா என்ற விவாதங்கள் தொடர்கின்றன. வாக்குக்களைப் பொறுக்குவதற்காக மகிந்தவின் ஆதரவு தேவை என்ற கருத்து மைத்திரிபால தரப்பின் ஒரு பகுதியால் முன்வைக்கப்படுகின்றது. சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய குற்றவாளி ஒருவரைப் பகைத்துக்கொள்ளக்கூட விரும்பாத ஒரு கூட்டம் நல்லாட்சி நடத்துவதாகக் கேலிக் கூத்தாடிய நாடகமே இதுவரை அரங்கேறியுள்ளது என்பதற்கு இதைவிடச் சாட்சிகள் தேவையில்லை.
மகிந்தவும் அவரது கொள்ளைக்காரச் சகாக்களும் அனைத்து வழிகளிலும் முயன்று ஆட்சியைக் கையகப்படுத்த முனைகின்றனர். இதற்கு எதிராக உறுதியான முடிவெடுக்கக் கூட இயலாத மைத்திரி-ரனில் கூட்டை எப்படி மக்களின் பாதுகாவலர்களகக் கருதமுடியும் என்ற கேள்வி இலங்கை மக்களிடையே எழுகிறது.
மகிந்த ராஜபக்சவிற்கு வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வழங்கினாலும் அவரது சகாக்களுக்கு வழங்கப்போவதில்லை என்கிறது மைத்திரி தரப்பு. சகாக்கள் இல்லாமல் மகிந்த ஆட்சியமைப்பது சாத்தியமற்றது என்பதால் மகிந்த கட்சியிலிருந்து வெளியேறி வேறு கட்சியில் போட்டியிடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதே மைத்திரியின் கணிப்பு. ஆக, மகிந்த எதிரணியை உருவாக்கிக் கொண்டால், சந்திரிக்கா-ரனில்-மைத்திரி கூட்டைத் தொடரலாம் என்பதே மைத்திரியின் கணிதச் சமன்பாடு.
தமது சொந்த மக்களுக்கு உண்மையைக் கூறி வாக்குக் கேட்கக் கூட நேர்மையற்ற மைத்திரி தரப்பை மக்கள் எப்படி நம்பலாம்/?