உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒத்த வகையில், அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தற்போது, சமஷ்டியா – ஒற்றையாட்சியா என்பது நாடளாவிய ரீதியில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், புதிய அரசியலமைப்பானது குறித்த வார்த்தைப் பிரயோகங்கள் எதனையும் கொண்டிருக்காது எனவும், பகிரப்படுகின்ற அதிகாரங்களை மீளப் பறித்தெடுக்கமுடியாத வகையிலான சட்ட ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டு, எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காத முழுமையான அதிகாரப் பகிர்வாக அமையும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பேரினவாத் ஒடுக்குமுறையும் பௌத்த சிங்கள மேலாதிக்கமும் ஆட்சியதிகாரத்தின் தத்துவார்த்த மேல்கட்டுமானமாக அமைந்துள்ள ஒரு நாட்டில் அதிகாரம் பரவலாக்கப்படுவது என்பது தேசிய இனப் பிரச்சனையின் தீர்வாக அமைய முடியாது. சமஷ்டி அல்லது ஒற்றையாட்சி என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கே பேரினவாதிகளுக்கு அச்சமடையும் இலங்கை அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களின் நம்பிக்கையைப் பெறமுடியாது என்பதைச் சுமந்திரன் அறிந்திருக்காத அளவிற்கு அரசியல் கோமாளியாகிவிட்டார்.
தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமையை மதிப்பதும், அதனை அங்கீகரிப்பதும் மட்டுமே இலங்கையின் இருப்பையும் அதன் இணைவையும் உறுதி செய்யும் என்பதை சிங்கள பௌத்த அதிகாரவர்கமும் அதன் தமிழ்ப் பிரதிநிதி போன்று கருத்து வெளியிடும் சுமந்திரன் போன்றவர்களும் அறிந்திராதவர்கள் அல்ல.
வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
மாதக் கணக்கில் இழுத்தடிக்கப்படும் அரசியல் யாப்பு என்ற ஆவணம் தயாரிப்பதற்கு முன்பதாக முஸ்லீம்கள் தவிர்ந்த வட-கிழக்கு நிர்வாக அமைப்புத் தொடர்பான பரிந்துரையைக் கூட சுமந்திரன் முன்வைக்கவில்லை என்பது அவரின் நியாயப்படுத்தலிலிருந்து தெளிவாகிறது. இணைவிற்கு முஸ்லீம்களின் நம்பிக்கை பெறப்பட வேண்டுமென்றால் கிழக்கைப் பிரிப்பதற்கு தமிழர்களின் நம்பிக்கை பெறப்படவில்லை என்பது தெளிவானது. ஆக, கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் அல்லாத தமிழர்கள் சுமந்திரனால் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதும் வெளிப்படை.
சுமந்திரனின் பேரினவாதம் சார்ந்த அரசியல் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்போகும் விரக்தியும் அச்ச உணர்வும் சுரேஷ் பிரமேச்சந்திரனையும், கஜேந்திரகுமரையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பும் வாக்குகளாக மட்டும் உருமாறும் என்ற கணிப்புத் தவறானது. எதிர்காலத்தில் நம்பிகையிழக்கும் புதிய சமூகம் ஒன்றின் தோற்றத்திற்கும் அது துணை செல்லும். அந்த சமூகத்தைத் தவறாகவும் தமிழ் இனவாதத்தையும் வாக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு வழி நடத்தாமல், புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதே இன்றை அவசரத் தேவை .
சுய நிர்ணைய அடிப்படையிலான அந்த அரசியல் பாராளுமன்ற அரசியலையும், இனவாதத்தையும் நிராகரிக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான புதிய அரசியலாக தோற்றமடைய வேண்டும்.
Tamils of east will never agree to merge with north. They may merge with the south.
Sorry, I am from the East and I am for the merging with the North. Which Easterners you are referring to?
இணைவிற்கு முஸ்லீம்களின் நம்பிக்கை பெறப்பட வேண்டும் என்ற சுமந்திரனின் கருத்து சரியானது. சுமந்திரன் பிழையானவராகவிருக்கலாம் ஆனால் அவரது இந்த கருத்து சரியானது.